சீமான், விஜய்யை சமாளிக்க புதிய இளைஞர் படை.

Image

உதயநிதியின் மெகா புராஜெக்ட்.

பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வில் இன்னமும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்கான ஆலோசனைக் கூட்டமே முடிவுக்கு வரவில்லை. பா.ஜ.க.வில் அடுத்த தலைவர் யார் என்று அடிபுடி சண்டை நடந்துவருகிறது. இந்த நிலையில் சீமான், விஜய் ஆகியோரிடமிருந்து இளையவர்களை கவரும் வகையில் புதிய திட்டத்துடன் களம் இறங்கியிருக்கிறார் உதயநிதி.

சமூகவலைதளத்திலும், மேடை பேச்சிலும் தி.மு.க.வை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசெல்லும் 100 பேரை தேர்வு செய்யும் நடுவர் பணியை கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் ஒப்படைத்திருக்கிறார். இதுகுறித்து அவர் பேசிய பேச்சு சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி நடுவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உதயநிதி, ‘முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டை முன்னிட்டு, `இளைஞர் அணி சார்பாக மாபெரும் பேச்சுப் போட்டியை நடத்த வேண்டும்’ என்று கழகத் தலைவர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள். கழகத்தின் ஒவ்வொரு அணிக்கும் மூன்று பொறுப்புகள் கொடுத்திருந்தார்கள். இளைஞர் அணி சார்பில் மாரத்தான் போட்டிகள் நடத்தவேண்டும் என்பது முதல் பொறுப்பு, அதனால் மாரத்தான் போட்டிகள் நடத்திக் காட்டிவிட்டோம்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் `கலைஞர் நூலகம்’ திறக்க வேண்டும் என்பது அடுத்த கட்டளை. `கலைஞர் நூலகம்’ கிட்டத்தட்ட 65 கலைஞர் நூலகங்களை, தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் தொடங்கி வைத்துவிட்டோம். விரைவில் 100 சதவிகிதம் அந்தப் பணியையும் நாங்கள் நிறைவுசெய்வோம்.

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உங்களுக்குத் தெரியும், மாநாடு, தேர்தல் பணிகள், இல்லந்தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை என தொடர் பணிகள் இருந்ததால் பேச்சுப் போட்டியை நடத்துவதற்குத் தாமதமாகி விட்டது. பொறுமையாகச் செய்தாலும், சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். ஏனென்றால், இது வருங்காலத்துக்கான மிகமிக முக்கியமான பணி. அதனால், இந்தப் பணியை இப்போது தொடங்கி இருக்கிறோம்.

தலைமைக் கழகத்தின் அறிவுரைப்படி, இளைஞர் அணியின் சார்பாக, இந்தப் பேச்சுப் போட்டிகளை வரும் செப்டம்பர் முதல் தொடங்கவிருக்கிறோம். பேச்சுப்போட்டி இளைஞர் அணி நடத்துகிற இந்தப் பேச்சுப் போட்டியின் மூலம் கழகத்தின்மீது பற்றுக்கொண்ட 100 தலைசிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு தலைமை வசம் ஒப்படைக்க வேண்டும். வெறும் 100 பேச்சாளர்கள் தான் என்று சுருக்கிக்கொள்ள வேண்டாம்.

தலைமை சொல்லியிருப்பது 100 பேர் என்றாலும் நமக்கு அதற்கு மேலும் பேச்சாளர்கள் தேவைப்படுகிறார்கள். கலைஞர் நூற்றாண்டில் கழகத்தின் அடுத்தத் தலைமுறை பேச்சாளர்களை அடையாளம் காணவேண்டும் என்பதுதான் இந்தப் போட்டியின் ஒரே நோக்கம். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மாவட்டங்களில் போட்டிகளை நடத்தவிருக்கிறோம். 18 முதல் 35 வயதுக்குட்டபட்ட 17 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இந்தப் பேச்சுப் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளார்கள். அதுவே இந்தப் பேச்சுப் போட்டியின் மிகப்பெரிய வெற்றி.

40 மாவட்டங்களில் போட்டி மொத்தம் 40 மாவட்டங்களில் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. ஒரு நாளில் 10 மாவட்டம் என்று நான்கு நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்ட பேச்சுப் போட்டிகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான தேதிகளை எல்லாம் அன்பகத்திலிருந்து தெரிவித்து, உங்களிடம் முன் அனுமதி பெற்றுக்கொள்வார்கள்.

