ப.சிதம்பரம் திடீர் அரசியல்
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் வழக்கமாக மத்திய அரசை மட்டுமே குறை சொல்வார். தமிழக அரசு பற்றி கண்டுகொள்வதே இல்லை. இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு குட்டு வைத்து அதே நேரம் ஒரு ஐஸ்ஸும் வைத்து புதுவித அரசியல் செய்திருக்கிறார்.
தமிழக அரசு கொடுக்கும் இலவச சைக்கிள் குறித்து ப.சிதம்பரம், ‘’தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள் இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே? இந்தத் தரமில்லாத சைக்கிள்களத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இதற்கு தி.மு.க. தலைவர்கள் அதிருப்தி தெரிவிக்கவே, ‘’சிவகங்கை மாவட்டம் கண்டதேவியில் அமைந்துள்ள அருள்மிகு பெரியதாயகி அம்மன் உடன் இருக்கும் சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் திருத்தேரோட்டம் 21-6-2024 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தேரோட்டம் நடைபெற்றது என்பது வேதனையான வரலாற்றின் மகிழ்ச்சியான முடிவு என்பது மட்டுமல்ல, இன்னொரு மகிழ்ச்சியான தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். இன்று கண்டதேவிக்குச் சென்றேன். எல்லாச் சமுதாயத்தினரும் தேர்வடத்தைத் தொட்டு இழுத்தார்கள் என்ற சொற்கள் இன்பத் தேனாகக் காதில் பாய்ந்தன. தமிழ்நாடு அரசு, தமிழக அறநிலையத் துறை, சிவகங்கை தேவஸ்தானம், மாவட்ட ஆட்சியர், காவல் துறை (குறிப்பாகத் தென் மண்டல காவல் துறைத் தலைவர் மற்றும் தேவகோட்டை துணைக் கண்காணிப்பாளர்), கண்டதேவி ஊராட்சி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் ஆகிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
காவல் துறையின் அசாதாரணக் காவல் இல்லாமல் அடுத்த ஆண்டிலிருந்து தேராட்டம் இயல்பாக, ஒற்றுமையாக, அமைதியாக, மகிழ்ச்சியாக சொர்ணமூர்த்தீஸ்வரர் அருளுடன் நடைபெறவேண்டும் என்பதே மக்களின் அவா…’’ என்று பாராட்டு வழங்கியிருக்கிறார்.
பொழைக்கத் தெரிஞ்சவர் சிதம்பரம்.