நேரம், குறிக்கோள் மற்றும் திட்டமிடுதல்

இந்த மூன்றுதான் வெற்றிக்கான வழி


வாழ்க்கையில் ஒருவர் வெற்றி அடைய வேண்டுமென்றால், அவர் மூன்று கட்டங்களில் தெளிவாக இருத்தல் வேண்டும். முதலில், என்ன செய்ய வேண்டும் என்ற புரிதல் இருக்க வேண்டும். அதாவது இலக்கு எனப்படும் லட்சியம் தெளிவாக இருக்க வேண்டும். அடுத்ததாக, அதனை எப்படி செய்ய வேண்டும் என்ற திட்டமிடல் அவசியம். மூன்றவதாக, அதனை முழு மூச்சுடன் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

இந்த மூன்றையும் திறமையாகக் கையாளும் மனிதர்களே, வெற்றியை நோக்கி நகர முடியும்.  ‘வெற்றியை  உறுதிப்படுத்த  மேலும் ஒரு தடவை முயற்சி செய்து பாருங்கள்’ என்கிறார், தாமஸ் ஆல்வா எடிசன். எளிமையாகக் கிடைக்கும் எதுவும் வெற்றியாக அமையாது. உடலாலும் உள்ளத்தாலும் செய்யும் உண்மையான முயற்சிகளே வெற்றியைச் சுவையுள்ளதாக ஆக்கும்.

ஒருவர் எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதை செம்மையாகவும் திருத்தமாகவும் செய்யும்போது அதையொட்டியே வெற்றியும் கிடைத்துவிடுகிறது. அதனால்தான், வெற்றியின் சூத்திரம் அறிந்தவர்கள் மேலும் மேலும் வெற்றி அடைந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும், வாழ்க்கையில் கிடைப்பதற்கு அரிய செல்வம் நேரம் என்பது.

ஆம், எத்தனை வேலைகள் இருந்தாலும் மிகத் தெளிவாக திட்டமிடும் நபரால், குழப்பமே இல்லாமல் சிறப்பாக செய்துவிட முடியும். அதற்கு நேர மேலாண்மை கற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேரத்தின் அருமை புரிந்திருந்தால் போதும். நம்முடைய நேரம் மட்டுமல்ல, எதிரே இருக்கும் நபருக்கும் நேரம் முக்கியம் என்பதை அறிந்துகொண்டால், அங்கே வெட்டிப் பேச்சுக்கும், வீண் விவாதங்களுக்கும் இடமே இருப்பதில்லை.

வாழ்க்கையில் வெற்றி என்பது ஓர் ஏணி போன்றது. அதில் ஏற வேண்டுமானால், கைகளை நமது பைக்குள் வைத்துக்கொண்டு ஏற முடியாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன் அர்த்தம், வாழ்வில் வரும் பிரச்சினைகள் அல்லது தடைகளைக் கண்டு பயந்து ஓடக்கூடாது என்பதுதான்.  சோதனைகளை எதிர்நீச்சல் போட்டு வெல்வதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது.

வெற்றிக்கு முதலில் தேவை மன உறுதி. உறுதிக்குப் பின் ஒருவனுக்கு இருக்கவேண்டியது தளராத முயற்சி. நல்லது ஒன்றைச் செய்ய நினைத்தால் வருவது தடைதான். முள், கல் இல்லாத பாதையே இல்லை. அவற்றை எல்லாம் வேகத்தடைகளாக எண்ணி கடக்க வேண்டுமே தவிர, மலைத்து நின்றுவிடக் கூடாது. எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தையும், மனபலத்தையும் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

மனம் தளர்ச்சி அடையும்போது, வெற்றிபெற்ற பலரும் எவ்வாறு வெற்றி பெற்றனர் என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். அவர்களுக்கு இருந்த மன உறுதியும் தளராத உழைப்பும்தான் வெற்றிக்குக் காரணம் என்ற உண்மையை அறிய வேண்டும் அது மட்டும் போதாது, அவர்களைப் போன்று நாமும் எத்தனை துன்பம் வந்தாலும் விடாப்பிடியாக வெற்றியை நோக்கி நகர வேண்டும் என்ற உறுதியைப் பெற வேண்டும்.

இத்தனை மனவுறுதி உள்ளவர்களுக்கு வெற்றிப் பயணம் வெகுதூரத்தில் இல்லை.

Leave a Comment