என்ன செய்தார் சைதை துரைசாமி – 292
குப்பை மேலாண்மை என்பது ஒரே நாளில் தீர்த்துவிடக்கூடிய பிரச்னை இல்லை என்பது மேயர் சைதை துரைசாமிக்கு மிகவும் நன்றாகத் தெரியும். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் குப்பைத் தொட்டிகளில் பிரச்னை உண்டாகும். கட்டிடக் கழிவுகள், மெத்தைகளைக் கொண்டுவந்து போட்டு திடீரென வேறு யாரும் குப்பையைப் போட முடியாத அளவுக்குச் சிலர் சிக்கலை ஏற்படுத்திவிடுவார்கள். மழைக் காலங்களில் குப்பைத் தொட்டிக்கு அருகே செல்வதற்கு அருவருப்பு அடைந்து, தூரத்தில் இருந்தே வீசுவார்கள்.
எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் அதற்கேற்ப தீர்வுகள் காண வேண்டும் என்பதற்காகவே பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். அதன்படி ப வடிவ குப்பைத் தொட்டி அமைப்பு உருவாக்கப்பட்டது. குப்பைத் தொட்டியை பிளாஸ்டிக் வேலி கொண்டு மறைக்கும் திட்டத்தை பல்வேறு இடங்களில் பரிசோதனை முயற்சியாக மேயர் சைதை துரைசாமி மேற்கொண்டார்.
குப்பைத் தொட்டியை சுற்றிலும் பிளாஸ்டிக் வேலி அமைக்கப்படுவதால், குப்பைகள் சிதறிக் கடப்பது கண்களுக்குத் தெரியாமல் மறைக்கப்படும். அதோடு, அந்த குப்பைகள் ரோட்டுக்கு வரும் அவலமும் தடுத்து நிறுத்தப்படும். இதற்காக சென்னை மாநகரம் முழுவதும் பிரத்யேக இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருந்தது. குறிப்பாக குப்பைத் தொட்டிகளுக்கு அருகே குடியிருந்தவர்களுக்கு பெரிய நிம்மதி ஏற்பட்டது. குப்பையினால் ஏற்படும் அசெளகரியங்களில் இருந்து விடுதலை பெற்றார்கள்.
அதேநேரம், குப்பை மேலாண்மையைக் கடைப்பிடிக்கும் துப்புறவு ஊழியர்கள் மற்றும் குப்பை வாகன ஊழியர்கள் கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதனால் குப்பைகளைக் கையாள்வதற்கு சிரமப்பட்டு அதிருப்தி தெரிவித்தார்கள். குப்பையைக் கையாள்வதற்குக் கூடுதல் நேரம் தேவைப்படும் என்றும் அதிக குப்பைகள் தேங்கும் தருணத்தில் கையாள்வது சிரமம் என்றும் சுணக்கம் காட்டினார்கள். அவர்களுடைய வேண்டுகோளுக்கும் மதிப்பளித்து, வேறு வழியினில் குப்பை மேலாண்மைக்குத் திட்டமிடத் தொடங்கினார் மேயர் சைதை துரைசாமி.
- நாளை பார்க்கலாம்.