ஞானகுரு :
கீரிக்கும் பாம்புக்கும் சண்டை நடக்கப் போகிறது என்று ஆர்வமாக வேடிக்கை பார்ப்பவர்கள் எல்லா காலகட்டத்திலும் ஏமாந்தே போயிருக்கிறார்கள். ஏனென்றால், அந்த வித்தைக்காரனுக்கு பாம்பும் கீரியுமே மூலதனம். இரண்டையும் இழக்கவே மாட்டான்.
அப்படித் தான், தி.மு.க.வுக்கு தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டும் என்ற வெறி இருக்கிறது. பா.ஜ.க.வுக்கு தமிழகத்தில் கால் ஊன்ற வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த இரண்டும் அ.தி.மு.க. அழிப்பு என்ற புள்ளியில் ஒன்று சேர்கிறார்கள். அவ்வளவு தான். அண்ணாமலையும் உதயநிதியும் நாட்டுக்கு சேவை செய்வதற்கு வரவில்லை, அவரவர் கட்சிக்கு வாக்குகளை அதிகரிக்க செயல்படுகிறார்கள்.
எனவே, அரசியலை வேடிக்கை மட்டும் பாருங்கள். நிறம் மாறும் கட்சிகள், தலைவர்களின் குணத்தைக் கண்டு சிரியுங்கள். தேர்தலில் நிற்பவர்களில் குறைந்தபட்சம் தீமை புரியக்கூடிய நபருக்கு ஓட்டுப் போடுங்கள். ஒரு நல்ல குடிமகனாக இவ்வளவு போதும். எந்த கட்சியையும் யாரையும் நம்பினால் ஏமாந்து போவீர்கள். காமராஜர் பாணியில் சொல்வது என்றால், எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
