என்ன செய்தார் சைதை துரைசாமி – 504
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம், அவரது வள்ளல் தன்மையில் ஈர்க்கப்பட்டு, அவரது தொண்டனாக ஏழை மக்களுக்கு சேவை செய்வதற்காகவே சைதை துரைசாமி மலிவுவிலை உணவகத்தை சைதாப்பேட்டையில் தொடங்கினார்.
ஏழை மக்கள் ரசித்து சாப்பிடும் வகையில் மிகவும் மலிவான விலையில் ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட்டன. இது, பரபரப்பான செய்தியாக மாறிப்போனது. எனவே, சைதாப்பேட்டை மட்டுமின்றி மற்ற பகுதியில் இருந்தும் உழைப்பாளிகள், மாணவர்கள் தேடிவந்து சாப்பிட்டார்கள்.
தினமும் ஏழை, எளிய மக்களின் ஆதரவுடன் அமோகமாக விற்பனை நடந்தது. குறைந்த விலையில் உணவு கொடுத்தாலும், சைதை துரைசாமிக்கு இந்த உணவகத்தில் மிகப்பெரிய பண இழப்பு ஏற்படவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால், தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் இழப்பீடு ஏற்படும் என்று தெரிந்தே இந்த மலிவுவிலை உணவகத்தைத் தொடங்கியிருந்தார். ஆனால், அவர் எதிர்பார்க்காத அளவுக்கு விற்பனையும் அதன்மூலம் செலவு, சம்பளத்தை ஓரளவுக்கு ஈடுசெய்யும் அளவுக்கு வருமானம் கிடைத்தது.
தனியொரு மனிதனால் இப்படியொரு உணவகம் நடத்த முடியும் என்றால், அரசு மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தில் இருக்கும் அத்தனை ஏழை மக்களுக்கும் உதவ முடியும் என்ற நம்பிக்கையும் சிந்தனையும் சைதை துரைசாமிக்கு வந்தது.
இந்த சூழலில்தான், 2011ம் ஆண்டு பெருநகர சென்னைக்கு அ.தி.மு.க. மேயராகப் பணியாற்றும் வாய்ப்பு வழங்கினார் புரட்சித்தலைவி ஜெயலலிதா. தன் மனதில் இருந்த மலிவு விலை உணவகம் திட்டத்தை தமிழகம் முழுக்க கொண்டுசெல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி அடைந்தார்.
- நாளை பார்க்கலாம்
