பெண்களை மதிக்கும் மனநிலை யாருக்கும் இல்லை

Image
  • எழுத்தாளர் தமயந்தி நேர்காணல்

உங்களின் கலை, இலக்கிய பயணம் வானொலியிலிருந்து ஆரம்பமானதா..?

அப்படி இல்லை. நான் ஐந்தாம் வகுப்பிலேயே ஆங்கிலத்தில் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். அதை என் அப்பா ஃபைல் செய்து வைத்திருக்கிறார்.  அவர் மறைந்த பிறகே அதை நான் பார்த்தேன். நான் அறிந்து, எனது ஏழாம் வகுப்பிலே நான் கவிதை எழுதினேன். வாசிப்பு என் தனிமைக்குத் துணையிருந்தது. பத்தாம் வகுப்பில் புத்தகங்களுக்கு எழுத ஆரம்பித்தேன். சாவி பத்திரிகைக்கு என் முதல் கதையான, ‘பொழுது விடியுமென்று’ என்ற கதையை எழுதினேன். அதை வாசித்து விட்டு அப்போது அங்கு உதவி ஆசிரியராய் இருந்தசத்தீஷ் வைத்தியநாதன், கதை நிராகரிக்கப்பட்ட போதும், எனக்கு எழுதிய கடிதம் மிக முக்கியமான உந்துசக்தியாக இருந்தது. தினமும் அப்பள்ளி காலங்களில் நான் ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். பின் விகடனில் கதைகள் வெளியாகி அதன் மூலம் பிரபஞ்சனின் அறிமுகம் கிடைத்ததெல்லாம் என் வாழ்நாள் பேறு. அப்படி ஆரம்பமானது தான் என் எழுத்துலக பயணம்

வானொலி மூலமான  இலக்கியத்திற்கும் களம் சார்ந்த இலக்கியத்திற்கும் என்னென்ன வித்தியாசங்கள் உணர முடிகிறது?

வானொலி வேறொரு தளம். அதற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமில்லை. அகில இந்திய வானொலிக்கும் பண்பலை வானொலிக்குமே வடிவ அளவில் – மக்களை அணுகும் முறையில் தொடர்பில்லை. வானொலி மூலமாக ஒற்றை குரலில் நுனியில் மனிதர்களை , அவர்களின் அன்பைப் பெற முடியும். வானொலி நாட்களை என்னால் மறக்கவே இயலாது

பெண்கள் சார்ந்த உடல், மன உணர்வுகளை பெண்களால் மட்டுமே எழுத முடியும் என்பது சரியா?

அப்படி நான் நினைக்கவில்லை. சக மனிதனின் வலியை உணர்ந்து கொள்ள முடியுமெனில்-அந்த empathy உணர்வு இருக்குமெனில் மனித உணர்வுகளை யாராகிலும் எழுதி விடலாம். ஆனால் இன்னமும் மார்பை எழுதும் ஆண்கள் அதை காம வாடையோடு தான் எழுதுகிறார்கள். அவர்களால் ஒரு பெண்ணுக்கு மாத விடாய் வரும் முன் மார்பு கனப்பதன் வலி தெரியவில்லை. தெரிய வரும் நாளே பாலினம் என்னும் வார்த்தை கருகும் நாள். அன்று எழுத்தாளர்களில் ஆண்கள் பெண்ணுணர்வுகளை  எழுதினால் சிறப்பாக இருக்கலாம்.

பெண் எழுத்துகளால் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் அல்லது விளைவுகளாக  பார்ப்பது?

அம்பைக்கு முன் அல்லது அம்பைக்குப் பின் என்று பெண்கள் பற்றின புனைவுலகைப் பிரிக்கலாம். பெண் எழுத்து என்ற தனி ஜானரை நான் வெறுக்கிறேன். எழுதும். பெண்களைஎழுத்தாளர்கள் என்றே அழையுங்கள்.அம்பைக்குப் பிறகான எழுத்தில் ஏற்பட்ட உடலரசியல் சார்ந்த பார்வையில் மாற்றமென்பது மிக முக்கியமானது. அதை தொடர்ச்சியாக தன்னிச்சையாக பலரும் பின்பற்றி கொண்டார்கள். ஆண் வீட்டுக்கு வரும் போது சமைத்த உணவை பரிமாறிய பெண்ணும், அவனுக் காகவே காதலாகி கசிந்துருகும் பெண்ணும் மறையவில்லை எனினும் காணாமல் போனார்கள்.

தமயந்தி என்கிற இலக்கிய ஆளுமையின் பின் புலமான ஆற்றல் என்னவாக இருக்கிறது?

உண்மை.

இலக்கியவாதி என்கிற ஒற்றை முகம் கடந்து தொலைக்காட்சி, பத்திரிகை, சினிமா, அரசியல் என்கிற பன்முக தன்மையின் பேராற்றலை வளர்த்தெடுக்க ஏதுவான களங்கள்?

