அதிகம் பாதுகாப்பது அதிக ஆபத்து..?
ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் உண்மையா என்ற கேள்வி நமக்குத் தேவையில்லை. அதேநேரம், அந்த இதிகாசத்தின் சில காட்சியமைப்புகள் இன்றைய வாழ்வுக்கும் பயனுள்ள வகையில் மிகவும் சுவாரஸ்யமானவை. அவற்றில் ஒன்றை கவனிக்கலாம்.
ஒரு சமயம் கண்ணனை சந்தித்த பாண்டவர்கள், ‘கலியுகம் எப்படியிருக்கும்?’ என்று கேட்டார்கள்.
அதற்கு கண்ணபிரான் தன்னுடைய வில்லில் இருந்து ஐந்து அம்புகளை எய்து, அது விழுந்த இடத்தில் நடக்கும் காட்சியை கண்டுவருமாறு கூறினார். ஆளுக்கொரு பக்கம் சென்று அம்பினை தேடிக் கண்டுபிடித்து, அங்கே கண்ட காட்சியைக் கண்டு அதிர்ச்சியடைந்து, அதை கண்ணனிடம் கூறினார்கள்.
மற்ற நால்வர் கூறியவை என்னவென்பது இந்த கட்டுரைக்குத் தேவையில்லை. அவர்களில் நகுலன் அம்பு கண்டுபிடித்த இடத்தில், ஒரு பசு கன்று ஈனும் தருவாயில் பலமாக கத்திக்கொண்டு இருந்தது. மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்ததும் கன்று ஈன்றது. உடனே பாசத்துடன் அந்த கன்றை நாவால் நக்கி அன்பைக் காட்டியது. கன்று சுத்தமான பின்னரும் விடாமல் தொடர்ந்து நக்கிய வண்ணமே இருந்தது. அந்த கன்றையும் பசுவையும் பிரித்துவிட மக்கள் எடுத்த முயற்சி பயனளிக்கவில்லை. தாயிடமிருந்து தப்பிக்க முடியாமல் கன்றும் தடுமாறியது. சாதுவான பசு ஒன்று ஈன்ற கன்றுக்கு காயம் ஏற்படும் வகையில் நடந்துகொண்டதைக் கண்டு அதிர்ந்தான் நகுலன்.
அவன் கண்டுவந்த காட்சியை கண்ணனிடம் வந்து சொல்லி, அதற்கு விளக்கம் கேட்டான்.
அதற்கு கண்ணன், ‘கலியுகத்தில் பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அளவுக்கு அதிகமாக நேசிப்பார்கள் அதுவே அவர்களின் பிள்ளைகள் நலனுக்குக் கேடாகி, அவர்கள் வாழ்க்கை நாசமாகும். அது அந்த பசுவின் செயலை போலவே இருக்கும்’ என்றார்.
இந்தக் காட்சிக்குக் கொஞ்சமும் மிகையில்லாமலே, இன்றைய பெற்றோர் நடந்துகொள்கிறார்கள். பெரும்பாலோர் ஒற்றைப் பிள்ளை மட்டுமே பெற்றெடுத்து வளர்ப்பதால், அவர்களை பொக்கிஷம் போன்று பாதுகாக்கிறார்கள். அந்த அதீதப் பாசமும், பாதுகாப்பும் பிள்ளைகளின் பெரும்பாலான எதிர்காலத் துயரத்துக்கு காரணமாக அமைகிறது.
சின்ன வயதில் பணத்துக்காகவும், பசிக்காகவும் தாங்கள் அடைந்த வேதனை, கொடுமையை பிள்ளை அனுபவிக்கக்கூடாது என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் எண்ணமாக இருக்கிறது.
பெற்றோர் பட்ட சிரமங்களை எல்லாம் பிள்ளைகள் அனுபவிக்கவேண்டிய அவசியம் இல்லைதான். அதேநேரம், வாழ்க்கையின் இயல்பும், உறவுகளின் நெருக்கமும், பணத்தின் மதிப்பும் தெரியாமல் வளர்ப்பது, பிள்ளைகளுக்குச் செய்யும் பெருந்துரோகம்.
