கடற்கரையில் ஒரே மாதிரி கடைகள் அமைக்கும் திட்டம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 214

கடற்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கடைகளை மாற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது என்றாலும் மேயர் சைதை துரைசாமி தன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தார். அவரது திட்டப்படி கடை நடத்துபவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். எம்.ஜி.ஆர். சமாதி, சீரணி அரங்கம், காந்தி சிலை, கலங்கரை விளக்கம் ஆகிய நான்கு இடங்களில் மட்டும் அவர்களுக்கு கடைகள் வழங்கப்படும்.

அதேநேரம், கடற்கரை மணலில் கடைகள் வைக்கக்கூடாது. கடல் மணற்பரப்பு தாண்டியே கடைகள் அமைக்கப்படும். அந்தக் கடைகளும் தற்காலிகக் கடைகளாகவே இருக்கும். ஒவ்வொரு வருடமும் கம்யூட்டர் மூலம் ஏலம் நடத்தி கடைகள் கொடுக்கப்படும். அதோடு ஒரு நபருக்கு ஒரு கடை மட்டுமே வழங்கப்படும் என்று பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவரத் திட்டமிட்டார்.

தற்காலிகக் கடைகள் என்றாலும், அவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் திகழ வேண்டும் என்று மேயர் சைதை துரைசாமி வலியுறுத்தினார். மேலும் கடற்கரை பகுதியில் இருக்கும் அத்தனை கடைகளும் ஒரே அளவிலும் ஒரே மாடலிலும் அமைக்க விரும்பினார். ஆகவே, கடற்கரையில் கடைகள் அமைப்பதற்கு 15க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்களிடம் மேயர் சைதை துரைசாமியே நேரடியாக ஆலோசனை நடத்தி வடிவமைப்புகளைப் பெற்றார்.

கடைகள் ஏலம் எடுக்கும் நபரே, கடையைச் சுற்றியிருக்கும் பகுதியின் சுத்தத்திற்கும் சுகாதாரத்திற்கும் பொறுப்பேற்க வேண்டும் என்பது நிபந்தனையாக விதிக்கப்பட்டது. கடையைச் சுற்றியிருக்கும் பகுதியில் குப்பைகளை தனியே சேகரித்து தனியிடத்தில் பாதுகாத்து மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரம் நீதிமன்றத்துக்குப் போய்விட்டதால் உடனடியாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற முடியாமல் நிலுவையானது.  

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment