காஸ்ட் அவே – சினிமா எனும் வாழ்க்கை
தனக்கென வாழாமல் தன்னுடைய வாழ்நாளில் பெரும்பாலான காலத்தை குடும்பத்தினருக்காக வாழ்கிறான் ஆண். அதேபோல் பெண்ணும் தனக்கென வாழாமல் தங்கள் பிள்ளை, தன் கணவன், தன் குடும்பம் என்றே வாழ்கிறாள்.
குடும்பத்துக்காக அல்லது மற்றவர்களுக்காக இத்தனை தூரம் சிரமப்படவும் துன்பம் அடையவும் வேண்டுமா..?
தேவையில்லை என்பதே உண்மை. உயிரைக் கொடுத்து பாடுபடத் தேவையில்லை. எத்தனை கஷ்டப்பட்டு உழைத்தாலும், ஒரு நாள் எல்லாமே மறக்கப்பட்டுவிடும். இன்றைய நாளில் என்ன தருகிறீர்கள் என்பதே பார்க்கப்படும். கடந்த காலத்தை யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை. எனவே, வாழும் காலத்தில் முதலில் தங்கள் நன்மைக்காக, தங்கள் மகிழ்ச்சிக்காக வாழ்வதற்குப் பழகுங்கள்.
காதல், குடும்பம் என்பதெல்லாம் அழகான கண்ணாடி மாளிகை போன்றது. ஏதேனும் ஒரு விருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் அந்த குடும்பம் உடைந்து போகலாம். நீண்ட நாட்கள் சந்திக்காவிட்டால் காதல் அழிந்து போகலாம்.
இதுவே உண்மையான வாழ்க்கை என்பதை கண் முன் நிறுத்தும் படம் காஸ்ட் அவே.
டாம் ஹாங்ஸ் செல்லும் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அவருடன் பயணைத்த அனைவரும் விபத்தில் இறந்து போகிறார்கள். டாம் ஹாங்கஸ் மட்டும் உயிர் பிழைத்து மனித நடமாட்டம் எதுவுமே இல்லாத ஒரு தொலைதூர தீவில் கரை ஒதுங்குகிறார்.
ஹைடெக் வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்த மனிதனுக்கு தீவு என்பது நரகம். உணவு, வீடு, ஆடை, மனைவி, மக்கள் என்று எல்லாமே போய்விட்ட நொடியில் செத்துவிடலாமா அல்லது வாழ்வதா எனும் போராட்டம் தொடங்குகிறது.
தனக்காக மனைவி, பிள்ளைகள் நண்பர்கள் காத்திருப்பார்கள். தன்னை அவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உத்வேகம் அளிக்கிறது. உயிர் வாழ வேண்டுமென்ற உள்ளுணர்வு ஏற்படுகிறது. அதேநேரம் கண் முன் தெரியும் நிஜம் பயமுறுத்துகிறது. மனித நடமாட்டம் அற்ற தீவில் உயிர் பிழைத்து வாழ்வதற்கு போராடத் தொடங்குகிறார். மரங்களில் ஏற பழங்களை சாப்பிடுகிறார். கடல் மீன்களை பிடித்து பசியைப் போக்குகிறார்.
அவ்வப்போது தன் பர்ஸிஸ் இருந்த மனைவி, பிள்ளை குட்டிகளின் படத்தை எடுத்து நம்பிக்கை வளர்த்துக் கொள்கிறார். ஒரு கைப்பந்தில் ஒரு முகத்தை வரைந்து அதற்கு “வில்ஷன்” என்று பெயரிட்டு அதனை தனது நண்பனாக கற்பனை செய்து பேசி மகிழ்கிறார். அங்கே மலை உச்சியில் ஏறி ஒரு கொடியை நட்டுவைத்து அடையாளம் உருவாக்குகிறார். நெருப்பை மூட்டிப் பார்க்கிறார். வருகின்ற, போகின்ற கப்பல்கள் அவரை அடையாளம் கண்டு, அவரை காக்க வரும் என்று நம்புகிறார். நாட்கள் உருண்டோடுகின்றன. இப்படியே அங்கே சில வருடங்களைக் கழிக்கிறார். ஆனாலும் நம்பிக்கை இழக்கவில்லை.
அன்பு மனைவி, பாசமான பிள்ளைகள் உயிர் நண்பர்கள் மறு பக்கத்தில் தனக்காக இருப்பார்கள் என்ற நம்பிக்கை அவரை உற்சாகப் படுத்துகிறது. இந்த நம்பிக்கை அவரை உயிர் வாழ ஊக்குவிக்கிறது. கடைசியாக பல நாட்கள் கஷ்டபட்டு மரக்கட்டைகளால் ஒரு படகு செய்கிறார். அதில் ஏறி நம்பிக்கையோடு கடலில் குதிக்கிறார். கடல் அலைகள் தரும் மரண பயத்தை மீறிப் பயணிக்கிறார். ஒருவழியாக வாழ்க்கை மாறுகிறது. அதிர்ஷ்டவசமாக ஒரு கப்பல் அவரை இனங்கண்டு பாதுகாத்து மீட்கிறது.
இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு வாழ்ந்த காலத்தை எல்லாம் மறந்துவிட்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் வாழ்ந்த உலகம் நோக்கிச் செல்கிறார். ஆனால் அங்கே அவருக்கு ஏமாற்றம் காத்திருந்தது.
அவரது அன்பு மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டு புது வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிரார். அவரது பிள்ளைளும், நண்பர்களும் அவர் இறந்ததாக நினைத்து சில நாட்கள் துக்கம் அனுஷ்டித்துவிட்டு, அப்படி ஒருவர் இருந்ததை மறந்துவிட்டார்கள். அங்கு யாரும் அவரை தேடவில்லை, நினைக்கவில்லை என்ற உண்மை அவர் இதுவரை பட்ட வேதனைகளை விட அதிகமாக இருக்கிறது. ஒரு மனிதன் காணாமல் போனதை எண்ணி வருத்தப்படாமல் உலகம் ஓடிக்கொண்டிருப்தைக் காண்கிறார்.
இதுவே கேஸ்ட் அவே சொல்லித்தரும் பாடம்.
இதை ஒவ்வொரு நபரும் நினைவில் வைத்துக்கொள்வது நல்லது. பிறருக்காக ஆண்டுக்கணக்கில் கஷ்டங்கள், இன்னல்கள் அனுபவிக்க அவசியம் இல்லை. உலகை விட்டும் மறைந்த பிறகு உங்கள் முயற்சிகள், சாதனைகள், திறமைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பு, மரியாதை கிடையாது. ஆகவே, உங்களுக்காகவும் கொஞ்சம் வாழுங்கள். தினமும் அரை மணி நேரமாவது மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக்கொள்ளுங்கள். இதுவே மகிழ்ச்சி.