மாணவர்களுடன் நாட்டு நலப்பணித் திட்டம்

Image

என்ன செய்தார் சைதை துரைசாமி – 151

மாணவர்களுக்கு கல்வி எத்தனை முக்கியமோ அதே அளவுக்கு நல்ல சிந்தனையும் ஒழுக்கமும் வளர்க்க வேண்டும் என்ற லட்சியம் மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது. எனவே பள்ளியில் மாணவர்களிடம் பேசுகையில், ‘நாடு நமக்கு என்ன செய்தது என்று யோசிக்காமல் நாட்டுக்கு நாம் என்ன செய்தோம்? என்று சிந்திக்க வேண்டும். நாட்டுக்கு நாம் செய்யும் தொண்டு என்பது நமக்கு நாமே செய்துகொள்ளும் தொண்டு. எனவே, சமுதாயத் தொண்டுகளில் மாணவர்கள் ஈடுபடுவதற்கு ஆர்வத்துடன் முன்வர வேண்டும்’ என்று உற்சாகப்படுத்துவார்.

மாநகராட்சிப் பள்ளியில் சாரணர் இயக்கம், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித்திட்டம், செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அனைத்தும் சிறப்பாக செயல்படுவதை மேயர் சைதை துரைசாமியே நேரடியாகக் கண்காணித்தார். அனைத்து மாணவர்களும் ஏதேனும் ஒன்றிலாவது இணைந்து சமூகப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அக்கறை காட்டினார். தன்னுடைய பேச்சு வெறும் ஆலோசனையாக மட்டும் இருக்காது என்பதை மாணவர்களுக்குக் காட்டும் வகையில், மேயர் சைதை துரைசாமியும் சாரணர் இயக்கம், செஞ்சிலுவை சங்கத்தின் பணிகளில் மாணவர்களுடன் இணைந்து செயல்படவும் செய்தார். ஒரு மேயர் மாணவர்களுடன் இணைந்து மக்கள் நல சேவை செய்வதைப் பார்த்த மக்களும் அதிகாரிகளும் ஆச்சர்யமாகிப் பாராட்டினார்கள்.

பள்ளி வளாகம் பசுஞ்சோலையாக இருக்க வேண்டும் என்ற கனவு மேயர் சைதை துரைசாமிக்கு இருந்தது. ஆகவே, பள்ளியில் மரம் வளர்ப்புக்கு மாணவர்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். அதேநேரம், மரம் வளர்ப்பதற்குத் தாங்களாக முன்வரும் மாணவர்களை மட்டும் இந்தப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் அதற்கு அவர்களுடைய பெற்றோர் அனுமதியைப் பெற வேண்டும் என்றும் சில விதிமுறைகளை வகுத்தார். ஏனென்றால், மாணவர்களை சிரமப்படுத்துவதாக யாரும் குற்றம் சுமத்திவிடக் கூடாது என்பதற்காகவே முன்கூட்டியே இப்படியொரு கட்டுப்பாடு வகுத்தார் சைதை துரைசாமி.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே தாங்கள் நட்டுவைத்த மரம் வளர்ந்து பெரிதாவதைக் கண்ட மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். இதைக் கண்டு மற்ற மாணவர்களும் செடிகள், மரங்கள் வளர்ப்பதற்கு ஆர்வத்துடன் முன்வந்தனர். இதையடுத்து மாநகராட்சிப் பள்ளிகள் பசுமையாக மாறின.

  • நாளை பார்க்கலாம்.

Leave a Comment