ஞானகுரு பதில்கள்
கேள்வி : கடவுள் நம்பிக்கை நல்லதா, கெட்டதா?
- எஸ்சந்தானலட்சுமி, விழுப்புரம்.
ஞானகுரு :
நம்பிக்கை என்பதே நல்லது தான். நம்பிக்கையே வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் தருகிறது. தனக்கு எந்த ஆபத்தும் வராமல் அம்மா காப்பாற்றுவாள் என்ற நம்பிக்கை குழந்தைக்கு உண்டு. தன்னை ஒருபோதும் கைவிட மாட்டான் என்று காதலனை நம்புகிறாள் காதலி. தனக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் குடும்பத்தை நிறுவனம் அல்லது இன்சூரன்ஸ் காப்பாற்றும் என்று கணவன் நம்புகிறான். இப்படி ஒவ்வொரு நபரிடமும் ஏதேனும் ஒரு நம்பிக்கை இருக்கிறது. இந்த நம்பிக்கை உண்மை அல்லது பொய்யாக இருக்கலாம். ஆனால், அவர்களுக்கு நிம்மதியும் சந்தோஷம் தருகிறது.
அதேபோன்று கடவுள் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள். நல்லது. ஆனால், நீங்களே கடவுளை முழுமையாக நம்புவதில்லை. கடவுளே நோயிலிருந்து என்னை காப்பாற்று என்று சொல்லிவிட்டு மருத்துவமனையில் தஞ்சம் அடைகிறீர்கள். கடவுள் என்னை காப்பாற்றுவார் என்று சொல்பவரும் அக்கம் பக்கம் பார்த்துவிட்டே ரோட்டை கிராஸ் செய்கிறார். அதாவது, கடவுள் மீது யாரும் முழு நம்பிக்கை வைப்பதில்லை.
இதன் அர்த்தம் என்னவென்றால், கடவுள் எல்லாவற்றையும் செய்ய மாட்டார். நாமே தான் செய்துகொள்ள வேண்டும் என்பது உங்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. சிங்கத்தின் சிலையால் உங்களை ஒருபோதும் கொல்ல முடியாது. அதேபோல் யானை சிலையால் உங்களுக்குப் பலம் கிடைக்காது. ஆகவே, கடவுள் மீது வைக்கும் நம்பிக்கையை உங்கள் மனதின் மீது வையுங்கள்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் என்று சித்தர் திருமூலர் சொன்னதை நம்பினால் நீங்களே கடவுளாக இருக்க முடியும். இந்த நம்பிக்கையே நன்மை தரும். உங்களைத் தவிர யாராலும் உங்களைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்.