பொருளாதார நெருக்கடி ஒரு வேட்டை நாய் போல துரத்திய வாழ்வில் தான் மீடியாவின் பல் வேறு தளங்களில் பணியாற்றினேன். எப்படி பிரபஞ்சன் தனது 55வது எழுத்துலக விழாவில், ‘எனக்கு மட்டும் இரு வேளை உணவு கிடைத்திருந்தால் நான் இன்னும் நல்ல கதைகள்  எழுதியிருப்பேன் ’ என்று சொன்னது போல தான்- எழுத்தாளருக்கு தமிழ்நாட்டில் தேவையான பொருளாதார ஈட்டு கிட்டுமானால் நான் மற்ற தளங்களுக்கு சென்றிருக்க மாட்டேன். எழுத்தைப் போல பேரானந்தமான ஒன்று கிடையாது.

தொலைக்காட்சி மூலமாக மனிதர்களின் வாழ்வை ஆவணப்படுத்தினேன். வானொலி மூலமாக மனிதர்களை சம்பாதித்தேன். சினிமா மூலம் அனுபவங்களை சேகரித்தேன்.

பெரும்பாலும் பெண்களின் உடலை  மையப்படுத்தி  பாட்டுகள் தரும் பாடலாசிரியர்கள் மத்தியில் பெண்களின் சினிமா எழுத்தால்    ஏற்பட்டிருக்கும் மாற்றங்களாக எதை பார்க்கிறீர்கள்?

பெண்களுக்கு உள்ள மன உணர்வுகளை , அவர்களின் காதலை , காமத்தை அத்தனையையும்  பெண்கள் துல்லியமாக எழுத்தில்  கொண்டு வருகிறார்கள். அவை இயல்பாக தத்ரூபமாக உள்ளது. பார்வைகள் வேறுபட துவங்கி இருக்கின்றன. ஆனால் சினிமாவில் பெண்கள் இயங்குவதென்பது ஒரு போராட்டம். தாமரையின் திறனை ஒரு கெளதம் நம்பியது போல, உமாதேவியின் திறனை பா, ரஞ்சித் நம்பியது போல பார்வதிக்கோ எனக்கோ ஒரு பற்றுகோல் கிடைக்கவில்லை. அதனால் வாய்ப்புகள் குறைவு.  

 பெண்களின் வருகையால் சினிமாவில்  இன்னும் என்னென்ன புதுமைகள் ஏற்படும் என கணிக்க முடிகிறது?

இதுவரை நெகிழியாக செயற்கையாக ஆண்களின் கண்களின் வழி பார்க்கப்படும் பெண்ணுலகம் மாறும். குறிப்பாக பெண்களை நிற்க வைத்து அவர்களின் மார்புகளின் கீழ் கேமரா வைக்கும் லோ ஆங்கிள் ஷாட்டுகள் இருக்காது.

இதுவரை எழுதிய சினிமா பாட்டுகள் எத்தனைபாட்டு பிறந்த சூழல்கள் பற்றி தீராநதி வாசகர்களோடு..?

எண்ணிக்கை இருபத்தைந்து இருக்கும். பாட்டு பிறந்த சூழல்கள் அற்புதமானவை. எனக்கு முதல் பாட்டு வாய்ப்பை இயக்குனர் மீரா கதிரவன்  கொடுத்தார். அது ஒரு பெண் குடித்து விட்டு தான் காமமுறும் உணர்வைப்பற்றிய பாடல் அது. வெள்ளை இரவே- என்னுள்ளூம் தீவே என்னும் பாடல் அது. ‘சிகப்பு பச்சை மஞ்சள்’  திரைப்படத்தில் இயக்குனர் சசி கொடுத்தது தான்  மைலாஞ்சி பாடல். அது முழுக்க முழுக்க என் தனிப்பட்ட அகவுலகம் சார்ந்த வார்த்தைகளால் தான் வடிவமைத்திருந்தேன். அது பெரிய அளவில் பேசப்பட்டால் கூட அதற்கு பின் சிவகார்த்திகேயன் படத்திலும் அதே ’மைலாஞ்சி’ என்னும் வார்த்தை கொண்ட பாடல் வந்ததால் எல்லோரும் குழம்பிப் போனார்கள்.

