• Home
  • யாக்கை
  • மூலிகை வளர்க்கலாம்… நோயை விரட்டலாம்!

மூலிகை வளர்க்கலாம்… நோயை விரட்டலாம்!

Image

வீட்டுக்கு முன்னே அல்லது பின்னே  கொஞ்சம் இடம் இருக்கிறதா?  அழகுக்காக பூக்கள் அல்லது காய் செடிகள் வளர்ப்பதை விட, மூலிகைகளை வளர்த்துப் பாருங்கள்.  சின்னச்சின்ன நோய்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

துளசி:

இது சளி, இருமலை துரத்துவதுடன் குடல் சம்பந்தமான நோய்களையும் குணப்படுத்தும். வாய் துர்நாற்றம் போக்குவதுடன் ஜீரண சக்தி தரும். ஒரு மில்லி துளசி இலைச்சாறுடன், தலா 5 மில்லி தேன், வெந்நீர் கலந்து காலை, மாலை என தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதயநோய்கூட சாந்தப்படும்.

செம்பருத்தி:

 இது இதய நோயை குணப்படுத்துவதுடன் வராமல் தடுக்கும் வல்லமை படைத்தது. இதில் நாட்டு செம்பருத்தி தான் நல்லது. ஐந்து இதழ்களைக்கொண்ட செம்பருத்திதான் சிறந்தது. வெறுமனே செம்பருத்திப்பூ இதழ்களை மென்று தின்னலாம். அல்லது கஷாயம் போட்டு அதன் சாறை மட்டும் அருந்தலாம். செம்பருத்தி இலைகளை தலையில் அரைத்து பூசினால் பொடுகுத்தொல்லை நீங்குவதுடன் முடி செழித்து வளரும். பூ இதழை நல்லெண்ணெய்யில் காய்ச்சி தடவினால் முடி கருகருவென்று வளரும்.

கற்பூரவள்ளி:

 இது சளிக்கு மிகவும் நல்லது. இலையை பறித்து நீரில் அலசி வெறுமனே சாப்பிடலாம். அல்லது மாலை நேரங்களில் பஜ்ஜி மாவில் தோய்த்து பஜ்ஜியாக சாப்பிடலாம். மழைக்காலங்களில் அவ்வப்போது சாப்பிட்டு வந்தால் வந்த சளியை துரத்துவதுடன் சளி வராமலும் தடுக்கும். ஒரு தேக்கரண்டி இலைச்சாறுடன் அதே அளவு தேன் கலந்து குழந்தைகளுக்கு உள்ளுக்கு கொடுத்தால் மார்பில் கட்டிய கோழை வெளியாகும்.

ஆடாதொடை:

 இதுவும் சளி, இருமலுக்கு நல்ல மருந்தாகும். வயிற்றுப்பூச்சி கொல்லியாகவும் இது செயல்படும். ஆடாதொடை இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அருந்தினால் நுரையீரலில் சளி கட்டுவதால் ஏற்படும் மூச்சுத்திணறல் விலகும்.

கல்யாணமுருங்கை:

 இதன் இலைச்சாறு 30 மில்லி அளவு எடுத்துக்கொண்டு  தொடர்ந்து 10 நாட்கள் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய்க்கு முன், பின் வரக்கூடிய வயிற்றுவலியை குணப்படுத்தும். இதன் பூ பெண்ணின் கரு பைகளில் உள்ள கசடுகளை நீக்கும் தன்மை படைத்தது.

மருதோன்றி:

 மருதாணி என்று அழைக்கப்படும் இதன் இலையை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து பச்சை நிறம் மாறாமல் காய்ச்சி தலையில் தடவி வந்தால் முடி செழித்து வளரும். மருதாணிப்பூவை பெண்கள் தலையில் சூடினால் இரவில் நிம்மதியான உறக்கம் வரும்.

தூதுவேளை:

 தூதுவளை என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் இதன் இலைகளை துவையல் செய்து சாப்பிட்டால் இருமல், சளி குணமாகும். மேலும் செரிமானத்தன்மை அதிகரிக்கும். தூதுவளை பூ 10 எண்ணிக்கை எடுத்து பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் உடலில் பலம் ஏறும். முகம் வசீகரம் பெறும்.

மணத்தக்காளி:

 இதன் பசுமையான இலைகளை தேவையான அளவு நெய்யில் வதக்கி துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும். துவையலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குறைபாடு சரியாகும். இதன் இலையை குடிநீராக்கி மிளகு, சீரகம், தக்காளி, உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

வாதநாராயணன்:

 இதன் இலையை சாம்பாராகவோ அல்லது வேகவைத்து கடைந்தோ வாரம் இரண்டு நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாதநோய்கள் குணமாகும். இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி அடிபட்ட இடத்தில் கட்டினால் குணமாகும்.

சோற்றுக்கற்றாழை:

 இதன் தோலை நீக்கி உள்ளே இருக்கும் ஜெல்லை கசப்புத்தன்மை போகும் அளவு நீரில் நன்றாகக் கழுவி உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் ஆறுவதுடன் உடல் சூடு குறையும், உலர்ந்த சருமம் மிருதுவாகும். வெயிலில் அலைவதால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யும்.

பிரண்டை:

 இதன் தண்டுப்பகுதிதான் பெரும்பாலும் மருந்தாகிறது. சிறிது சிறிதாக உடைத்து அதனுடன் மிளகாய் வற்றல், வெள்ளைப்பூண்டு, புளி சேர்த்து நல்லெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி சூடு ஆறியதும் உப்பு சேர்த்து மையாக அரைத்து துவையல் செய்து சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும். அத்துடன் உடலுக்கு பலம் சேர்க்கும். செரிமானத்தன்மையை அதிகரிக்கச்செய்யும்.

வல்லாரை:

 இதன் இலைகளை வதக்கி துவையலாகவோ, பொறியலாகவோ சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

இந்த மூலிகைச்செடிகளில் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை, சோற்றுக்கற்றாழை, மணத்தக்காளி, தூதுவளை போன்றவற்றை தொட்டிகளில் வளர்க்கலாம். மற்றவற்றை தரையில் வளர்ப்பது நல்லது. இடம் இல்லாதவர்கள் சற்று பெரிய தொட்டிகளில் வளர்த்து அதன் பலனை பெறலாம்.

எம்.ராமசுப்பிரமணியன்

Leave a Comment