பிரார்த்தனை என்பது ஏமாற்றும் செயல்

Image

ஆறுதல் சொல் அல்லது அமைதியாக இரு

’’பள்ளி பேருந்து விபத்தில் படுகாயமடைந்த 20 பள்ளிக் குழந்தைகளும் நலமடைய வேண்டும் என்று மாலையில் பொது பிரார்த்தனை நடக்கிறது குருஜி, நான் கிளம்புகிறேன்’ என்று விடை கேட்டார் மகேந்திரன்.

‘எனக்கும் சேர்த்து மறந்துவிடாமல் பிரார்த்தனை செய்’ என்று ஞானகுரு சிரித்ததும், சரியென்று கிளம்பியவர், அந்த பதிலில் ஏதோ சூட்சுமம் ஒளிந்திருப்பதை அறிந்து அப்படியே நின்றவர், ‘கிண்டல் செய்கிறீர்களா..? எம்.ஜி.ஆர். நோயில் விழுந்த நேரத்தில் தமிழகமெங்கும் மக்கள் செய்த பிரார்த்தனைதான் அவரை காப்பாற்றியது, அதை மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டார் மகேந்திரன்.

‘’நிஜமாகவா… எம்.ஜி.ஆர். இப்போது என்ன செய்துகொண்டு இருக்கிறார்..?’’

’’அது, பிரார்த்தனைன்னா ஒரு தடவை காப்பாத்தும், அப்புறம்….’’ மேற்கொண்டு பதில் சொல்லமுடியாமல் தடுமாறினார்.

‘’கடவுளிடம் பிச்சை கேட்காதே, அவர் போடவே மாட்டார்’’

‘’புரியலையே குருஜி…’’

‘’நீ எப்போது பிரார்த்தனை செய்கிறாய்..? உன்னால் தீர்க்கமுடியாத ஒரு பிரச்னை, சிக்கல், துன்பம் வரும்போது பிரார்த்தனை செய்கிறாய். எப்போதாவது அடுத்தவர்களுக்கான துன்பம், நாட்டுக்கான துன்பத்துக்காகவும் பிரார்த்தனை செய்கிறாய்.

கிறிஸ்தவ மதத்தில் பிரார்த்தனை செய்வது மட்டும்தான் அவர்களுடைய வழிபாடாகவே இருக்கிறது. ’தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்று ஏசுபிரானின் சொற்படி, தினமும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

இந்த பிரார்த்தனை என்பது என்னவென்று ஆழ்ந்து கவனித்தால், இது இறைவனிடம் உதவி கேட்பதுதான். இன்னும் தெளிவாக சொல்வது என்றால், துன்பத்தை நீக்கும்படி கெஞ்சிக் கேட்பது.

எதுவுமே கேட்காமல், எதையும் தேடாமல், எதையும் விரும்பாமல் சும்மா பிரார்த்தனை செய்யும் மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால், பிரார்த்தனையின் பலன் என்னவென்று யோசித்துப் பார்த்திருக்கிறாயா..?

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்கிறாய் என்றால், பிரார்த்தனை முடிந்தபிறகு, அந்த பிரச்னையை யாரும் கண்டுகொள்வதில்லை. ’பிரச்னையை கடவுளிடம் சொல்லிவிட்டோம், இனி அவர் பார்த்துக்கொள்வார்’ என்று தட்டிக் கழிக்கும் செயல்தான் பிரார்த்தனைக்குப் பிறகு நடக்கிறது. துயரத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு உண்மையில் எதையுமே செய்யாமல், ஆனால் மிகப்பெரிய விஷயம் செய்துவிட்டதுபோன்ற திருப்தியில் திளைக்கிறார்கள்..’’

‘’எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட, இப்படி பிரார்த்தனை செய்வது நல்லதுதானே..?’’

‘’பசியென்று வருபவனுக்கு எதையும் கொடுக்காமல், கொடுப்பது போன்ற பாவனையே போதும் என்கிறாய். அது எப்படி சரியாக இருக்கும்…? என்ன பிரச்னை, யாருக்கு துன்பம், இதற்கு ஏதேனும் வகையில் உதவ முடியுமா என்று ஆழ்ந்து யோசிப்பதும், அதற்கான முயற்சியில் இறங்குவதும்தான் பிரார்த்தனையை விட உயர்வானது.

உன்னுடைய கையில் இருக்கும் துன்பச்சுமையை, கடவுளின் முதுகில் ஏற்றி வைப்பதால் மட்டும் எதுவும் சரியாகிவிடாது. உன் சுமையை நீதான் சுமக்க வேண்டும். பிறர் துன்பத்துக்காக மனதார வருத்தப்பட்டாலும், அவர்களுக்கு உன்னால் எந்த பயனும் கிடையாது. முடிந்தால் உதவு. பொருளாக, பணமாக உதவவில்லை என்றாலும் நேரம் ஒதுக்கி ஆறுதல் சொல் அல்லது அமைதியாக இரு’’ என்றார் ஞானகுரு.

உண்மை முகத்தில் அறைந்தாலும், ஏற்றுக்கொள்ள முடியாமல் தவித்தார் மகேந்திரன்.

Leave a Comment