என்ன செய்தார் சைதை துரைசாமி – 203
தொழிலதிபர் எம்.ஏ.எம். ராமசாமியிடம் நேரடியாகப் பேசி ரேஸ்கோர்ஸ் சாலைக்கு இடம் வாங்கி, அந்த சாலையை அகலப்படுத்திவிட்டார் மேயர் சைதை துரைசாமி என்ற செய்தி சென்னை மக்களிடம் வெகுவாகப் பரவியது. இதற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அதேநேரம், அதேபோன்று எங்கள் சாலையை அகலப்படுத்துங்கள் என்றும் நிறைய கோரிக்கைகள் வரத் தொடங்கின.
அசோக் பில்லர் முதல் எம்.ஜி.ஆர். நகர் செல்லும் பிரதான 200 அடி சாலையானது, கோயம்பேடு, நெசப்பாக்கம் வழிகளில், மிகவும் குறுகி 30 அடி சாலையாக இருந்தது. அதனால் இந்தச் சாலையில் செல்லும் மக்கள் மிகப்பெரிய போக்குவரத்து நெருக்கடியால் சிரமப்பட்டார்கள்.
இதுகுறித்து சோ.அய்யர், சுடலைக்கண்ணன் ஐ.ஏ.எஸ். போன்ற முக்கிய அதிகாரிகளும் மேயர் சைதை துரைசாமியிடம் புகார் தெரிவித்தனர். ஏதேனும் ஒரு வழியில் தீர்வு காணவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பல்வேறு நேரங்களில் அந்த பகுதிக்குச் சென்ற மேயர் சைதை துரைசாமி, அங்கு நிலவும் நெரிசலை நேரில் கண்டார். இதற்கு எப்படி தீர்வு காண்பது என்று புரியாமல் அதிகாரிகள் கையைப் பிசைந்தார்கள்.
இந்த பிரச்னைக்கு கண்டிப்பாக ஒரு தீர்வு இருக்கும் என்பதால், அது குறித்து தீவிரமாக ஆய்வுகள் செய்தார். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்பது போன்று ஒரு தீர்வு மேயர் சைதை துரைசாமி கண்ணுக்குத் தென்பட்டது.
அதாவது, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் பம்பிங் ஸ்டேஷன் வழியாக நெசப்பாக்கம் அண்ணா பிரதான சாலையையும், பிள்ளையார் கோவில் தெருவையும், இணைத்து ஓர் இணைப்புச் சாலை அமைத்துவிட்டால், போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று கண்டுபிடித்தார். ஆனால், அதனை நிறைவேற்றுவதற்குத் தான் எத்தனை சிக்கல்கள்..?
- நாளை பார்க்கலாம்.