என்ன செய்தார் சைதை துரைசாமி – 473
தணிக்கை துறை தன்னுடைய மேயர் காலத்தில் எந்தவொரு குற்றமும், குறையும் சொல்லிவிடாத வகையில் சிறப்பாகவும் தெளிவாகவும் திட்டங்களுக்கு பணத்தைச் செலவழிக்க வேண்டும் என்பதில் மேயர் சைதை துரைசாமி உறுதியாக இருந்தார். அதனால், அதிகாரிகளுக்குத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அதிக சுதந்திரம் கொடுத்தார், அதேநேரம், அதற்கான பொறுப்புகளையும் அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் உணர்த்தினார்.
அதனால், மாநகராட்சிப் பணிகளில் இழப்பு ஏற்படுத்திய அதிகாரிகள் எவராக இருந்தாலும், அந்த இழப்புக்கான தொகையை ஈடுகட்டினால் மட்டுமே பணியில் இருந்து ஓய்வு பெறமுடியும் என்ற புதிய நடைமுறையை மேயர் சைதை துரைசாமி தன்னுடைய காலத்தில் கொண்டுவந்து அமல்படுத்தினார்.
அதாவது ஒருவர் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார் என்றால், அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே, தன் மீது எவ்விதமான தணிக்கைத் தடையும் இல்லை என்று சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழை ஒப்படைத்தால் மட்டுமே அவருக்கு முறைப்படி பணி ஓய்வு வழங்கப்பட்டு, பணிக்கொடை போன்ற அனைத்து வசதிகளும் பெற இயலும். அந்த சான்று பெற்றுத்தரும் வேலை ஊழியரைச் சார்ந்தது என்றும் அறிவித்தார்.
அதனால் அத்தனை அதிகாரிகளும் அதிர்ந்து நின்றனர். ஏனென்றால், அதுவரை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் சேர்ந்து பல்வேறு முறைகேடுகள் செய்துவந்தனர். அதிகாரிகள் மாட்டிக்கொண்டாலும், அவர்களை காப்பாற்றி வந்தனர். மேயர் சைதை துரைசாமி காலத்தில் காலம் எல்லாமே மாறியது.
மேயர் சைதை துரைசாமி நேர்மையாக இருந்த காரணத்தால், அதிகாரிகளும் நேர்மையாக மட்டுமே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார். தவறு செய்தால் தப்பிக்கமுடியாது என்ற நிலைமை ஏற்பட்டதால், மாநகராட்சியின் அனைத்துத் துறை அதிகாரிகளும், தங்கள் பணியில் கூடுதல் அக்கறையுடன் களப் பணி ஆற்றும் சூழ்நிலை உருவானது.
முன் ஏர் செல்லும் வழியில்தான் பின் ஏர் செல்லும் என்பதுபோல், மேயர் சைதை துரைசாமி காலத்தில் அதிகாரிகள் அனைவருமே தணிக்கைத் துறையினரிடம் இருந்து தணிக்கைத் தடை வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடனே பணியாற்றினார்கள்.
- நாளை பார்க்கலாம்.
