தனிமையில் ஆடலாம் பல்லாங்குழி

Image

சீதை ஆடிய விளையாட்டு..!

மிகத் தொன்மையான தமிழர் விளையாட்டுகளில் ஒன்று பல்லாங்குழி.  கிட்டத்தட்ட 8000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் பல்லாங்குழி பற்றிய குறிப்புகள் பல தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. பண்ணாங்குழி என்று தனித்தமிழில் பாவாணர் அழைக்கும் இந்த விளையாட்டு, இருபாலரும் எந்த நேரத்திலும் ஆடும் இருபொழுதாட்டாகக் குறிக்கப்பட்டுள்ளது. பல்லாங்குழி என்பது பதினான்கு குழி (பெரும்பாலும் 14 குழிவைத்து இவ்விளையாட்டு ஆடப்பெறுவதால்), பரல்+ஆடும்+குழி = பரலாடும் குழி, பண்ணாங்குழி, பள்ளாங்குழி என்றும் பாண்டி விளையாட்டு என்றும் வழங்கப்படுகிறது.

சீதைப் பாண்டி என்பது ஒருவர் மட்டுமே தனித்து ஆடும் பல்லாங்குழி விளையாட்டு ஆகும். இது மிக அரிதாகவே விளையாடப்படுகிறது,  சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்றும் சொல்லப்படுகிறது. இது, இலங்கையிலும் பழங்காலம் முதலே இருக்கிறது. தமிழ்நாட்டின் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி என்ற சொல் இருக்கிறது. இருவர் சேர்ந்து ஆடும் பல்லாங்குழி ஆட்டத்தில் மரம், இரும்பு, வெண்கலத்தாலான பல்லாங்குழிகள் பயன்படுத்தப்படுகிறது. தமிழன் உலோகங்கள், மரக்கருவிகள் கண்டுபிடிப்பதற்குப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மண்ணிலும் பாறையிலும் 14 குழிகளைக் குடைந்து இந்த விளையாட்டை ஆடி இருப்பதற்கான பல தொல்பொருள் புரதானக் குறிப்புகளும் கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன.

சமீபத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில் திருச்சி பக்கத்தில் பாறையில் குடைந்த பல்லாங்குழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது சுமார் 1200 ஆண்டுகள் பழமையுடையது என்கின்றனர் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள். என்றாலும், பல்லாங்குழியின் தோற்றம் பற்றி தெளிவான கருத்து எதையும் விளக்க முடியவில்லை. ஏனென்றால், சூடான், கென்யா, உகாண்டா, தான்சானியா, ரொடிசியா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் இவ்விளையாட்டு உள்ளது. எகிப்து பிரமிடுகளிலும் பல்லாங்குழி செதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ்நாட்டில்தான் இது தோன்றியிருக்க வேண்டும். பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்களில் பரப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

எப்படி விளையாடுவது?

இதில் பதினான்கு குழிகள் இருக்கும். ஆளுக்கு ஏழு குழிகள் என்று பிரித்துக்கொண்டு இருவர் எதிரெதிர் அமர்ந்து ஆட வேண்டும். குழிகள் ஒவ்வொன்றிலும் ஐந்து ஐந்து காய்கள் (புளியங்கொட்டைகள்) இட்டு நிரப்பப்படும். முதலில் ஆடுபவர் ஏதாவதொரு குழியில் உள்ள காய்களை எடுத்துப் பிரித்து விளையாடத் தொடங்குவார். அவ்வாறு பிரித்து விளையாடி வரும்போது குழி வெறுமையாக இருந்தால், அந்தக் குழியைத் துடைத்து அடுத்த குழியிலுள்ள காய்களை எடுத்துக்கொள்வார். இதனைத் துடைத்து எடுத்தல் என்று கூறுவர். பின், அடுத்தவர் ஆடத் தொடங்குவார். அவரவர் பக்கத்தில் ஒரு குழியில் நான்கு இருந்தால் அதையும் ‘பசு’ எனச் சொல்லித் தனதாக்க வேண்டும்.

இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் ஆடிக்கொண்டு வரும்போது காய்கள் அனைத்தும், இருதரப்பிலும் ஆடுபவர்கள் வென்றடுத்தபின் முதல் சுற்று முடிகிறது. இருதரப்பும் தன்னிடம் உள்ள காய்களை அவரவர் பக்கத்து 7 குழிகளில் நிரப்ப வேண்டும். காய்களை இழந்தவர் (காட்டாக 15 காய்கள் குறைவாகக் கிடைத்தன என்றால்) தன்னுடைய பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டுவிட்டு ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார். இப்போது தோற்றவருடைய குழி இழப்புக்கு ஒரு நிரந்தரமின்மை ஏற்படுகிறது. ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப்போகிறபோது அவர் கையில் எஞ்சியிருக்கிற காய்கள் ஒரு குழிக்குரிய ஐந்துகூட இல்லாமல் நான்காக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடர்கிறது. இதற்கு ‘கஞ்சி காய்ச்சுதல்’ என்று பெயர். கஞ்சி என்ற சொல் வறுமையினை உணர்த்தும் குறியீடாகும். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே ஆட்டம் முழுமை பெறுகிறது.

பல்லாங்குழி விளையாட்டில் பசுப்பாண்டி, எதிர்ப்பாண்டி, ராஜாப்பாண்டி, காசிப்பாண்டி, கட்டும்பாண்டி, சீதைப்பாண்டி, சரிப்பாண்டி என்ற வகைகளில் விளையாடப்படுகின்றன. மேலும், அரிப்பாண்டி, முத்துப்பாண்டி தாயிச்சிப்பாண்டி என்று மூன்று வகைகளை குறிப்பிட்டுள்ளனர். இதற்கு கற்கள், புளியமுத்துகள், சோழிகள் ஆடுகருவிகளாகப் பயன்படுகின்றன. பொதுவாக பல்லாங்குழி, பெண்களால் ஆடப்படும் ஆட்டம் என்றாலும், பூப்படைந்த பெண்கள் பூப்பெய்திய நாள் முதல் 16 நாட்களும், கருவுற்ற பெண்களும் ஆட வேண்டும் என்ற மரபு விதி கடைப்பிடிக்கப்படுகிறது. சற்று வித்தியாசமாக, திருநெல்வேலி பகுதியில் ஒரு குறிப்பிட்ட மக்கள் திருமண நாளன்று மாலை, மணமகன் முன்பாக பல்லாங்குழி விளையாட வேண்டும் என்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து முனைவர் சி.செல்லப்பாண்டியன், ‘இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும் பெண்கள் குடும்பத்தின் வரவு செலவுகள், சிக்கனம், சொத்துப் பங்கீடு, சேமிப்பு, பொருளீட்டல் ஆகியவற்றை தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கிறது.  திருமண நாளன்று மாலையில் மனைவி பல்லாங்குழி விளையாடுவதைப் பார்த்து, அப்பெண்ணின் நிர்வாகத் திறமை, முடிவெடுக்கும் திறமை, வீட்டின் நிதிநிலையை சமாளிக்கும் திறன், சிக்கனம், மதி நுட்பம் ஆகியவற்றை புகுந்த வீட்டில் உள்ளோர் நன்கு புரிந்துகொள்ள முடியும்.

இருவர் ஆடும் பல்லாங்குழியில், 7 குழியில் குழிக்கு நான்கு முதல் பனிரெண்டு சோழிகள் கொண்டு ஆட்டத்தை தொடங்குவர். முதல் பெண் ஆடத் தொடங்கும் போது எந்தக் குழியிலிருந்து தொடங்கினால் செல்வம் (வெற்றி) சேர்க்கலாம் என்று கணக்கு போட்டு தொடங்குகிறார். எதிர்காலத்தில் இல்லற வாழ்வில் நுழையப்போகும் பெண் இவ்வாறு கணக்கிட்டு தொடங்குதல் மூலம், தன் குடும்பத்தில் நிதி நிலையை திறம்பட சமாளிக்க இயலும். புகுந்த வீட்டிற்கு அந்தப் பெண் சென்றவுடன், தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு வரும் கணவன் வீட்டு சொத்துக்களை, தான் மட்டும் அனுபவிக்க நினைக்காமல் தன் புகுந்த வீட்டில் உள்ள மற்ற பிள்ளைகளுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என பல்லாங்குழி உணர்த்துகிறது.

வாழ்வில் முதலில் வரும் இழப்புகளை நினைத்து வருந்த வேண்டியதில்லை; தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்க்கையில் பெருஞ்செல்வம் சேர்க்கலாம் என்பதை இவ்விளையாட்டில் தோல்வி எண்ணம் அப்பெண்ணிற்கு உணர்த்துகிறது. சில நேரங்களில் துடைத்த குழிக்கு அடுத்த குழி வெற்றிக் குழியாக இருக்கும்போது எதுவும் கிடைக்காது. வாழ்க்கையில் அவ்வப்போது கஷ்டங்களும் துன்பங்களும் வரும். எனவே தோல்வி ஏற்பட்டால் வருந்தக்கூடாது என்ற படிப்பினையை உளவியல் வழியாக பல்லாங்குழி உணர்த்துகிறது’ என்கிறார்.


 ‘

Leave a Comment