என்ன செய்தார் சைதை துரைசாமி – 331
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடத்தப்படும் சமூகநலக் கூடங்களில் முறைகேடுகள் நடப்பது மேயர் சைதை துரைசாமியின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. புக்கிங் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்ட எளிய மக்களும், பொதுநலச் சங்கத்தினர் சிலரும் இது குறித்து புகார் கொடுத்தனர்.
எந்த ஒரு விஷயம் என்றாலும் அதனை முழுமையாக ஆய்வு செய்வது மேயர் சைதை துரைசாமியின் வழக்கம். எனவே, சில சமூகநலக் கூடங்களுக்கு எந்த முன்னறிவிப்பும் கொடுக்காமல் நேரடியாகச் சென்றார். சமூகநலக் கூடங்கள் எப்படி இருக்கின்றன, எந்த வகையில் செயலாற்றுகின்றன, புக்கிங் எப்படி நடக்கிறது என்பதை எல்லாம் நேரடியாக ஆய்வு செய்தார்.
விஞ்ஞான காலகட்டத்திலும் புக்கிங் எல்லாமே டைரிகளில் குறித்துக்கொள்ளும் நடைமுறையும், அந்த டைரியில் ஏகப்பட்ட அடித்தல், திருத்தல் போன்றவை இருப்பதும் தெரியவந்தது. இதையெல்லாம் அதிகாரிகள் அல்லது மேயர் பார்த்ததும், ஆய்வு செய்ததும் இல்லை என்பதும் தெளிவாகப் புரியவந்தது.
சமூகநலக் கூடங்களை சில அடாவடி நபர்கள் ஏதாவது கட்சியின் பெயரைச் சொல்லி ஆக்கிரமிப்பு செய்திருந்தார்கள். சமூகநலக் கூடங்களை கிட்டத்தட்ட வணிகமயமாகவே மாற்றியிருந்தார்கள். சமூகநலக் கூடங்களில் புக்கிங் செய்வது முழுக்க முழுக்க இவர்களுடைய கையில் இருந்தது. அதாவது, அந்த ஆண்டின் அனைத்து திருமண முகூர்த்த தேதிகளையும் குறிப்பிட்ட நபர்கள் போலியான பெயர்களில் புக்கிங் செய்துகொள்கிறார்கள்.
அதன் பிறகு குறிப்பிட்ட தேதிகளில் மண்டபம் கேட்டு வரும் நபர்களிடம் இருந்து கூடுதல் பணம் கொள்ளை வசூல் செய்துவந்தார்கள். இதற்கு மாநகராட்சி ஊழியர்களும் உடந்தையாக இருப்பது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது.
- நாளை பார்க்கலாம்.












