• Home
  • அரசியல்
  • பா.ஜ.க.வை மண்டியிட வைத்த எதிர்க்கட்சிகள்.

பா.ஜ.க.வை மண்டியிட வைத்த எதிர்க்கட்சிகள்.

Image

யுபிஎஸ்சி நியமனம் நிறுத்தி வைப்பு

மத்திய அரசு நிர்வாகத்தில் இணை செயலாளர்கள், இயக்குனர்கள்  உள்ளிட்ட பல்வேறு  நிலையிலான 45  அதிகாரிகளை நேரடியாக  நியமனம் செய்வதற்கான விளம்பர அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

இதையடுத்து ராகுல் காந்தி தொடங்கி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.   மத்திய அரசின் உயர்பதவிகளுக்கு தகுதியான ஆட்களை நியமிப்பதற்காக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகளை சீர்குலைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு வெளியிட்டுள்ள  இந்த அறிவிப்பு  கண்டிக்கத்தக்கது என்று நாடு முழுக்க எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசின் உயர்பதவிகளில், பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை  நேரடியாக நியமிக்கும் முறையில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படாது. அதனால், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு இந்த பதவிகள் கிடைக்காத நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி, ஏற்கனவே பல்வேறு நிலையிலான பணிகளில் உள்ள பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த அதிகாரிகளின் பதவி உயர்வு வாய்ப்புகளும் பாதிக்கப்படும்.

இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளின்படி குடிமைப்பணி அதிகாரிகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்  போட்டித் தேர்வுகளின் மூலம் மட்டுமே  தேர்வு செய்ய முடியும். ஆனால், இப்போது மத்திய அரசு அறிவித்துள்ள விளம்பரத்தில் 45  அதிகாரிகளை தேர்வாணையம்  நேர்காணல் மூலம்  தேர்ந்தெடுக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த  முறையில்  செய்யப்படும்  நியமனம்  வெளிப்படையாக இருக்காது. எனவே, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலாளர், இயக்குனர்கள்  உள்ளிட்ட நிலைகளில்  தனியார் நிறுவன அதிகாரிகளை நேரடியாக நியமிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும்.

மத்திய அரசில் நேரடியாக பணியாற்ற மூத்த அதிகாரிகளை நியமிக்கும் முடிவை ரத்து செய்கிறது மத்திய அரசு நியமன நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி யுபிஎஸ்சி தலைவருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மத்திய அரசு முடிவு செய்துவிட்டால் அதில் ஒரு எழுத்து கூட மாற்ற முடியாது என்று பா.ஜ.க. அரசு மார் தட்டிய காலம் இருந்தது. இப்போது எதிர்ப்புகளுக்குப் பயந்து பின்வாங்கும் மைனாரிட்டி அரசாக மாறியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment