என்ன செய்தார் சைதை துரைசாமி – 226
சென்னை பெருநகர தெருக்களில் புதிய சாலைகள் போடுவதன் மூலம், இரண்டு பக்க வீடுகளும் பள்ளத்தில் விழுவது மட்டுமின்றி மழைநீர் வடிகால் பிரச்னைகளும் அதிகரிப்பதைத் தடுத்து நிறுத்தும் வகையில் மேயர் சைதை துரைசாமி கொண்டுவந்த புதிய தொழில்நுட்பம் மாபெரும் வரவேற்பு பெற்றது. மில்லிங் இயந்திரம் கொண்டு பழைய சாலையை அகழ்ந்தெடுத்து புதிய சாலை அமைக்கப்பட்டதன் மூலம் ரோட்டின் மட்டம் சீரான அளவில் கடைப்பிடிக்கப்பட்டன. இதனால் லட்சக்கணக்கான குடும்பத்தினர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.
இந்த காலகட்டத்தில் சாலை அமைப்பில் இன்னொரு புதிய நுணுக்கத்தையும் மேயர் சைதை துரைசாமி சென்னை பெருநகர மாநகராட்சியில் அறிமுகம் செய்தார். அதாவது, சாலை போக்குவரத்து அடர்த்திக்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறையை முதன்முறையாகக் கொண்டுவந்தார்.
பொதுவாக சாலைகள் என்றாலே எல்லா இடங்களிலும், எல்லா காலங்களிலும் ஒரே தரத்தில் போடப்படுவதே நடைமுறையாக இருந்தது. அதிக போக்குவரத்து இருக்கும் சாலைகளுக்கும், குறைவான போக்குவரத்து இருக்கும் சாலைகளுக்கும் ஒரே தரத்தில் புதிய சாலைகள் போடப்பட்டன.
இதனால் கடும் நெரிசலில் இருக்கும் சாலைகள் வேகமாக உருக்குலைந்து போயின. இந்த சாலைகள் எல்லாம் வெகுவிரைவில் போக்குவரத்துக்கு கடும் சவாலாக இருந்தன. அதேநேரம், மற்ற சாலைகள் குறைவான சேதத்துடன் இருக்கும். ஆனாலும், இரண்டு சாலைகளிலும் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரி சாலைகள் அமைக்கப்படுவது வழக்கமாக இருந்தன.
இதனை மாற்றுவதற்குத் திட்டமிட்டார் மேயர் சைதை துரைசாமி. அதன்படி, அதிக போக்குவரத்து இருக்கும் சாலைகள் கண்டறியப்பட்டன. அப்படிப்பட்ட சாலைகளில் மட்டும் பிரத்யேகமாக தரம் உயர்த்தப்பட்ட உறுதியான சாலைகள் அமைக்கப்பட்டன. இதன் மூலம் அந்த குறிப்பிட்ட சாலைகளின் ஆயுள் அதிகரித்தது. அதிக சேதமில்லாத சாலைகளில், தேவையான அளவுக்கு மட்டும் சாலைகள் போடப்பட்டன. இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த மேயர் சைதை துரைசாமிக்கு பாராட்டுகள் குவிந்தன.
- நாளை பார்க்கலாம்.