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காக எத்தனை கோடி சேமித்துவைத்தாலும், அதன் மதிப்பை அறியாத பிள்ளைக்கு, அந்த பணமே எதிரியாக மாறிவிடும். பணமில்லாத சூழ்நிலையை எதிர்கொள்ள முடியாது. போராடத் தோன்றாது, வாழ்க்கையின் சவால்களை சந்திக்க முடியாது.
ஒரு குழந்தையைத் திட்டினால் அது உங்களையே திட்டிக் கொள்வதற்கு சமம். நாயே, பேயே, பன்னி, எருமைமாடு, முட்டாள் என்றெல்லாம் திட்டினால், அந்த பிள்ளை அதே வார்த்தைகளால் உங்களையும் ஒரு நாள் திட்டவே செய்யும். ஆகவே, குழந்தையிடம் தவறான வழியில் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம்.
குழந்தையின் பிடிவாதம், உணவுப் பழக்கம், பொழுதுபோக்கு போன்றவற்றை உடனையாக யாராலும் மாற்றிவிட முடியாது. நிறைய நிறைய பொறுமையும் நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே, குழந்தையின் குணத்தை மாற்ற முடியும். அறிவுரை சொன்னவுடன் சட்டென மாறிக்கொள்வதற்கு குழந்தைகள் ஒன்றும் ரோபோ அல்ல. எனவே, குழந்தைகள் மாறுவதற்குக் காலம் ஆகும் என்பதைப் புரிந்துகொண்டு மிகவும் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். உடனே பிள்ளை மாறவேண்டும் என பொறுமை இழந்து குழந்தையை அடித்து அல்லது திட்டி பிரச்னையை சரிசெய்ய நினைப்பது, பிரச்னையை மேலும் அதிகமாக்கிவிடும்.
அதேநேரம், ஒரு குழந்தையை எப்படி பாதுகாத்து வளர்த்தாலும், பெற்றோரின் கவனத்தை மீறி சில குணங்கள் அமைவதைத் தவிர்க்க முடியாதது. மரபணு விளையாட்டுகள் விசித்திரமானவை. பெற்றோர் அன்பாக வளர்த்தாலும், பிள்ளை வன்முறையாளனாக வளர்வதுண்டு. போதையின் சுவை அறியாத பெற்றோரின் பிள்ளைகள் மொடா குடியனாக, பெண் பித்தனாக, சைக்கோ கில்லராக வளர்வதும் உண்டு.
இப்படிப்பட்ட விபரீத குணங்கள் பிள்ளையிடம் இருப்பது தெரியவந்தால், உடனடியாக அவர்களை சரியான திசையில் திசைக்கு திருப்ப வேண்டியதும் பெற்றோர் கடமை. இவனை திருத்தமுடியாது என்று பெற்றோர் கைவிட்டால், அந்த வேலையை சமூகமும், சட்டமும் எடுத்துக்கொள்ள நேரிடும்.
எனவே அளவுக்கு மீறிய செல்லமும், அதீத கண்டிப்பும் பிள்ளைக்கு நல்லதில்லை. குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். அந்த சுதந்திரத்தின் எல்லையைத் தாண்டினால் என்னென்ன பிரச்னைகள் வரும் என்பதை அவர்களே அறிந்து கொள்ளட்டும். சிக்கல்கள், பிரச்னைகள் வரும்போது அவர்களே சமாளிக்கட்டும். அந்த கடின காலகட்டத்தில், குழந்தைகளுக்கு பலமாக மட்டும் இருங்கள். அவர்களாக முயற்சித்து ஜெயிக்கும்போதுதான், தன்னம்பிக்கை பெறுவார்கள். அந்த தன்னம்பிக்கையே அவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்வு தரும்.
பிள்ளைகளை தள்ளிநின்று பாருங்கள். அப்போதுதான், அவர்களுடைய உண்மையான குணமும், வளர்ச்சியும் தெரியும்.