- இனி ஓடவும் முடியாது ஒதுங்கவும் முடியாது
கடந்த 2014, 2019, 2024 ஆகிய மக்களவை தேர்தல்களில் வெற்றி பெற்று நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டது பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதேநேரம், மைனாரிட்டி அரசு என்பதால் இனி நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி அடிக்க முடியாது என்பது பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியின் அமைச்சரவையில் மொத்தம் 72 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மத்திய அமைச்சர்கள் 31, இணை அமைச்சர்கள் 5 (Ind Charge), 36 இணை அமைச்சர்கள் அடங்குவர். இவர்கள் 24 மாநிலங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் வகையில் அமைந்துள்ளனர். பாஜகவினருக்கு 61 அமைச்சர் பதவிகளும் கூட்டணி கட்சிகளுக்கு 11 அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேடையில், பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான், நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் என்ற வரிசையில் அமர்ந்திருந்தனர். இதே வரிசைப்படி பதவியும் ஏற்பு நடைபெற்றது. பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிதின் கட்கரி, ஜெ.பி.நட்டா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் இந்தி மொழியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்ஷங்கர் ஆங்கிலத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
பாஜக கூட்டணியைச் சேர்ந்த சிராக் பஸ்வான், ராஜீவ் ரஞ்சன் சிங், ஜித்தன் ராம் மஞ்சி, ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 36 வயதான ராம்மோகன் நாயுடு கிஞ்சராபு தான் மோடி 3.0 அமைச்சரவையின் மிகவும் இளம் அமைச்சர். ராம்மோகன் நாயுடு தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான எர்ரான் நாயுடுவின் மகன்.
கேரளாவில் இருந்து முதன் முறையாக பாஜக சார்பில் திருச்சூரில் வெற்றி பெற்ற நடிகர் சுரேஷ் கோபி மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் பதவி வேண்டாம் என்று இப்போதும் கூறி வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த அண்ணாமலை அமைச்சராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், டாக்டர் எல்.முருகன் மீண்டும் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில் எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார். வெளிநாட்டுத் தலைவர்களுடன் குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் தனது மனைவியுடன் அமர்ந்திருந்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் ஆகியோர் விழாவுக்கு வந்திருந்தனர்.
பிரதமரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் தொழிலதிபர் அம்பானி, நடிகர் ஷாருக் கான் அருகருகே அமர்ந்திருந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் உடன் கலந்துகொண்டார். தமிழகத்தில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சரத்குமார் ஆகியோர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த கொண்டாட்டத்திற்கு இடையில் பிரதமர் மோடியின் ஆட்சி அத்தனை சுலபமாக இருக்காது என்கிறார்கள். ஏனென்றால் 2014ல் பாஜகவுக்கு 282 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 44 இடங்களும் மட்டுமே கிடைத்தது. அதனால், பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை. அடுத்த 2019ல் பாஜக : 303 காங் : 55. அப்போதும் பிரதான எதிர்கட்சி கிடையாது.
கடந்த 10 வருடங்களில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி தலைவரே இல்லாமல் பாராளுமன்றத்தில் இஷ்டம் போல் ஆடியது. எந்த அளவுக்கு என்றால் சுதந்திர இந்தியாவில் 144 எம்.பி.க்களை தகுதி நீக்கம் செய்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் சட்டங்களை நிறைவேற்றியது. துணை சபாநாயகர் இல்லாமல் 5 ஆண்டுகள் கடத்தியது என்று தன் விருப்பத்திற்கு ஆட்சி செய்தார்கள் ஆனால் இப்போது 2024 ல் பாஜகவுக்கு 240 காங்கிரஸ் : 100. எனவே மைனாரிட்டி அரசு என்பதால் நினைத்தது போல் சட்டம் இயற்ற இயலாது.
சோனியா காந்தி எதிர்கட்சி தலைவராக கேபினட் அமைச்சருக்கு உரிய அந்தஸ்து அவருக்கு வழங்கப்பட வேண்டும். எதிர்கட்சித் தலைவர் மனு கொடுத்தால் பிரதமரே நேரடியாக பாராளுமன்றம் வந்து பதிலளிக்க வேண்டும், பாராளுமன்ற கூட்டம் நடக்கும் போது ஊர் சுற்ற முடியாது. ஓடி ஒளிய முடியாது. கேள்வி நேரம் எனப்படும் பூஜ்ய அவரில் பாராளுமன்றத்தில் இருந்தாக வேண்டும். தாக்குப்பிடிப்பாரா மோடி?