என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 108
சென்னையின் முதல் அ.தி.மு.க. மேயர் என்று சைதை துரைசாமிக்கு வாக்கு கொடுத்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் தீர்க்கதரிசனம் பலித்தது போலவே, புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் தீர்க்கதரிசனமும் அவரது மேயர் காலத்திலேயே நடந்தேறியது.
பெருநகர சென்னை மேயராக சைதை துரைசாமியின் பதவியேற்பு விழாவுக்கு நேரில் வந்து கெளரவித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்வர் ஜெயலலிதா. பதவியேற்பு விழாவை முடித்துக்கொண்டு ஜெயலலிதா கிளம்பும் தருணத்தில், ‘ஆர் யூ ஹேப்பி மிஸ்டர் சைதை?’ என்று புன்னகையுடன் கேட்டார். அதற்கு சைதை துரைசாமி, ‘ரொம்ப மகிழ்ச்சிம்மா… பெரிய மனநிறைவு… அதேநேரத்தில் ஒரு வேண்டுகோள் இருக்கும்மா’’ என்றதும் என்னவென்று கேட்டார்.
உடனே சைதை துரைசாமி, ‘’அம்மா, இந்த மேயர் தேர்தலில் எனக்கு நீங்கள் வாய்ப்பு கொடுத்ததில் இருந்தே நிறைய பேர் பல்வேறு வகையில் இடையூறு கொடுக்கிறார்கள். நான் ஜெயித்து பதவிக்கு வந்த பிறகும் அவர்கள் செயலை நிறுத்த மாட்டார்கள். தொடர்ந்து பொய்யான அவதூறுகளை என் மீது கூறிக்கொண்டே இருப்பார்கள்.
அப்படி என் மீது ஏதேனும் புகார் அல்லது குற்றச்சாட்டு உங்களிடம் வரும்போது, என்னிடம் விளக்கம் கேட்டு, அதன் பிறகு அந்த புகார் மீது நீங்கள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். அப்படியில்லாமல் கூறப்படும் புகாரின் அடிப்படையில் என் மீது வருத்தமாக இருக்கிறீர்கள் என்று தெரியவந்தாலே, அடுத்த நிமிடம் என் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்’’ என்று கூறினார்.
அதற்கு முதல்வர் ஜெயலலிதா, ‘’உங்களைப் பற்றி எனக்குத் தெரியும் மிஸ்டர் சைதை. உங்களுக்கு மட்டும் அந்த நிலைமை வராது. ஐந்தாண்டு காலம் பணிபுரிய வாழ்த்துக்கள்’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
ஜெயலலிதாவின் தீர்க்கதரிசனம் அப்படியே பலித்தது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்ற காரணத்தால் 2011 அக்டோபர் 25ம் தேதி பதவியேற்ற சைதை துரைசாமி 2016 அக்டோபர் 24ம் தேதி வரையிலும் ஐந்தாண்டு பதவி காலத்தை முழுமையாக நிறைவு செய்தார். இந்த வகையில் புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி என இருவரின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் முழுமையாகப் பெற்றவர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.