தொகுப்பு 1
ஹலோ… ஹலோ!
எங்கள் அலுவலகத்தில் மொபைல் உள்ளே கொண்டு செல்ல அனுமதி கிடையாது. எல்லோரும் லாக்கர் ரூமில் செல்போனை வைத்துவிட்டுச் சென்றுவிட வேண்டும். மதியம் சாப்பாட்டு நேரத்தில் வந்து மிஸ்டு கால் பார்த்து பேசிக் கொள்ளலாம்.
அன்று அப்படித்தான் நான் செல்போன் எடுக்க நுழைந்தபோது, எங்கள் மானேஜர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ஆள் கொஞ்சம் பந்தா பேர்வழி. படா தில்லுதுர. ஸ்பீக்கரில் அவர் பேசியதால், தெளிவாகக் கேட்டது. அவர் மனைவியுடன் பேசுகிறார் என்று தெரிந்தது.
’’என்னங்க..நான் தான்.. ஆபிஸ்லயா இருக்கீங்க..?’’
’’ஆமா… சொல்லும்மா…’’
’’நான் இப்ப ஷாப்பிங் மால் உள்ளே இருக்கேன். நான் சொன்னேனே.. சின்ன கம்மல் இங்க இருக்குங்க… நாற்பதாயிரம்தான் விலை. வாங்கட்டுமா…?’’
நான் இந்த நேரம் வெளியே சென்றுவிட்டால், மனைவியிடம் வாங்க வேண்டாம் என்று சொல்லிவிடுவார் என்று நினைத்து அருகிலேயே நகராமல் இருந்தேன். அவர் அதனால் பந்தா குறையாமல் பேசினார்.
’’வாங்கிக்க…!’’
’’அப்புறம்… நான் கேட்டேனே ஒரு வைர கம்மல்… அதுவும் இங்க இருக்குங்க… விலைதான் ஒண்ணரை லட்சம் சொல்றான்…’’
’’ஒண்ணரை லட்சம்தான… உனக்கு பிடிச்சிருந்தா வாங்கிக்க…!’’
’’ஏங்க… நம்ம வீட்டுக்கு ஒரு சோபா வாங்கணும், பழசு கிழிஞ்சு போச்சு. ஐம்பதாயிரத்துல அற்புதமா இருக்கு…?’’
“இதெல்லாம் கேட்கணுமா… வாங்கிடு… கார்டுல இன்ஸ்டால்மென்ட்ன்னு சொல்லு சரியா?’’
’’ஓ.கேங்க… ஐ லவ் யூ…’’ என்று கொஞ்சலாய்ச் சொல்லிவிட்டு மறுமுனையில் ஃபோனை வைக்கும் சப்தம் கேட்டது. வசமாய் அவரை மாட்டிவிட்ட திருப்தியில் சிரித்தேன்.
மேனேஜரும் ஃபோனைச் சிரித்தபடியே வைத்துவிட்டு, ’’யாரோட மொபைல்டா இது..?’’ என்று கேட்டபடி நகர்ந்தார்.
கவலையில் இருந்து விடுதலை
கம்பெனியின் முதலாளி மற்றவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். ‘’இப்போ பிரச்சினைகள் அதிகமாயிடுச்சு. எல்லாப் பக்கமும் நஷ்டம். பணம் புரட்டவே முடியல. நெனச்சு நெனச்சு பிரஷர் அதிகமாகிட்டே போகுது. டாக்டர்கிட்ட போனா கவலைப்பட்டா இன்னும் உடம்பு மோசமாகிடும்னு சொல்றார்…’’
‘‘அதுக்கு என்ன செய்யப்போற?’’ என்று கேட்டார்.
’’புதுசா ஒருத்தன வேலைக்குச் சேர்த்திருக்கேன். எனக்கு பதிலா கவலைப்படறதுதான் அவன் வேலை. மாசம் ஒரு லட்சம் சம்பளம். அவன் வேலைக்குச் சேர்ந்து நாளையோட ஒரு மாசம் முடியுது…’’
’’ஏற்கனவே லாஸ்னு சொல்றே… இப்போ அவனுக்கு எப்படி ஒரு லட்சம் சம்பளம் கொடுப்ப…?’’ என்று அவர் நண்பர் கேட்டார்.
அதற்கு அந்த முதலாளி, ‘‘அதைப் பத்தி அவன்தான் கவலைப்படணும்” என்றார்.
தமிழன்ன்னா சும்மாவா?
கொஞ்ச நாட்களுக்கு முன்பு காட்டில் ஒரு அநாதையான குட்டி முயலும் அதே போல் அநாதையான குட்டி பாம்பு ஒன்றும் வசித்து வந்தன. விதிவசமாய் இரண்டும் குருடும்கூட. ஒரு நாள் இரை தேடிப் போகும் போது அந்த முயல் தவறி பாம்பின் மீது விழுந்துவிட்டது.
உடனே முயல் பாம்பிடம், ‘‘சாரிண்ணே… மன்னிச்சுக்கஙக. எனக்கு கண்ணு தெரியாது… தெரியாம உஙக மேல விழுந்துட்டேன்…’’
’’அதனால என்ன… பரவாயில்ல. எனக்கும்தான் கண்ணு தெரியாது. ஆமா… நீங்க யாரு? கரடியா, புலியா, சிறுத்தையா..?” என்று கேட்க, முயல், ‘‘எனக்கு அப்பா அம்மா இல்லியா… அதனால நான் யாருன்னு எனக்கே தெரியாது…’’ என்றது.
’’எனக்கும் அப்படித்தான்… ஒண்ணு பண்ணுவமா, நம்ம யாருன்னு நாமளே கண்டுபிடிச்சுக்குவமா..!’’
முயலும் ‘ஓகே..’ சொல்ல பாம்பு முயலின் மேல் ஏறியது.
மெல்ல முயலின் உடலெல்லாம் சுற்றிய பிறகு, ‘‘உன் உடல் மென்மையான பஞ்சு போன்ற முடியால் மூடப்பட்டுள்ளது. காதுகள் நீளமாய் உள்ளது. உருண்டையான மூக்கு. சின்ன வால்… நான் கேள்விப்பட்ட வரை நீ முயல் என்றே நினைக்கிறேன்…’’ என்றது.
’’நன்றி..நன்றி…’’ என்று சந்தோசத்தில் கூவிய முயல் இப்போது பாம்பின் உடலைத் தடவிப் பார்த்துச் சொன்னது.
’’உன் உடல் திடமற்றும் எளிதில் வளைந்து கொடுக்கக் கூடியதாயும் உள்ளது. உன் தோல் வழுவழுவென்றும் எளிதில் நழுவக் கூடியதாயும் உள்ளது. உடலெங்கும் அடி வாங்கிய காயங்கள் உள்ளன. உலகமெங்கும் உன்னை அடித்திருப்பார்கள் போலிருக்கிறது. உனக்கு நாக்கு இரட்டையாய் உள்ளது. முதுகெலும்பே இல்லை. எனக்கென்னவோ நீ தமிழனாய் இருப்பாய் என்று தோன்றுகிறது..!’’ என்றது.