ஞானகுரு பதில்
கேள்வி : தோற்றுவிடுவேன் என்ற பயம் வந்துகொண்டே இருக்கிறது, இதை எப்படி போக்குவது?
- டி.ராஜேந்திரன், சின்னசேலம்.
ஞானகுரு :
தோற்றுவிடுவேன் என்ற பயம் இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றாலும், மிகப்பெரிய கோடீஸ்வரர் என்றாலும்… எல்லோருக்குமே தோல்வி அச்சம் இருக்கும் என்பதே உண்மை. கிரிக்கெட் பேட்டிங் ஆவரேஜ் 90 ரன்கள் வைத்திருப்பவர் என்றாலும், மைதானத்தில் நுழையும்போது சிறு அச்சம் தோன்றுவது இயற்கை. நன்றாகப் படித்த மாணவர் என்றாலும் கையில் வினாத்தாள் வாங்கும்போது சிறிய பயம் வரும். இந்த அச்சத்தை ஒரு முன் ஜாக்கிரதையாக, பாசிடிவாக எடுத்துக் கொள்பவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.
இந்த அச்சத்தை நெகடிவாக எடுத்துக்கொள்பவர்கள் முயற்சி எடுக்காமலே தோற்றுப் போகிறார்கள். தோல்வி அடைந்தாலும் பரவாயில்லை, புதிய முயற்சி செய்தே ஆகவேண்டும் என்று துணிச்சலுடன் புதிய முயற்சி எடுத்தவர்களே பெரிய வெற்றி பெறுகிறார்கள்.
தோல்வி பற்றிய அச்சம் வருகிறது என்றால், அது ஏன் என்று காரணத்தை ஆராய்ந்து பாருங்கள். கடந்த காலத்தில் பெற்ற தோல்வியின் அச்சம் இன்னமும் மிச்சம் இருக்கிறதா…. மற்றவர்கள் கேலி செய்வார்கள் என்ற அச்சமா, போதிய தகுதி இல்லை என்று கவலையா… என்றெல்லாம் ஆய்வு செய்யுங்கள்.
பெரிய விஷயங்களைச் செய்யாமல் சின்னச்சின்ன இலக்குகளை முதலில் செயல்படுத்துங்கள். தோல்வி கிடைத்தாலும் பெரிய பாதிப்பு இருக்காது. தோல்வியை கற்றுக்கொண்ட பாடமாக எடுத்துக்கொள்ளுங்கள். வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வெற்றிக்கு ஆசைப்படும் ஒவ்வொரு நபரும் தோல்வியை தழுவியே ஆகவேண்டும். தோல்வியைத் தொடாமல் வெற்றி கண்டவர் யாரும் இல்லை என்ற உண்மை புரிந்துவிட்டால், தோல்வியைக் கண்டு அச்சம் வராது. தைரியாக முன்னேறிச் செல்லுங்கள். மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
