என்ன செய்தார் சைதை துரைசாமி – 265
சென்னை மேயராக சைதை துரைசாமி இருந்த காலத்தில் தான் மிக அதிக எண்ணிக்கையில் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால், அதுவே உண்மை. அந்த அளவுக்குத் தெளிவாகத் திட்டமிட்டு நிறைய பாலங்களை உருவாக்கிக் காட்டினார். அதோடு சுரங்கப்பாதைகள் அமைப்பதற்கும் திட்டமிட்டார்.
அதன்படி, வில்லிவாக்கம் ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே வாகன சுரங்கப்பாதை, மணியக்கார சத்திர தெரு ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் ரயில்வே சந்திக்கடவில் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனச் சுரங்கப்பாதை போன்றவை திட்டமிட்டு அமைக்கப்பட்டன. இவை எல்லாமே மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
அதேநேரம், மேயர் சைதை துரைசாமி காலத்திலும் சில பாலப்பணிகள் திட்டமிடப்பட்டு, பின்னர் கைவிடப்பட்டன. ஆனால், பாலங்கள் கைவிடப்பட்டதற்கான காரணங்கள் தெளிவாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டன. அன்றைய முதல்வர் மோனோ ரயில் திட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்த காரணத்தால் விருகம்பாக்கம் காளியம்மன் கோயில் தெரு மற்றும் என்.எஸ்.கே. சாலை சந்திப்பில் மேம்பாலம், சாலிகிராமத்தில் ஆற்காடு சாலை மற்றும் கே.கே. நகர் 80 அடி சாலை சந்திப்பில் திட்டமிடப்பட்ட பாலங்கள் அறிவிப்பு கைவிடப்பட்டது.
அதேபோன்று மெட்ரோ ரயில் திட்டம் காரணமாக பாரதி சாலை மற்றும் ராயப்பேட்டை மணிக் கூண்டு சந்திப்பு, ஆதித்தனார் சாலை, பாந்தியன் சாலை மற்றும் டாக்டர் ருக்மணி லட்சுமிபதி சாலை சந்திப்பு மேம்பாலம் போன்றவை கைவிடப்பட்டன. சாலை விரிவாக்கத்தில் சிக்கல் காரணமாக கோட்டூர்புரத்தில் காந்தி மண்டபம் சாலை மற்றும் பொன்னியம்மன் கோயில் சாலை சந்திப்பில் மேம்பாலம் மற்றும் மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே மந்தைவெளி சந்திப்பில் கட்டவிருந்த பாலங்களும் கைவிடப்பட்டன.
அதேபோன்று, மழைநீர் வடிகால் துறை அமைத்ததால் ஜவஹர் நகரில் லோகோ ஸ்கீம் சாலையையும் 70 அடி சாலையையும் இணைத்து பெட்டக வடிவப் பாலம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. போக்குவரத்து காவல் துறையினர் வேண்டுகோளுக்கு இணங்க காமராஜர் சாலை மற்றும் டாக்டர். ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பு, புரசைவாக்கம் நெடுஞ்சாலை கங்காதீஸ்வரர் கோயில் அருகில், மற்றும் கொன்னூர் நெடுஞ்சாலை மற்றும் மேடவாக்கம் டேங்க் சாலை அயனாவரம் சந்திப்புகளில் பாதசாரி சுரங்கப்பாதை பணிகள் அமைப்பது கைவிடப்பட்டது.
- நாளை பார்க்கலாம்.