என்ன செய்தார் சைதை துரைசாமி 260
சென்னையில் நாள் தோறும் பெருகிவரும் வாகன நெரிசலுக்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் மட்டுமே தீர்வு என்பதை மேயர் சைதை துரைசாமி முழுமையாக நம்பினார். ஆகவே, எதிர்ப்புகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பெருநகர சென்னை முழுவதும் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பதற்குத் திட்டமிட்டார்.
தணிகாசலம் தெரு சந்திப்பில் சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான மின்பொருள் சேமிப்புக் கிடங்குகளை மாற்றி, அந்த இடத்தில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் கொண்டுவர முடிவு செய்தார். இந்த இடத்தை தேர்வு செய்ததில் இருந்து, அந்த திட்டம் நிறைவேற்றுவதற்கு முழுமையாக ஈடுபாடு காட்டினார் மேயர் சைதை துரைசாமி.
சென்னை காவல் கூடுதல் ஆணையருடன் இணைந்து சென்னையில் மட்டும் 361 இடங்களில் புதிய வாகன நிறுத்த இடங்கள் அறிவித்து, மன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றினார். இங்கெல்லாம் வடிவமைத்தல், கட்டுதல், பராமரித்தல், ஒப்படைத்தல் அடிப்படையில் அடுக்குமாடி நவீன தானியங்கி வாகன நிறுத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.
தியாகராஜநகரில் உள்ள தெற்கு உஸ்மான் சாலை, சிவஞானம் தெரு, சைதாப்பேட்டை ஜூனிஸ் சாலை, வளசரவாக்கம் பாரதி சாலை, தங்கச்சாலையில் உள்ள பேசின் பாலம் சாலை, கோட்டூர்புரம் டர்ன்புல்ஸ் சாலை விரிவு, அம்பேத்கர் கல்லூரி சாலை ஆகிய இடங்கள் எல்லாம் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்டன. அதேபோன்று வால்டாக்ஸ் சாலையில் மத்திய பண்டக சாலை உள்ள இடத்தில் லாரிகள் நிறுத்தம் அமைப்பதற்கும் இடம் தேர்வு செய்து கொடுத்தார்.
மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த திட்டங்கள் இன்று சென்னைக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதிலிருந்தே அவரது தொலைநோக்குப் பார்வையையும் சேவை மனப்பான்மையையும் புரிந்துகொள்ள முடியும்.
- நாளை பார்க்கலாம்.