சைமன் கிங் இசையில் நான் எழுதிய கொலைகாரன், மார்க்கெட் ராஜா எம் பிபி எஸ், ராஜபீமா திரைப்பட பாடல்கள் தனித்துவ அனுபவங்களைத் தந்த பாடல்கள். அவர் நிறைய பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொள்வார். அவரது மனைவி ஷீபாவும் செறிந்த தமிழ் ஆர்வம் கொண்டவர். கண்ணாலே கண்ணாலே என்னும் மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் திரைப்பட பாடலில் படிமங்களை பயன்படுத்த அவர்களிருவரும் ஊக்கமளித்தார்கள். பிஜுவுடன் , சூப்பர் சிங்கர் நிவாஸுடன் ஆன தனிப்பாடல்கள் எல்லாமே வேறு தனித்த சந்தோஷங்களைக் கொடுத்தவை. ஒரு பாடல் எழுதி முடித்த உணர்வென்பது நூறு பட்டாம்பூச்சிகள் நடுவே நாமும் பறப்பது போலவே.

பொதுவான கவிதை எழுத்துக்கும் சினிமா பாட்டு எழுத்துக்குமான வித்தியாசமாக உணர்வது?

திரைப்பட பாடல்கள் கதவு மூடிய அறைக்குள் உட்கார்ந்து கசியும் வெளிச்சம் கோர்ப்பது போல. கவிதை என்பது தாழ் இல்லா வீட்டின் தாழ்வாரம் தாண்டி வானம் பார்ப்பது போல.

பெண்களின் வாழ்வியலில் எதிர்பார்த்த  அளவிலான விழிப்புணர்வு வந்திருக்கிறது என்று சொல்ல முடிகிறதா?

பெண்களுக்கு இப்போது தான் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அதை அனுபவத்தில் வைப்பதென்பது சிரமமான ஒன்று. காரணம் அப்படி நடைமுறை வாழ்வில் நடந்து கொண்டால் தன்னை தவறாக சமூகம் மதிப்பிடும்என்ற அச்சத்திலேயே சமூக விழுமியங்களுள் வாழ்ந்து வீழ்ந்து போவார்கள். அதனாலேயே அப்படி வாழும் பெண்களை தங்களின் தனிப்பட்ட ஆற்றாமையால் குறையும் சொல்வார்கள்

பெண்கள் விழா ஒன்றில், ’ உச்சத்தில்வரும் பெண்களின் பாதங்கள் முட்களில் நடக்கின்றன..அங்கே உதிரும் குருதியின் பாத பதிவுகளிலிருந்து முளைக்கும் விருட்சங்களை வரும் சந்ததிகள் பற்றி பிடித்து கொள்வார்கள்’ என்று பேசினீங்க? கல்வியும், கலாச்சார மாற்றமும் வளர்ந்த இக்கால சூழலிலும் சமூகத்தில் வரும் பெண்களை இச்சமூகம் இன்னும் ஏன் ஏற்கவில்லை?

ஒரே பதில் தான். பெண்களை மதிக்கும் மனநிலை இங்கு பெரும்பாலும் யாருக்கும் இல்லை. கொஞ்சம் திறமையான பெண்கள் மேல் இவர்கள் கேவலமான பாலியல் குற்றசாட்டுக்களை வைப்பார்கள். இதையெல்லாம் மீறி செயல்படுவதே அவர்களை அவமானப்படுத்துவது தான். ஜெயிப்பது தான். இந்த மனநிலையை மீறி நாம் ஜெயித்தால் அதன் ரத்தசுவடு படிந்த பாதையில் பூ பூத்திருக்கும். அதில் வருங்கால பெண் முட்களின்றி பயணிக்க இயலும்.

நிழலிரவுபடைப்பில் மதம் சார்ந்த பதிவை   வெளிப்படுத்தியிருப்பீர்கள். மதத்திலிருந்து இயேசுவை யார் காப்பாற்ற முடியும்? என கேட்டிருப்பீங்க? இந்த ஞான துணிச்சலின் பின்னணி?

அது கிட்டத்தட்ட என் சொந்த வாழ்க்கை தான். ஞான துணிச்சல் என்பது வாழ்ந்து அனுபவித்த வலியிலிருந்து பிறப்பது தான். எனக்கு மிகவும் பிடித்த தோழர் இயேசு கிறிஸ்து. ஆனால் பாவம் அவர் இன்று வியாபாரமாகப் பார்க்கப்படும் ஆலயங்களுள் இல்லையென நினைக்கிறேன். நிழலிரவு நான் எழுதிய மிக முக்கியமான நாவல் என நான் சொல்வேன். ஆனால் அதை நான் சொல்ல வேண்டியிருப்பது தான் துரதிஷ்டவசமான தமிழ் இலக்கிய சூழல். அதற்கான இடத்தை அது மறுபதிப்பு வந்தும், 25 ஆண்டுகள் ஆகியும் பெறவில்லை. பொதுவாகவே என் படைப்புகள் மீது நிராகரிப்பின் எச்சங்கள் கவிந்து கிடப்பதாகவே தோன்றுகிறதெனக்கு.

விரும்பி படிக்க கூடிய இலக்கியங்கள்?

