அம்மா உணவகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

என்ன செய்தார் சைதை துரைசாமி – 531

அம்மா உணவகத்தின் கிச்சன் தொடங்கி கை கழுவும் இடம் வரையிலும், ஒவ்வொன்றும் எப்படி அமைய வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி திட்டமிட்டு வடிவமைத்தார். அதேநேரம், தரத்தில் எந்த சமரசமும் இல்லை என்பதில் உறுதியாக இருந்தார்.

பெரிய ஹோட்டலுக்குச் செல்லும் நபர்கள் தண்ணீர் பாட்டில் வாங்குவதில்லை. ஏனென்றால், அங்கு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வைக்கப்படுகிறது. அதேபோல், அம்மா உணவகத்திலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினார். அதனால், அங்கு வரும் மக்களுக்கு  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி செய்து தரப்பட்டது.

சுவையான உணவு, சுகாதாரமான சுற்றுச்சூழல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சீருடை அணிந்த பணியாளர்கள் என்று ஒரு ஹைடெக் ஹோட்டல் போலவே அம்மா உணவகம் செயல்படத் தொடங்கியது. முதன்முதலாக 9 இடங்களில் மட்டும் அம்மா உணவகம் செயல்படத் தொடங்கியது. இதன் வெற்றி, வரவேற்பைத் தொடர்ந்து படிப்படியாக ஒவ்வொரு வார்டுகளிலும் தொடங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. மேலும், அதிக மக்கள் கூடும் இடங்களில் எல்லாம் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. இந்த வகையில் சைதை துரைசாமி மேயராக இருந்த காலத்தில் 407 அம்மா உணவகங்கள் செயல்படும் அளவுக்கு இந்த திட்டம் விரிவடைந்தது. இந்த அம்மா உணவகம் மூலம் தினமும் 3.5 லட்சம் முதல் 4 லட்சம் மக்கள் தங்கள் பசியை போக்கிக் கொண்டனர்.

சென்னை மாநகராட்சி அறிக்கைபடி, சென்னையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களில் சுமார்  20 சதவீதத்தினர் அம்மா உணவகம்  மூலம் நேரடியாகப் பலன் அடைந்தனர். எந்தெந்த பகுதியில் அம்மா உணவகம் இருக்கிறது என்பது தெளிவாகத் தெரியும் வகையில் வழிகாட்டிப் பலகைகள் அமைக்கப்பட்டன. அதனால், வெளியூரில் இருந்து, வேறு பகுதியில் இருந்து வருபவர்கள் தேடிச்சென்று சாப்பிடுவதற்கு எளிதாக இருந்தது. எந்த நேரம் சென்றாலும் சுடச்சுட உணவு சாப்பிட முடியும் என்பது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது என்றால், இதற்கு முழு காரணமும் மேயர் சைதை துரைசாமி மட்டும்தான்.

நாளை பார்க்கலாம்.

Leave a Comment