ஆரோக்கிய ரகசியம்
மருத்துவத் துறை நாலு கால் பாய்ச்சலில் முன்னேறியுள்ளது. ஃபுல் பாடி செக்கப், மெடிக்கல் இன்சூரன்ஸ், டெலி மெடிசன், மெடிக்கல் டூரிசம் சகஜமாகிவிட்டன. எல்லா வீடுகளிலும் மருந்து, மாத்திரைக்கு நிறைய பணம் செலவழிக்கிறார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் நிறைய பேர் முக்கியமான ஒரு தவறு செய்கிறார்கள். கால் வலி என்றால் ஆர்த்தோ ஸ்பெஷலிஸ்ட், நெஞ்சுவலி என்றால் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் என்று நேரடியாக அணுகுகிறார்கள். அதேபோல், மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் மட்டுமே முழு கவனிப்பு கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.
இதற்கு எந்த அவசியமும் இல்லை என்பதே உண்மை. என்ன நோய் என்றாலும் முதலில் குடும்ப மருத்துவரை அணுகுங்கள். அப்படி ஒரு குடும்ப மருத்துவர் இல்லை என்றாலும், இனியாவது வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு பொதுமருத்துவரை குடும்ப மருத்துவராக மாற்றிக்கொள்ளுங்கள்.
தொடர்ந்து அவரிடம் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அதனால் அவருக்கு உங்கள் மருத்துவ வரலாறு, பணிச்சூழல், பொருளாதாரம், பரம்பரை நோய் போன்ற அனைத்தும் அத்துபடியாக இருக்கும்.
நெஞ்சு வலி என்று குடும்ப மருத்துவரிடம் போனால் அவர் குடும்ப பாரம்பரியம், உடல் பருமன், உணவு முறை, முந்தைய நோய் போன்றவற்றை கணக்கிட்டு அது இதய நோய் அல்லது வாய்வுத் தொந்தரவு என்று எளிதாக சொல்லிவிடுவார். இதுவே கார்ப்பரேட் மருத்துவமனைக்குப் போனால் இசிஜி, எக்கோ, டிரெட்மில், ஆஞ்சியோ பரிசோதனைகளுக்குப் பிறகே வாயுத்தொல்லை என்ற முடிவுக்கு வருவார்கள்.
ஆகவே, குடும்ப மருத்துவர் அமைப்புக்குத் திரும்புங்கள். அது உடலுக்கும் பணத்துக்கும் நல்லது. மகிழ்ச்சியுடன் வாழுங்கள்.
