என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 120
மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட கண் மருத்துவ முகாம் மூலம் ஏராளமான ஏழைகள் பயன் அடைந்தனர். இதை அடுத்து எழைகளுக்கு அதிக செலவு வைக்கும் மற்ற சில நோய்களையும் முன்கூட்டியே கண்டறியும் வகையில் முகாம் நடத்துவதற்கு பல்வேறு தனியார் மருத்துவமனைகளிடம் சைதை துரைசாமி நேரடியாக கோரிக்கை வைத்தார்.
அதனால் மாநகராட்சி சார்பில் முதன் முதலாக இதய நோய் பரிசோதனை, எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை, பல் நோய், காது மூக்கு தொண்டை போன்ற சிறப்பு மருத்துவர்கள் முகாம் நடத்தினார்கள். பரிசோதனைக்குத் தேவையான இயந்திரங்களையும் முகாமிற்குக் கொண்டுவந்து பரிசோதனை மேற்கொள்வதற்கு சைதை துரைசாமி நடவடிக்கை எடுத்தார்.
நீரிழிவு, ரத்தப் பரிசோதனை, இதய மின் வரைபடம், எக்கோ வரைபடம், கருப்பை வாய் மற்றும் மார்பக புற்று நோய் பரிசோதனை, தைராய்டு மற்றும் கொழுப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பரிசோதனையில் குறை அல்லது நோய் கண்டறியப்பட்டவர்களுக்கு அடுத்தகட்ட சிகிச்சைகள் இலவசமாகச் செய்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டது.
குடிசையில் வசிக்கும் ஏழை மக்கள் மட்டுமின்றி நடுத்தர வருவாய் உள்ளவர்கள், அம்மா உணவக ஊழியர்கள், சத்துணவு மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள், வியாபாரிகள், உழைப்பாளிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த முகாம்களால் பயன் அடைந்தனர்.
மருத்துவ முகாம் நடத்திவந்த அதேநேரம் மாநகராட்சியின் அனைத்து மருத்துவமனைகளையும் தரம் உயர்த்தும் நடவடிக்கையிலும் இறங்கினார். மருத்துவமனையில் சிசிடிவி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்து, அனைத்து நேரத்திலும் மக்களுக்கு சரியான சிகிச்சை கிடைக்கிறதா என்பதை கண்காணிக்கும் நடவடிக்கை எடுத்தார். அனைத்து மருத்துவமனைகளுக்கும் தரமான வெப்பமானி கருவிகள், ரத்த அழுத்தக் கருவிகள் வாங்கிக்கொடுத்தார்.
தேசிய நகர்ப்புற சுகாதாரத்திட்ட வழிகாட்டுதல்படி, சென்னை மாநகராட்சி பகுதிகளில் மருத்துவ வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 50,000 மக்கள் தொகைக்கு ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் என திட்டமிடப்பட்டு 40 புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுத்து அனைவரது பாராட்டையும் பெற்றார் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.