நாய் பந்தயம்
இன்று உலகம் முழுவதும் விலங்குகள், பூச்சியினங்கள், பறவைகளைக் கொண்டு பந்தயங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று நாய் பந்தயம். பொதுவாக, மனிதர்களின் நன்றியுள்ள விலங்காக நாய் பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட நாயைக் கொண்டுதான் உலகின் பல்வேறு நாடுகளில் பந்தயம் நடத்தப்படுகிறது. அதாவது, நம்மூரில் இரண்டு நாய்கள் சாதாரணமாக சண்டையிட்டுக் கொள்வதையே, அவர்கள் ஒரு போட்டியாக நடத்தி பரிசு வழங்குகின்றனர்.
ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளில் ஆண்டுதோறும் நடக்கும் நாய் பந்தயத்திற்காக, நாய்கள் வாங்கப்பட்டு சிறப்புப் பயிற்சியளிக்கப்படுகிறது. அதற்காக இறைச்சி சார்ந்த உணவுகளும் கொடுக்கப்படுகிறது. பந்தய நாள் அன்று, ஒரு வட்டத்திற்குள் இரண்டு நாய்களை நிறுத்தி, சண்டையிடச் செய்கின்றனர். அதில் ஒரு நாய், மற்றொரு நாயைக் கடித்து கொல்லும்வரை அல்லது ஒரு நாய் மற்றொரு நாயைப் பார்த்து பயந்து, வட்டத்தைவிட்டு ஓடும்வரை இந்த பந்தயம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
இதில் வெற்றிபெறும் நாய்க்கு, பரிசு அளிக்கப்படுகிறது. தோற்றுப்போகும் நாயை, அதன் உரிமையாளர் துப்பாகியால் சுட்டுக் கொன்றுவிடுகிறார். இதை, ஒரு வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். தோற்றுப்போகும் நாய்கள் கொல்லப்படும் காரணத்தினாலேயே இந்த விளையாட்டுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்துதான் அங்கு நாய் பந்தயத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் இன்றும் நாய் பந்தயம் நடத்தப்பட்டு வருகிறது.
ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நாய் பந்தயம் இப்படி நடத்தப்படுகிறது என்றால், அமெரிக்காவின் அலாஸ்காவில் ஆண்டுதோறும் ஸ்லெட்ஜ் டாக் ரேஸ் வேறு மாதிரி நடத்தப்படுகிறது. அங்குள்ள பனி படர்ந்த சாலையில் நடக்குமிந்த பந்தயத்தில் நாய்கள் கூட்டாகக் கட்டப்பட்டிருக்கும். அதனை ஒருவர் இயக்குவார். அடர்ந்த காடுகள் வழியே நடக்கும் இந்தப் போட்டி தூரமானது 1,600 கிலோ மீட்டர் கொண்டதாகும். பனிபடர்ந்த ஆங்கரேஜ் நகரத்தில் இருந்து தங்கள் நாய்களுடன் புறப்படும் போட்டியாளர்கள், இறுதி இலக்கான நோம் நகரத்தை எட்டு அல்லது ஒன்பது நாள்களில் அடைவார்கள். பத்து நாட்கள்கூட ஆகலாம்.
இந்த பயணப் பாதையில் மலைக் கணவாய்கள்; பனிக்கட்டி இடுக்குகள்; தூந்திரப் பகுதிகள்; அகலமான, உறைந்த ஆற்று நெடுஞ்சாலைகள்; கரடுமுரடான கடல் பனிக்கட்டிகள் ஆகியவற்றைக் கடந்து பிரயாணம் செய்யவேண்டியது மட்டுமல்லாமல், பூஜ்ய டிகிரிக்குக் கீழான குளிர்நிலையையும் சகிக்கவேண்டியிருக்கும். இந்த போட்டியில் கலந்துகொள்ள பல்வேறு நாடுகளிலிருந்தும் போட்டியாளர்கள் வருகின்றனர்.
ஓர் அணியில் இருக்கும் நாய்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தாற்போல், வழிநடத்தும் நாயானது இயக்குபவரிடமிருந்து 15 முதல் 20 மீட்டர் தூரத்தில் இருக்கும். இந்த நிலையில் இரவு நேரம், உறைபனி, வளைவு போன்ற காரணங்களினால் வழிநடத்தும் நாய், இயக்குபவரின் கண்ணுக்குத் தென்படாமல் இருக்கலாம். ஆதலால், இயக்குபவரின் உதவியின்றி, அந்தத் தடத்தைச் சரியாக மோப்பம் பிடித்துச் செல்லும் வழிகாட்டி நாய்களுக்கு பொறுப்பு கூடுதலாக இருக்கும்.
