ஞானகுரு பதில்
கேள்வி : மனிதர்களின் எந்த தவறு உடனே நிறுத்தப்பட வேண்டும்..?
- சி.ஷைலஜா, சென்னை.
ஞானகுரு :
உலகம் முழுக்க உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பகுதி உணவு வேஸ்ட்டாக குப்பைக்குப் போகிறது என்று சமீபத்தில் ஐ.நா. சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேநேரம், 53 நாடுகளில் பசி, பட்டினி அதிகரித்து வருவதாக எச்சரிக்கை செய்கிறது.
ஆனால் நம் நாட்டில் கல்யாணம், வரவேற்பு, கோயில் திருவிழா போன்ற தருணங்களில் எக்கச்சக்க உணவு வீணடிக்கப்படுகிறது. இலையில் வைக்கப்படும் பாதிக்கும் மேலான உணவை சாப்பிடாமல் குப்பையில் போடுகிறார்கள். உணவு என்பது பணத்தின் இன்னொரு வடிவம். ஒருவர் உணவை வீணாகவில்லை என்றால் வேறு யாராவது ஒருவரின் பசி நீங்கியிருக்கும். அதனால் உணவை வீணாக்கும் தவறை மனிதர்கள் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும்.
அதேபோல் கோயில்களில் அபிஷேகம் என்ற பெயரில் பால், நெய், தயிர், பழங்களை ஊற்றி வீணாக்குவதை நிறுத்த வேண்டும். ஹோமம் என்ற பெயரில் தீ வளர்த்து நெய் உள்ளிட்ட பொருட்கள் எரிப்பதைத் தடுக்க வேண்டும். பாம்பு புற்றுக்குப் பால் ஊற்றுவதைப் போன்ற முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை.
இவை எல்லாவற்றையும் விட நடிகர், நடிகைகளின் கட் அவுட் மீது பால் ஊற்றி வீணாக்குகிறார்கள். உணவுப் பொருட்களை வீணடிப்பது விவசாயிகளின் உழைப்பை அவமானப்படுத்தும் செயல். ப்ளீஸ் இதை மட்டும் செய்யாதீங்க. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
