சந்தேகத்தை தள்ளி வையுங்கள்..!

இல்லறம் நல்லமாகும்



ஒரு வீட்டில் சந்தேகம் முன்வாசலில் நுழைந்தால், சந்தோஷம் பின்வாசல் வழியே போய்விடும் என்பார்கள். இது குடும்ப உறவுக்கு மட்டுமல்ல… காதல்,  நட்பு, சகோதரத்துவம், தொழில்முறை போன்ற உறவுகளுக்கும் பொருந்தும்.

ஒருவரது செயல் அல்லது பேச்சுக்கு அர்த்தம் விளங்காத நேரத்தில்தான் ஒருவரது மனதுக்குள் சந்தேகம் நுழைகிறது. அந்த சந்தேகத்திற்கு விளக்கம் கேட்காமல் அமைதி காக்கும்போது, சந்தேகம் மிக வேகமாக வளர்கிறது. அதீத பாசம், அக்கறை, எதிர்கால அச்சமும் சந்தேகத்திற்கு காரணமாக அமைவதுண்டு.

வாழ்க்கையில் சந்தோஷம் வரவேண்டுமே தவிர, ஒருக்காலும் சந்தேகம் வரவே கூடாது. அப்படி, சந்தேகம் என்று ஒன்று வந்துவிட்டால் நிம்மதி போய்விடும். மேலும் சந்தேகம் என்பது திரும்பத்திரும்பத் தொடர்ந்துகொண்டே இருக்கும். வேறு எந்த உறவிலும் சந்தேகம் வந்தாலும் பரவாயில்லை, இது கணவன், மனைவி விஷயத்தில் மட்டும் நுழைந்துவிடவே கூடாது.

ஏனென்றால், சந்தேகம் என்பது ஒரு புற்று நோய் போன்றது. ஆரம்பத்திலேயே அதனை நிவர்த்தி செய்யவில்லை என்றால் அது சட்டென்று வளர்ந்து ஆக்கிரமித்து வாழ்க்கையை முழுமையாக நாசம் செய்துவிடும். இதனால் கணவன், மனைவி மட்டுமல்ல… குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள் என்று அனைவருமே பாதிக்கப்படுவார்கள்.

ஒருவர் சந்தேக நோயில் சிக்கியிருக்கிறார் என்பதை கண்டுபிடிப்பது எளிது என்கிறார்கள், மனநல மருத்துவர்கள். ஆம், அவர்கள் கண்கள் எப்போதும் எதையாவது தேடுவது போல சுழன்றுகொண்டே இருக்கும். யார் சொல்வதையும் சுலபத்தில் நம்விட மாட்டார்கள். யாராவது இரண்டு  பேர் தள்ளிநின்று பேசினாலே, தன்னைப் பற்றித்தான் பேசுவதாக நினைப்பார்கள். முகவரி தேடி யார் வந்து கேட்டாலும், நோட்டம் பார்க்க வந்ததாக நினைப்பார்கள். வெளியே போய்விட்டு வந்ததும், வீட்டுக்கு யாரெல்லாம் வந்தார்கள் என்று கேட்பார்கள். குடும்பத்து உறுப்பினர்களின் செல்போனை ஆராய்ச்சி செய்வார்கள். வெளியே சென்றுவர சிறிது தாமதமானாலும் என்னவோ, ஏதோவென்று பதறுவார்கள்.

கணவன் அல்லது மனைவிக்கு சந்தேகம் வந்தால் அதனை தீர்த்துவைக்க வேண்டியது மற்றவரின் கடமை. ஒரு சிலர், ‘என் மீது நிரம்ப பாசம் வைத்திருக்கிறார், அதனால்தான் சந்தேகப்படுகிறார்’ என்று பெருமைப்படுவார்கள். அது தவறு. அவர்களுக்கு இருப்பது பாசம் அல்ல, பயம். அதை தீர்க்கத்தான் வேண்டும்.

சந்தேகத்தை அத்தனை எளிதில் தீர்த்துவிட முடியாது. மீண்டும் மீண்டும் பேசி புரியவைக்க வேண்டும். சந்தேகத்தின் வீரியத்தை பொறுத்து குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் துணையோடு அல்லது முறையாக பயிற்சி பெற்ற மனநல ஆலோசகரின் துணைகொண்டு தீர்ப்பதற்கு முயல வேண்டும்.

இல்லற வாழ்க்கையைப் பொறுத்தவரை  கணவன் – மனைவி இருவரும் மனம் விட்டுப் பேசுவதுதான் நல்ல தீர்வு. எத்தனை பிசியான வேலைகள் இருந்தாலும், கணவன், மனைவி இருவரும் அன்றன்று நடந்ததை கால் மணி நேரம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு வைத்துக்கொண்டால், அங்கு சந்தேகம் நுழைவதற்கு வாய்ப்பே இல்லை.

அதையும் மீறி சந்தேகம் வருகிறதா… திறந்த மனதுடன் கேளுங்கள், நிச்சயம் நல்ல விடை கிடைத்துவிடும்.  

Leave a Comment