எல்லாமே.. ஆனாலும் எமிலி டிக்கன் சன் , சில்வியா ப்ளாத் மீது தீராத மோகம் எனக்கு. தமிழில் அசோகமித்திரன் , பிரபஞ்சன் தொடங்கி பா திருச்செந்தாழை வரை எனக்கு ஒரு நீண்ட பிடித்த எழுத்தாளர் பட்டியல் உண்டு.

உங்களின் அரசியல் பார்வை?

இடது சாரி கொள்கைகள் தாம். கட்சி அல்ல. நிழலிரவு வாசித்தாலே புரியும்.

பெண்களின் சுதந்திரமான வாழ்வை, எழுத்தை வெறும் ஒழுக்க மீறலாக மட்டுமே பார்க்கும் சூழலில், உங்களின் எழுத்துக்காக கிடைத்த வரவேற்பும்..சிக்கல்களும்?

எதை தான் எதிர் கொள்ளவில்லை. அவமானங்கள் செதுக்கி விட்டன புறக்கணிப்புகள் என்னை புடமிட்டன. சாதி விலக்கல்கள் என்னை மின்ன வைத்தன. அன்பு என்னை கீரிடம் சூட்ட வைத்தன. அவ்வளவே. இவ்வுலகம் நீராலானது என்பது அறிவியல் உண்மை. என் உலகம் எழுத்தாலானது.

எத்தனை பிரச்சனைகளையும் சிறு புன்னகையில் கடந்து போகும் தமயந்தியின் எழுத்தும், வாழ்வும் சமூகத்துக்கு, குறிப்பாக பெண்களுக்கு சொல்லும் சேதி என்னவாக இருக்கிறது?

விஜய் பட டயலாக் தான். நாம செமயா வாழ்ந்து காட்றது தான் நாம வாழவே கூடாதுன்னு நினைக்கறவங்களுக்கு நாம கொடுக்கற பெரிய தண்டனை. வாழுங்கள். இந்த நொடியை சந்தோஷமாக வாழுங்கள்.

பல்வேறு சமூகக் களங்களில் பணியாற்றும் போது சக படைப்பாளர்கள் குறிப்பாக ஆண்கள் அக்கறையோடு வரவேற்று கொள்கிறார்கள் என்று சொல்ல முடியுமா?

ஓரளவு. இளைய சமூக ஆண்கள் கொஞ்சம் மதிப்பு தருகிறவர்களாக இருக்கிறார்கள்

தற்போதைய இலக்கிய எழுத்து என்னவாக இருக்கிறது?

எப்போதும் போல சிறப்பாக உள்ளது. இப்போது நல்லா இல்லை என்று சொல்வதெல்லாம் மிகுந்த மோசமான விமர்சனம். எத்தனையோ அற்புதமான எழுத்தாளர்கள் தோன்றி கொண்டே இருக்கிறார்கள்.

இவ்வளவு உச்சத்திற்கு வந்திருக்கிறீர்கள்..  உட்பக்க   ஆணிவேராகிய திருநெல்வேலி மண்ணிலிருந்து இன்னும் மணத்து கொண்டிருக்கும் இலக்கியம் என்ன?

நான் மனசளவில் எப்போதும் திருநெல்வேலிக்காரி தான். எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நெல்லையில் பேச எழுத்தாளர் செயல்பாட்டாளர் நாறும்பூநாதன் அழைத்தார். எத்தனை ஆறுதலை அவ்வழைப்பு மனதிற்கு தந்து தெரியுமா? இந்த நதியை நான் எப்படி மறப்பேன். அது என் இருதயத்தில் அல்லவா ஓடுகிறது. ஆனால் இந்த சமூக சாதி படிநிலை இங்குள்ள அநேகரிடம் இருக்கிறது. இதை முன் வைத்து ஒரு திரைக்கதை இப்போது எழுதியுள்ளேன். அதை படமாக்க முயற்சிக்க உள்ளேன்.

ஆண் பெண் என்கிற மெல்லிய கோடை, அழகான அன்பை ஆபத்தாகவும், வன்முறையாகவும் பிரிவு படுத்திய பின்னணியாக எதை சொல்ல முடியும்?

உடலரசியல் சார்ந்த புரிதல் தான். அன்புக்கு பாலினம் கிடையாது. ஆனால் அதைப் பார்க்கும் கண்களுக்கு பாலினம் தென்படுவது தான் துரதிஷ்டம். அதே போல்  – உடலுறவு என்பது காதலின் வெளிப்பாடு. அதை காமமாக மட்டுமே சமூக கட்டமைப்பின் சிறா குத்திய கண்களில் பார்ப்பது தான் கொடூரம்.

நேர்காணல்: மலர்வதி.

தீராநதி இதழில் வெளியான கட்டுரை