ஒன்று சேரும் அரசியல்வாதிகள்
சீமானுக்கு இப்போது வெளிப்படையாக பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். துக்ளக் மேடையில் சீமானை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் குருமூர்த்தி. ஹெச்.ராஜா, தமிழிசை, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் நேரடியாகப் பாராட்டிவிட்டார்கள். இந்த நிலையில் பெரியார் குறித்த அவதூறு புதியது இல்லை, ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு, அதற்குப் பதிலும் தெரிவிக்கப்பட்டவை என்றே தெரிகிறது.
இந்நிலையில் திருமுருகன் காந்தி, ‘’தந்தை பெரியார் குறித்தான இப்போது சீமானால் பரப்பப்படும் அவதூறு முதன்முதலாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வாட்சப் குழு வழியாகவும், பாஜகவின் குழுக்கள் வழியாகவும் பரப்பப்பட்டன. இதற்கான மறுப்பை பெரியாரிய அமைப்புகள் ஆதாரத்துடன் வெளியிட்ட பின் இந்த அவதூறுகள் அடங்கின. தற்போது இவை சீமான் வடிவில் உயிர்பெறுகின்றன. சீமானால் தரமுடியாத ஆதாரத்தை அண்ணாமலை தருவதாக சொல்கிறார், பின்னர் அவரும் இதுகுறித்து பேசாமல் பதுங்குகிறார்.
சீமானை தங்களது தமிழிசை theme partner என்கிறார். சீமானால் பரப்பப்படும் அவதூறு வடநாட்டான் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்சினால் உருவாக்கப்பட்டது. காந்தியாரை கொலை செய்ததும், ஐயா.காமராசரை வீட்டோடு தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றது ஆர்.எஸ்.எஸ். ஐயா.முத்துராமலிங்கத்தேவரால் படைதிரட்டி கொடுக்கப்பட்ட நேதாஜியின் படைவீரர்களை கொன்றழிக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிதாமகரால் ஆங்கிலேயருக்கு படை திரட்டி கொடுக்கப்பட்டது. ஆர்.எஸ்.எஸ் உருவாக்கி கொடுத்த படையே நேதாஜியின் படையை வடகிழக்கு இந்திய எல்லையில் அழித்தது. ஆக காமராசர், முத்துராமலிங்கதேவர் என இருவரையும் அழித்தொழிக்க முயற்சி செய்த தமிழின விரோத ஆர்.எஸ்.எஸின் அவதூறு பொய்மூட்டைகளை சீமான் சுமக்கிறார் என்றால் அவர் தந்தை பெரியாருக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே எதிரான வட இந்திய பயங்கரவாதிகளோடு கைகோர்க்கிறார் என்பது அம்பலமாகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தம்மை அழைத்துக் கொள்ளும் ‘சங்கி’ எனும் இழிவான வார்த்தைக்கு புது அர்த்தம் கொடுத்து பாராட்டுகிறார். பெரியாரை விமர்சிப்பது போல ஆர்.எஸ்.எஸ் அமைப்பை, சாவர்க்கரை விமர்சித்தவரல்ல சீமான். ஆர்.எஸ்.எஸ் அமைப்போடு கைகோர்க்கும் எந்த நபரும் தமிழ்நாட்டிற்கும், தமிழருக்கும் எதிரிகளே. சீமானின் அவதூற்றின் பொய்பின்னணியை பி.பி.சி வெளியிட்டுள்ளது. பெரியாருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் உருவாக்கிய பொய் படங்கள், மீம்கள், ஆடியோக்களை எடுத்து பரப்புவதிலிருந்தே, ஆர்.எஸ்.எஸ்சின் ஐ.டி விங்கும், நாம்தமிழர் ஐ.டி விங்கும் இணைந்து செயல்படுவது அம்பலமாகிறது.’’ என்று கூறியிருக்கிறார்.