காமராஜர் நினைவலைகள் – 6
வண்ணாரப்பேட்டையில் விருதுநகர் நாடார் உறவின் முறையின் சார்பில், உயர்நிலைப் பள்ளியொன்று தொடங்க மனு போட்டிருந்தார்கள். காமராஜரிடமும் அதுபற்றி தகவல் தெரிவித்தார்கள். அதைப்பற்றி பேச துணை இயக்குனரை அழைத்தார் காமராஜர்.
‘’தனியார் துறையில் உயர்நிலைப்பள்ளி தொடங்க வேண்டும். என்னென்ன செய்தால், அனுமதி கிடைக்கும்?’’ என்று கேள்வி கேட்டார்.
நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை வரிசையாக் கூறினார் அந்த அதிகாரி. அவற்றை கேட்டுவிட்டு, ‘வண்ணாரப் பேட்டையார்கள் இப்போது எத்தனை நிபந்தனைகளை நிறைவேற்றுவார்கள்?’ என்று முதல்வர் கேட்டார்.
’’உயர்நிலைப் பள்ளிக் கூடத்திற்குப் பொருத்தமான புதுக் கட்டடம் தேவை. அதைத் தவிர, மற்ற எல்லாவற்றையும் நிறைவேற்றிவிட்டார்கள். இப்போதைக்கு பெரிய மாடி வீடு வாடகைக்குப் பிடித்துள்ளார்கள். அதில் தொடங்கப் போகிறார்கள். அடுத்த ஆண்டிற்குள் தனியாகக் கட்டடம் கட்டிவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்கள்’’ என்றார்.
’’இப்படிப்பட்ட நிலையில், சாதாரணமாக என்ன செய்வீர்கள்’’
‘‘முதல் மூன்று படிவங்களுக்கு மட்டுமே அனுமதி கொடுப்போம். ஏற்ற கட்டடம் அமைத்த பிறகு நான்கு, அய்ந்து, ஆறு படிவங்களை, அடுத்தடுத்துக் கொடுப்போம்’’ என்றேன்.
’’சரிதான். பள்ளிக்கூட அனுமதியில்லா விட்டால், பொதுப்பணத்தை எடுத்துக் கட்டடம் கட்ட முடியாது. இப்போதைய கல்வித்துறையின் நடைமுறை சரியாகவே இருக்கிறது. இவ்வாண்டு, முதல்மூன்று படிவங்களை மட்டும் அனுமதித்தால் போதும் என்று இயக்குநரிடம் சொல்லிவிடுங்கள்’’ என்றார் காமராஜர்.
’’நீங்கள் விரும்பினால், நான்கு, ஐந்து, ஆறு வகுப்புகளை இவ்வாண்டே கொடுப்பதற்கு ஒப்புக் கொள்வதாக இயக்குநர் சொல்லிவரச் சொன்னார்.’’ என்று அந்த அதிகாரி கூறினார்.
ஆனால் காமராஜர், ‘‘அது சரியில்லை. விதிமுறைகள் சரியாகவே உள்ளன. எனக்கு வேண்டியவர்களே, சட்டத்திற்குக் கட்டுப்படாமல், சலுகைகள் கேட்டால், மற்றவர்களை எப்படிக் கட்டுப்படுத்த முடியும்? இப்போதைக்கு மூன்று வகுப்புகளோடு நிறுத்திக் கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவர்களைக் கூப்பிட்டு, அப்படியே சொல்லிவிடுகிறேன்’ என்று அழுத்தம் திருத்தமாக்க் கூறிவிட்டார்.
அன்று மாலை புதிய உயர்நிலைப் பள்ளிக்கு மனுப் போட்டவர்கள் வந்தார்கள். மூன்று படிவங்கள் மட்டும் அனுமதித்தால் போதும் என்று திருத்திய மனு கொடுத்தார்கள். இவர்தான் காமராஜர்.
- எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்
