யாரும் யாருக்காகவும் இல்லை

எஸ்.கே.முருகன் உளவியல் தத்துவம்

மருந்து கசப்பாக இருக்கும், ஆனால் உடலை குணப்படுத்தும். அதேபோல் ஒருசில வார்த்தைகள் கேட்பதற்கு சங்கடமாக இருக்கும். ஆனால், உண்மையாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நிஜமான ஒரு வாக்கியம், யாரும் யாருக்காகவும் இல்லை.

எல்லோரும் எப்போதும் நம் பக்கத்தில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படலாம். அப்பா, அம்மா, சகோதரர்கள், சகோதரிகள், பிள்ளை, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் அக்கம்பக்கத்தில் ஒற்றுமையாக வாழ்வது விருப்பமாக இருக்கலாம்.

ஆனால், இந்த ஆசை நிறைவேறுவதில்லை. ஏனென்றால் வாழ்க்கைப் பயணத்தில் எல்லா மனிதர்களும் சக பயணிகள் மட்டுமே. யாரும் வாழ்க்கைத் துணையாக கடைசி காலம் வரை இருக்க முடியாது.

ஒரு நொடி பார்க்கவில்லை என்றாலே உயிர் போய்விடும் என்று பேசும் காதலர்களும், ஒரு காலகட்டத்தில் பார்த்தும் பார்க்காதது போல் நகரும் நிலைக்கு வருகிறார்கள். அம்மா மீது அன்பாக இருக்கும் பிள்ளையே, அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார்.

ஏனென்றால் மனித உறவு, நட்பு, சொந்தம், பந்தம் எல்லாம் தற்காலிகம் மட்டுமே. விலகுதலும் சேர்தலும் அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப, அந்தந்த நாட்களுக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கும்.

எனக்காக நீ, உனக்காக நான் என்று பேசுவது எல்லாம் குறிப்பிட்ட நேரத்துத் தேவையை வெளிப்படுத்தும் வார்த்தைகளே தவிர, நிஜம் அல்ல. ஒவ்வொரு மனிதரும் அவருக்கு மட்டுமே உண்மையாக இருக்கிறார்.

அதனால்தான் பிள்ளை செத்துப் போனால் அம்மாக்கள் சாவதில்லை. மனைவி செத்துப்போனால், கணவன் சாவதில்லை. அவரவர் வாழ்க்கை அவரவருக்கு மட்டுமே சொந்தமானது. யாரும் யாருக்காகவும் இல்லை என்பதை வாழ்க்கை கற்றுத் தருவதற்கு முன்னர் புரிந்துகொள்ளுங்கள். அதுவே, மகிழ்ச்சி.  

Leave a Comment