என்ன செய்தார் சைதை துரைசாமி – 207
சென்னைக்குப் பெருமை சேர்க்கும் மெரினா கடற்கரையில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டார் சைதை துரைசாமி. ஏனென்றால், சைதை துரைசாமியின் காலத்தில் தான் பொதுப்பணித் துறையிடம் இருந்து மாநகராட்சிக்கு கடற்கரை மாற்றப்பட்டிருந்தது. முழுமையான சீரமைப்புக்கு ஆய்வு மேற்கொண்ட நேரத்தில் தான், காமராஜர் சாலையின் இடது புறம் உடைந்து, சிதைந்து பாரம்பரியம் அழிந்து போயிருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
ஏனென்றால் இந்த சாலை வழியாகத்தான் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அத்தனை வி.ஐ.பி.களும் பயணம் செய்கிறார்கள். இவர்களில் ஒருவர் கூட இடது புறம் சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் எப்படி வலது பக்கம் மட்டும் கவனம் செலுத்தினார்கள் என்று ஆச்சர்யம் அடைந்தார்.
சென்னை கடற்கரை அழகைப் பார்க்கும் வெளிநாட்டவர் ஒரு பக்கம் சிதலமடைந்த சுவரையும் மறுப்பக்கம் சிறப்பான கடற்கரையையும் கண்டால் முகம் சுளிக்கவே செய்வார்கள் என்பதால், முதல் நடவடிக்கையாக காமராஜர் சாலையின் இடது பக்கத்தை சீரமைக்கும் பணியில் இறங்கினார். இந்த விஷயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டாம் என்று அதிகாரிகள் தடுத்தார்கள்.
ஆனால், முதலில் இந்த சுவரை பழைமை குறையாமல் அழகுபடுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு முதல்வர் ஜெயலலிதாவிடம் அனுமதி பெற வேண்டும் என்று சொன்னார்கள். உடனே அதற்குரிய திட்டத்துடன் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களை சந்தித்தார். அந்த சாலையை அழகுபடுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தது மட்டுமின்றி, அதற்காக 33 கோடி ரூபாய் நிதியும் பெற்று வந்தார்.
இது நடக்கவே செய்யாது என்று நினைத்த அதிகாரிகள் மேயர் சைதை துரைசாமியின் தீவிர நடவடிக்கையைப் பார்த்து ஆச்சர்யமானார்கள்.
- நாளை பார்க்கலாம்.