என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 87
டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நிலவேம்புக் கஷாயம், பப்பாளி இலைச்சாறு அறிமுகம் செய்தது போன்று கொசுக்களை விரட்டுவதற்கும் ஏதேனும் எளிய வழியைக் கண்டுபிடிக்க விரும்பினார் மேயர் சைதை துரைசாமி.
கொசுக்களை விரட்டுவதற்கு வசதியானவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் கொசு வலை மற்றும் ரசாயனம் கலந்த கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறார்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் கொசுவர்த்திச் சுருள் பயன்படுத்துகிறார்கள். கொசுவிரட்டி, கொசுவர்த்திச் சுருளில் இருந்து வெளியேறும் ரசாயனம் காரணமாக குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு நுரையீரல், கண்கள், சருமம் ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் கொசுக்களை விரட்டுவதற்கு இயற்கை வழியில் ஏதேனும் மூலிகையைப் பயன்படுத்த இயலுமா என்று பல்வேறு இயற்கை மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார் மேயர் சைதை துரைசாமி.
முந்தைய காலங்களில் கொசு மற்றும் பூச்சிகளை விரட்டுவதற்கு மாலை நேரங்களில் நொச்சி இலை அல்லது வேப்பமர இலைகளை கொளுத்தி புகை உருவாக்குவார்கள். அந்த புகைச்சலுக்கு கொசு போன்ற பூச்சியினங்கள் ஓடியே போய்விடும் என்பதை அறிந்தார். ரோட்டோரத்திலும், பயிர்களுக்கு நடுவே இயற்கை வேலியாகவும் நொச்சி செடியை வளர்ப்பார்கள். ஆடு, மாடுகள் இந்த செடிகளை தின்னாது என்பதால் இதனை வளர்ப்பதில் எந்த இடைஞ்சலும் இல்லை. அதோடு இந்த செடியின் வாசனைக்கு சின்னஞ்சிறு பூச்சிகளும் ஓடிப்போய்விடும் என்பதை அறிந்துகொண்டார்.
வேப்ப மரம் மிகப்பெரிய அளவுக்கு வளரக்கூடியது என்பதால் எல்லோராலும் வீட்டில் வளர்க்க முடியாது. நகர்ப்புற மக்களுக்குத் தேவையான அளவுக்கு வேப்ப இலைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால் நொச்சி வளர்வதற்கு அதிக இடம் தேவையில்லை. வீட்டு வாசலில், மாடியில் சிறிய தொட்டியிலே நொச்சி செடி வளர்த்து பயன் பெற முடியும் என்ற நம்பிக்கை மேயர் சைதை துரைசாமிக்கு வந்தது.
- நாளை பார்க்கலாம்.