பகல் உணவுத் திட்டத்துக்கு வந்த தடைகள்

காமராஜர் நினைவலைகள் – 12

பள்ளியில் மதிய உணவு கொடுத்தால் பிள்ளைகள் படிக்க வருவார்கள் என்பதில் காமராஜர் உறுதியாக இருந்தார். அவர் முதலமைச்சர் என்றாலும், அந்த திட்டத்தை அத்தனை சீக்கிரம் கொண்டுவர முடியவில்லை என்பதே உண்மை.

காமராஜ் சிந்தனையில் தோன்றிய பகல் உணவுத் திட்டத்தை (இன்றைய சத்துணவு) பள்ளியில் அறிமுகப்படுத்த திட்டமிட்டார். அந்த திட்டம் அமைச்சரவையின் ஆய்விற்கு வந்தது. முதலமைச்சர், கல்வி அமைச்சர் வாய் திறப்பதற்கு முன்பே, வருவாய் துறை செயலர் எழுந்து, “அரிஜனப் பள்ளியில் போட்ட பகல் உணவால், கான்ட்ராக்டர்கள், ஆசிரியர்கள் மட்டுமே அதிக பலன் அனுபவித்தார்கள்.

இந்த திட்டத்தில் சிறுவர் சிறுமியர்க்குக் கிடைத்த பலன் அளவில் மிகக் குறைவு. ஒராயிரம் பள்ளிகளில் விரயமாவதைப் போல பதினைந்தாயிரம் பள்ளிகளுக்கு விரிவு படுத்த வேண்டாம். எனவே, இந்த திட்டத்தை கைவிட்டு விடுவதே நல்லது” என்று சொல்லி முடித்தார்.

அதற்கு காமராஜ் மிகவும் சாதாரணமாக, ‘’அப்படியானால் இயக்குனர் விரிவான ஆணை பிறப்பிக்கையில் மறந்து விடாமல் இதை சேருங்கள். பள்ளி பகல் உணவுத் திட்டம் கான்ட்ராக்ட் முறையில் நடத்தக்கூடாது., வேறு எந்த முறையில் நடத்தலாம் என்று திட்டமிட வேண்டும்’’ என்றார்.  

முதல் அமைச்சர் இவ்வாறு ஆணை பிறப்பித்த பிறகும் செயலர் குறுக்கிட்டு “மாணவர்களுக்கு சமைக்கும் சாப்பாட்டை ஆசிரியர்கள் சாப்பிட்டு விடுகிறார்கள், அவர்கள் வீட்டுக்கும் அனுப்பிவிடுவார்கள். மாணவர்களுக்கு அரை வயிற்றுக்கே கிடைக்கும்” என்றார்.

இதற்கு காமராஜர், “திட்டத்தில் இன்னொரு விதியை சேர்த்து விடுங்கள். பகல் உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தும் ஆசிரியர்களும், பிள்ளைகளோடு சேர்ந்து சாப்பிடலாம். அந்த கூடுதல் சாப்பாட்டுச் செலவு, நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளப்படும்” என்று பதில் கூறினார்.

எப்படி என்றாலும் காமராஜர் இந்த திட்டத்தைக் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறார் என்று தெரிந்தபிறகே, அதிகாரிகள் குறுக்கிடுவதை நிறுத்தினார்கள். காமராஜரின் பகல் உணவுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment