அடுத்தவர் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்பவரே, தலைமைக்குத் தகுதியானவர்.

மந்திரச்சொல்

தன்னுடைய தோல்வியைப் பாத்து, “நான் எங்கே தவறு செய்தேன்?” என்று ஒருவர் ஆய்வு செய்வது சுயவிமர்சனம். அதேநேரம் மற்றொருவர் செய்த தவறைப் பார்த்து, “அவர் ஏன் தோல்வியடைந்தார்? அந்தத் தவறு நடக்காமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று சிந்திப்பது மேலாண்மைத் திறமை.

தலைவர் என்பவர் எல்லாம் தெரிந்தவர் அல்ல. எங்கே ஆபத்து இருக்கிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து, அதைத் தவிர்ப்பவர். ஒரு நல்ல தலைவர் தனது குழுவினர் தவறு செய்தால், உடனே ஒருவரைக் குற்றவாளியாக்க மாட்டார்.

அதற்குப் பதிலாக, இந்தத் தவறு ஏன் நடந்தது? இதற்கு காரணமான சூழல் என்ன? இதே தவறு மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று கேள்வி கேட்பார். அதாவது, யார் தவறு செய்தார் என்பதிலிருந்து தவறு எப்படி நடந்தது என்று கேட்பதன் மூலம் முழு அமைப்பையும் மேம்படுத்துவார்.

பொதுவாக மனிதர்களுக்கு தங்கள் சொந்த தவறுகளை ஒப்புக்கொள்வதில் இயல்பான தயக்கம் இருக்கிறது. தவறு செய்ததை ஒப்புக்கொள்வதை அவமானமாகக் கருதுகிறார்கள். அதனால் சூழ்நிலை மீது, அடுத்தவர் மீது அல்லது அந்த நேரத்தில் வேறு வழியில்லை என்று சில காரணங்களை சொல்வார்கள். இப்படி காரணம் தேடுபவர்கள் அடுத்தகட்ட வளர்ச்சிக்குச் செல்வதில்லை. ஆனால் வளர்ச்சி மனப்பான்மை கொண்ட ஒருவர், இந்த தோல்வியிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்? என்று யோசிப்பார்.

ஒரு நிறுவனத்தில் மெஷின் பராமரிப்புச் செலவு அதிகரித்துக்கொண்டே இருந்தது. மெஷின் பராமரிப்பு செய்பவர்களை மேலாளர் திட்டிக்கொண்டே இருந்தார். இந்த நிலையில் அந்த மேலாளருக்குப் பதிலாக வேறு ஒரு மேலாளர் வந்தார். மெஷின் பராமரிப்புச் செலவு அவர் பார்வைக்கு வந்தது. அதற்கான காரணத்தை ஆய்வு செய்தார். போதிய முன் அனுபவம் இல்லாத நபர்கள் பராமரிப்புப் பிரிவில் இருப்பதைக் கண்டுபிடித்தார். அதனால், ‘இரண்டு ஆண்டுகள் பராமரிப்பு பணியில் அனுபவம் உள்ளவர்களே இந்த பிரிவில் பணியாற்ற வேண்டும்’ என்று ஒரு தகுதி மாறுதலைக் கொண்டுவந்தார். அதன் பிறகு, அங்கே பராமரிப்புச் செலவு பெருமளவு குறைந்துபோனது.

இதுதான், அடுத்தவர் தவறுகளில் இருந்து பாடம் படிப்பது. போதிய பயிற்சி இல்லாத நபர்களிடம் பொறுப்பு கொடுத்ததால் பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இனிமேல் பயிற்சி இல்லாத புதியவர்களிடம் முக்கியப் பணிகளை ஒப்படைக்கக் கூடாது என்ற பாதுகாப்பு விதி புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தது.

அதனால்தான் சிறந்த தலைவர்கள் வெற்றிக் கதைகளை மட்டும் படிப்பதில்லை. தோல்விக் கதைகளையும் ஆராய்கிறார்கள். யார் தோற்றார்? ஏன் தோற்றார்? எந்த முடிவு தவறானது? எந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது? வேறு முடிவு எடுத்திருந்தால் என்ன மாறியிருக்கும்? என்று ஆராய்கிறார்கள்.

ஒரு தலைவரின் மிகப்பெரிய திறமை, எல்லா பிரச்சினைகளுக்கும் தானே தீர்வு காண்பது அல்ல. பிறர் அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அதே தவறு செய்யாமல் பார்த்துக்கொள்வதுதான். அதனால் ஒரு நல்ல தலைவர், பிறரின் தோல்வியை கேலி செய்யமாட்டார். பிறரின் தவறைக் குற்றமாகப் பார்க்காமல் பாடமாக மாற்றிக்கொள்வார்.

தன் தவறிலிருந்து கற்றுக்கொள்பவர் அனுபவசாலி என்றால் பிறர் தவறிலிருந்தும் கற்றுக்கொள்பவர் தொலைநோக்குப் பார்வையாளர். இரண்டிலிருந்தும் கற்றுக்கொண்டு, அதே தவறு மீண்டும் நடக்காமல் தடுப்பவர், தலைவராகிறார்.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment