மனிதர்களே மருந்து, மனிதர்களே நோய்

Image

ஆசிரியர் பார்வை

பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் மனிதர்களுக்கு நோய் பரப்புகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். இந்த பட்டியலில் மனிதர்களுக்கும் முக்கிய இடம் இருக்கிறது என்பதுதான் ஆச்சர்யமான உண்மை.

சக மனிதரின் போட்டி மனப்பான்மை, எரிச்சல், கோபம், மிரட்டல், பொறாமை, அபகரிப்பு, ஆதிக்கமனப்பான்மை போன்றவை நிறைய பேருடைய மன நலனையும் உடல் நலனையும் பாதிக்கிறது. அதேபோல், அக்கம்பக்கத்து மனிதர்களின் லைஃப்ஸ்டைலும், சுற்றுச்சூழலும் நிறைய பேருடைய வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது.

அதாவது அக்கம்பக்கத்து வீட்டினர் பார்ட்டி, குடி, கும்மாளம், லேட் நைட் தூக்கம், ஃபாஸ்ட் ஃபுட் உணவு என்று இஷ்டத்துக்கு வாழும் மனிதர்களாக இருக்கலாம். இன்னொரு வகையில் பக்தி என்ற பெயரில் அதிகாலை பூஜை, பட்டினி, விரதம், யாத்திரை மேற்கொள்பவராக இருக்கலாம்.

இப்படிப்பட்ட நபர்களின் வாழ்க்கை சிலருக்கு பெரும் அழுத்தம் உருவாக்கலாம். அதேபோன்று வாழ்வதற்கு ஆசைப்படுவர்களுக்கு இவர்கள் நோயாக மாறிவிடுகிறார்கள்.

அதாவது, இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கையில், நாம் மட்டுமே தேவையின்றி கட்டுப்பாடுகளுடன் வாழ்கிறோம் என்ற சந்தேகம் வந்துவிட்டால் மனம் மட்டுமின்றி உடல் ஆரோக்கியமும் குளறுபடியாகிவிடும்.

இதிலிருந்து தப்பிக்கும் வழி இருக்கிறது. அதாவது, அடுத்தவர் வாழ்க்கையைப் எட்டிப்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. அவர் உடலுக்கும் மனதுக்கும் பிடித்த வகையில் அவர் வாழ்கிறார். எனவே, அவர் என்ன செய்கிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது நம் கவலை இல்லை.

உங்களுக்கு உங்கள் உடல் மனம் முக்கியம். இதனை பாதுகாக்கும் வகையில். உங்களுக்கு என்ன தேவையோ அவற்றை மட்டும் செய்யுங்கள். உங்களைப் பார்க்கும் நபர்களும் அவரவர் வாழ்க்கையை சொந்தமாக வாழ்வதற்கு முன்வர வேண்டும். இப்படி வாழ்ந்தால் அடுத்தவர்களுக்கு நீங்கள் நோயாக இல்லாமல் மருந்தாக இருப்பீர்கள். பிறருக்கு மருந்தாக இருப்பதே உங்களுக்கும் மகிழ்ச்சி மற்றவர்களுக்கும் மகிழ்ச்சி.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment