கொஞ்சம் அழகு கொஞ்சம் நலம்
நகங்கள் லேசான கடினத்தன்மையாகத் தெரிந்தாலும், எளிதில் உடைந்து போகக்கூடியவை. ஆரோக்கியமான நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நகங்களைவைத்து ஆரோக்கியத்தை மதிப்பிடலாம். ஆகவே, கொஞ்சம் அக்கறை எடுத்துக்கொண்டால் நகங்களை அருமையாகப் பராமரிக்கலாம். அதற்கான எளிய டிப்ஸ் இதோ….
* சிலருக்கு, நகங்கள் எளிதில் உடைந்துவிடும் தன்மையோடு காணப்படும். அவர்கள் இரவில் விரல் மற்றும் நகத்தில் சிறிது வெண்ணெய் தடவவும். விரல் நகங்கள் உறுதியாக இருப்பதற்கு வெந்நீரில் எலுமிச்சைச் சாற்றைவிட்டு, கைகளை அமிழ்த்த வேண்டும். இதை, வாரம் இருமுறை செய்தால், நகங்கள் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும்.
* தண்ணீரை மிதமாகச் சூடுபடுத்தி சிறிது உப்பு கலந்து, அதில் விரல்களைச் சிறிது நேரம் வைத்திருந்தால் விரல்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். நகங்கள் அடிக்கடி உடைந்துபோகாமல், கோணலாக வளைந்து வளராமல் நேராக வளர, கால்சியம் சத்துள்ள உணவு வகைகளை உண்ண வேண்டும்.
* பப்பாளிப் பழம் எடுத்து அதில் சிறிதளவை மசித்து கூழாக்கி அதனோடு கஸ்தூரி மஞ்சள் சிறிதளவு கலந்து பூசி, சிறிது நேரத்திற்குப் பின் கழுவினால் நாளடைவில் தோல் நல்ல மிருதுவாகவும் பளபளப்பாகவும் வரும். நகங்களும் நல்ல ஆரோக்கியமாக வளரும்.
* தூங்குவதற்கு முன் கை கால்களுக்கு வேஸ்லின், பெட்ரோலியம் ஜெல்லி, ஆலிவ் எண்ணெய் என்று பூசினால் நகங்கள் நன்கு பலம்பெறும்.
* நகங்களை வெட்டவேண்டுமென்றால் தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினால் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதைத் தவிருங்கள். அத்துடன், நகவெட்டியைக் கொண்டு நகங்களை வெட்டலாம். பிளேடு, கத்தரிக்கோல், கத்தி போன்றவற்றைக் கொண்டு நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* நகம் கடிக்கும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும். இதனால், நகத்தில் உள்ள கிருமிகள் வாய்க்கும், வாயில் உள்ள கிருமிகள் நகத்துக்கும் செல்லும். அதுபோல் நீளமாய் நகம் வளர்ப்பதையும் தவிர்க்க வேண்டும். இது பல காயங்களுக்கு வழிவகுக்கும்.
* தினமும் நகச் சாயம் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே, வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் நகச் சாயம் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. நகப்பூச்சு பயன்படுத்துபவர்கள், அடிக்கடி பாலீஷ் ரிமூவரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். வறண்ட நகம் கொண்டவர்கள் பாலிஷுக்குப் பதிலாக மாய்ச்சுரைசரைப் பயன்படுத்தலாம்.
* பாட்டில் மூடி, டப்பாக்களைத் திறப்பதற்கு நகங்களைப் பயன்படுத்த வேண்டாம். கெமிக்கலைப் பயன்படுத்தும்போது தகுந்த கையுறைகளை அணியவேண்டும். சரியான அளவு ஷூ, செருப்பைப் பயனபடுத்த வேண்டும்.
* நகங்களின் நிறத்திலும் வளர்ச்சியிலும் திடீரென மாற்றம் இருந்தால், உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெறுவது நல்லது