உங்களில் இருந்து மாவட்டத்திற்கு 2 பேர் என்ற வீதம் நடுவர்களை அனுப்பவுள்ளோம். மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிகளில் முதல் 3 இடம் பிடிப்பவர்களை நீங்கள் தேர்வு செய்யலாம். இதற்காக 10 தலைப்புகளைக் கொடுத்திருக்கிறோம். அதுமட்டுமல்ல, பேச வரும் இளைஞர்கள் சிலர் அடுக்குமொழியில் பேசுவார்கள்; சிலர் எதார்த்த மொழியில் பேசுவார்கள் ; சிலர் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு பேசுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி இருக்கும். அனைத்து வகையான பேச்சாளர்களும் இன்றைய காலகட்டத்தில் நம் திராவிட இயக்கத்திற்குத் தேவைப்படுகிறார்கள்.

எனவே, மாவட்டங்களில் இருந்து மூன்றுபேரை மட்டும்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டாம். நன்றாகப் பேசுபவர்கள் நிறைய எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்களின் திறமைகளின் அடிப்படையில் கூடுதலாகக்கூட தேர்வு செய்யலாம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்பகத்தில் இருந்து உங்களிடம் கலந்துகொண்டு நடுவர்களை எந்தெந்த ஊர்களுக்கு அனுப்புவது போன்ற வேலைகளையெல்லாம் அவர்கள் இறுதி செய்வார்கள். மாவட்டங்களில் நடைபெறும் பேச்சுப் போட்டிகளில் வெற்றிபெற்று வருபவர்களுக்கு மண்டல அளவில் பேச்சுப்போட்டிகள் நடைபெறும். மண்டல அளவிலான பேச்சுப் போட்டிகளை சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு இடங்களில் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

சென்னையில் இறுதிப்போட்டி அந்தப் போட்டிகளில் சிறப்பாகப் பேசுபவர்களுக்கு, மாநில அளவிலான இறுதிப்போட்டியை, சென்னையில் மிகப்பெரிய அளவில் நடத்தலாம் என்று திட்டமிட்டுள்ளோம். சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் முதல் மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு, நாம் அறிவித்திருக்கிற பரிசுத்தொகை வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கக்கூடிய 17 ஆயிரம் பேருக்கும் சான்றிதழ்கள், நினைவுப் பரிசு தர வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறோம். அதோடு நின்று விடக்கூடாது. தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகப் பேசிய 100 பேச்சாளர்களை தலைமைக் கழகத்திடம் ஒப்படைக்க உள்ளோம்.

அந்த 100 பேச்சாளர்கள் கழகத்தின் பேச்சாளர்களாக வளர்த்தெடுக்கப்படுவார்கள். பொதுக்கூட்டங்கள் இதில் தேர்வாகி வரும் பேச்சாளர்களை மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள், நம் அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள், கழக நிகழ்ச்சிகளின் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்கள், தொலைக்காட்சி விவாதங்கள், கழகத்தின் இளைஞர் அணியால் நடத்தப்படும் யூடியூப் போன்றவற்றில், தலைமைக்கழகம் சார்பாகப் பேச வாய்ப்பு வழங்கப்படும். எனவே, இதையெல்லாம் மனதில் வைத்து நீங்கள் பேச்சாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்தப் பேச்சுப்போட்டி தொடர்பாக உங்கள் கருத்துகள், ஆலோசனைகளை அன்பகத்திலேயே நீங்கள் தெரிவிக்கலாம். அவற்றை நிச்சயம் கருத்தில் கொண்டு அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம். பயிற்சிப் பாசறை இளைஞர் அணியின் இந்த மிகப்பெரிய முன்னெடுப்பில் நடுவர்கள் உங்கள் ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் பங்களிப்பும் மிகமிக முக்கியமானது. திராவிட மாடல் பயிற்சிப் பாசறையை தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடத்தி முடித்தோம் என்றால், அதற்குக் காரணம் இங்கு வந்திருக்கக்கூடிய உங்களில் பலபேர் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டியதால்தான். உங்களால் தேர்தெடுக்கப்படுகிற இளம் பேச்சாளர்களும் நாளை உங்களைப்போல சிறந்த பேச்சாளர்களாகவும், உங்களுக்குப் போட்டியாகவும் திராவிட இயக்கத்தைக் காக்கின்ற வீரர்களாக வருவார்கள் என்பதையும் நீங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இது வெறும் நடுவர் பணி மட்டுமல்ல, திராவிட முன்னேற்றக் கழகத்தை, திராவிட இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்ற அரும்பணி என்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் உங்கள் கரமும் இணைந்திருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்குச் சிறந்த பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் உங்களின் பணி சிறக்கட்டும்…’’ என்று பேசியிருக்கிறார்.

சட்டமன்றத் தேர்தலுக்கு தயாகிறார் உதயநிதி. என்ன செய்யப்போகிறது எதிர்க் கட்சிகள்?

Leave a Comment