என்ன செய்தார் சைதை துரைசாமி – அத்தியாயம் 93
மேயர் சைதை துரைசாமியின் முயற்சியால் பெருநகர சென்னை மாநகராட்சியில் முதன்முறையாக கொசுத் தடுப்புப் பணிகளுக்கு 3,200 தொழிலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கொசு அழிப்பதற்கும் கொசு வளராமல் தடுப்பதற்கும் இந்தப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று கொசு ஒழிப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வீட்டைச் சுற்றி கொசுப் புழு வளராத வகையில் மருந்து தெளிக்கப்பட்டன. வீட்டு மாடியில், பின்பக்கத்தில், சந்துகளில், ரோட்டோரங்களில் போடப்பட்டிருந்த உடைந்த மண் பாண்டங்கள், வீணான பிளாஸ்டிக் பொருட்கள், டயர், செடி தொட்டிகளில் தண்ணீர் தேங்குவதைத் தடுப்பதற்குப் பொதுமக்களுக்கு வழி காட்டினார்கள்.
பணியாளர்கள் எளிதில் எடுத்துச்சென்று பயன்படுத்தும் வகையில் கொசு மருந்து அடிக்கும் பிரத்யேக கைத்தெளிப்பான்கள், புகை பரப்பும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு உபயோகத்திற்குக் கொண்டுவரப்பட்டது. வாகனம் மூலம் புகை பரப்பும் இயந்திரங்களும் தீவிரமாக செயல்படத் தொடங்கின.
இந்த நேரத்தில் கொசு மருந்துக்குப் பதிலாக வேப்பெண்ணைய் பயன்படுத்துவது அதிக பயன் தருவது மேயர் சைதை துரைசாமிக்குத் தெரியவந்தது. கொசு மட்டுமின்றி பல்வேறு பூச்சிகளையும் வேப்பெண்ணெய் கட்டுப்படுத்தக் கூடியது. இதனால் மனிதர்களுக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படுத்துவதில்லை. அதோடு கொசு மருந்துக்குச் செலவழிக்கப்படும் தொகையும் குறைந்துவிடும்.
ஆனால், கொசுவுக்கு எதிராக வேப்பெண்ணெய் செயல்திறன் பற்றி போதிய ஆய்வுகள், தரவுகள் இல்லை என்பதால் மாநகராட்சி மூலம் இதனை உடனடியாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவதில் சுணக்கம் ஏற்பட்டது. எனவே, வீடுகள் தோறும் குடும்பத் தலைவிகள், மாணவர்களிடம் கொசு மருந்துக்குப் பதிலாக வேப்பெண்ணெய் பயன்படுத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இந்தத் திட்டம் அடித்தட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
- நாளை பார்க்கலாம்.