ஒரு நல்ல தடத்தில் அணி ஒன்று தவ்வுநடை போட்டால் மணிக்கு 18 கிலோ மீட்டர் வேகத்திலும், ஓடினால் 30 கிலோமீட்டர் வேகத்திலும் செல்ல முடியும் என்கின்றனர், இதன் பயிற்சியாளர்கள். குறிப்பாக, நாளொன்றுக்கு 160 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து செல்ல முடியும் என்கின்றனர். இதில் முழுப் பலத்தையும் கூட்டி தங்களோடு கட்டப்பட்டிருக்கும் ஒரு ட்ரக்கையும் இழுத்துச் செல்ல சில நாய்கள் ஆர்வம் நிறைந்தவையாய் இருக்கின்றன என்கின்றனர், அவர்கள். அதற்காக, நாயை இயக்குபவர்கள் தங்களுடைய நாய்களின் நலத்தையும் நல்லவிதமாகவே பேணுகின்றனர். நிறுத்தங்களில், நாய்களுக்கு உணவு தயாரித்தல், பாதுகாப்புக்கு வைக்கோலைப் பரப்புதல், காலணிகளைச் சரிபார்த்தல், மருத்துவம் பார்த்தல் என அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர்.
இதில் வெற்றிபெறும் அணிக்கு 50 ஆயிரம் டாலர் பரிசு வழங்கப்படுகிறது. இந்தப் பந்தயம் நோம் நகரில் 1908ம் ஆண்டுமுதல் நடத்தப்பட்டு வருகிறது. ஒருகாலத்தில் பொருட்களை இழுத்துச் செல்வதற்கு நாய்கள் பயன்படுத்தப்பட்டன. அதையேதான் இன்று பந்தயமாக வைத்து விளையாடி வருகின்றனர். இழுப்பதற்குப் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களே, பனிச்சறுக்கு வண்டியிழுக்கும் நாய்களாக இருக்கமுடியும். ஆனால் பனிச்சறுக்கு வண்டியிழுப்பதற்காக அலாஸ்கன் மேலம்யூட், சைபீரியன் ஹஸ்கி, அலாஸ்கன் ஹஸ்கி (அ) கிராம (அ) இண்டியன் ஆகிய நாய் இனங்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த போட்டியில் கலந்துகொள்ளும் நாய்களுக்கு போதை மருந்துகள் அளிக்கப்படுவதாக சர்ச்சைகள் எழுந்ததை அடுத்து பல விளம்பரதாரர்கள் இந்த போட்டியிலிருந்து விலகினர்.
இந்த போட்டியில் இதுவரை 150 நாய்கள் இறந்துபோனதாக பீட்டா அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. 2018ம் ஆண்டு நார்வேவின் உல்சோம் என்பவர், 9 நாட்கள் மற்றும் 12 மணி நேரம் பயணித்து இலக்கை அடைந்து பரிசு வென்றார். இந்த நாய்களை பராமரிக்கும், பயிற்சி அளிக்கும் சீவே குடும்பத்தினர்தான் வழக்கமாக இந்த போட்டியில் வெல்வார்கள். ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளில் அந்த குடும்பத்தைச் சாராத ஒருவர் பரிசை முதன்முறையாக வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற போட்டியில் நார்வே வீரர் தாமஸ் வார்னர் முன்னிலை பெற்றார். கொரோனா காரணமாக, விரைவாகவே இந்தப் போட்டி நிறைவு செய்யப்பட்டது. இதேபோல் கத்தாரிலும் நாய்களுக்கு குறிப்பிட்ட தூரம் வரை ஓட்டப் பந்தயம் வைக்கப்படுகிறது. போட்டி நடக்கும் இடத்தில் பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள் நிறுத்திவைக்கப்பட்டு நம்பர் போடப்படுகிறது. பின்னர், அவைகள் களத்தில் ஓட வைக்கப்படுகின்றன. அதில் முதலிடம் பிடிக்கும் நாய்க்கு பரிசு வழங்கப்படுகிறது.