தத்துவ மழை பொழிகிறது.
சினிமாவில் சொல்லப்பட்ட ஒரு சில வசனங்கள் காலத்தைத் தாண்டி நின்று நம்பிக்கை தரும். அதில் ஒன்று நாகேஷ் சொன்ன கவலை தத்துவம்.
கவலை இல்லாத மனிதர்கள் யாருமே இல்லை. பிச்சைக்காரர் தொடங்கி சுந்தர் பிச்சை வரை கவலை இருக்கத்தான் செய்யும். அந்த கவலையை ஒவ்வொரு மனிதரும் எப்படி அணுகுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்கள் வாழ்க்கை அமைகிறது.
பொதுவாக எதிர்பார்ப்புகள் இல்லாத மனிதருக்கு கவலை இருப்பதில்லை. அதாவது, மனிதருக்கு கவலைகளை உருவாக்குவதே எதிர்பார்ப்புகள்தான்.
இந்த உலகில் எல்லோரும் சந்தோஷமாக இருக்கும்போது, எனக்கு மட்டும்தான் கவலையும் துன்பமும் அதிகம் நிகழ்கிறது என்றே பலரும் நினைக்கிறார்கள். தனக்கு மட்டுமே அதிக துன்பம் என்று நினைக்கிறார்கள்.
இப்படி நீங்களும் நினைக்கிறீர்களா..? கவலையை விடுங்கள். உலகில் உள்ள அத்தனை மனிதர்களும் இப்படித்தான் நினைக்கிறார்கள். சந்தோஷமாக இருப்பதாக நீங்கள் நினைக்கும் அத்தனை நபர்களும் ஏதோ ஒரு கவலையுடனே வாழ்கிறார்கள்.
ஆனந்தமாக இருப்பவர்களும் கவலைப்படுவதுண்டு. அதாவது, ‘வாழ்க்கை இறுதி வரையிலும் இதேபோன்று மகிழ்வுடன் நிலைக்க வேண்டுமே’ என்று கவலைப்படுகிறார்கள். துன்பத்தில் இருப்பவர்கள், ‘வாழ்க்கை இப்படியே இருந்துவிடுமோ’ என்று கவலைப்படுகிறார்கள். ஒருசிலர் எனக்கு ஒரு கவலையும் இல்லையே என்றுகூட கவலைப்படுவார்கள்.
கவலை என்பது மேகங்களைப் போன்றது. மேகத்துக்குப் பின் சூரியனோ, நிலவோ பெரும் வெளிச்சத்துடன் இருக்கிறது என்பது உண்மை. காற்றடித்தால் மேகம் விலகிவிடும் என்பதால், மேகத்துக்காக அதிகம் கவலைப்படுவதில் அர்த்தம் இல்லை.
கவலை என்பது நாம் உண்ணும் உணவிற்குச் சமமானது. சில சமயம் உணவில் உப்பு அல்லது காரம் அதிகமாக இருக்கலாம். அதற்காக உணவு சாப்பிடுவதை நாம் கைவிட முடியாது. அவ்வாறே, வாழ்க்கையில் கவலை என்பது வரத்தான் செய்யும், அதனை தாங்கிக்கொள்ளும் அல்லது தாண்டிச்செல்லும் மனப்பக்குவம் வேண்டும்.
கவலையைப் பற்றி நாகேஷ் திரைப்படத்தில் சொல்லும் வசனம் நூற்றுக்கு நூறு உண்மை. கவலை என்பது சிறிய கல்லைப் போன்றது. அதனை கண்ணுக்கு அருகே வைத்து பார்த்தால் ஆகாயத்தையே மறைத்துவிடும். கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்த்தால், அந்த கல் ஆகாயத்தை ஒப்பிடும்போது எத்தனை சிறியது என்பது தெரியும். ஆகவே, கவலையை நாம் மனதிற்குள் போட்டு சுமந்துகொண்டே இருக்கத் தேவையில்லை.
கவலைப்படுவதால் எதுவும் மாறிவிடப் போவதில்லை. குடும்பத் தலைவன் இறந்துவிட்டாரே என்று கவலைப்படுவதால், அவர் திரும்பிவரப் போவதில்லை. அதேபோன்று நடக்காத ஒன்றுக்காக கவலைப்படுவதிலும் அர்த்தம் இல்லை. விபத்து நடக்குமோ, தொழில் நஷ்டம் அடைந்துவிடுமோ, தேர்வில் தோல்வி கிடைக்குமோ என்றெல்லாம் நடக்காத விஷயங்களுக்கு கவலைப்படுவதிலும் அர்த்தமே இல்லை என்ற உண்மை புரிய வேண்டும்.
தகுதிக்கு மீறி ஆசைப்படுவதும், சாத்தியமற்றவைகளை அடைய முற்படுவதும் கவலைக்கான முக்கிய காரணிகள். ஆகவே, கிடைக்காத ஒன்றுக்காக கவலைப்படுவதில் அர்த்தமே இல்லை.
நாகேஷின் தத்துவம் என்று தொடங்கிவிட்டு, அவரது இன்னொரு தத்துவத்தை சொல்லாமல் போக முடியாது.
நியாயமாக உங்களுக்கு வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது உங்களுக்கு எப்படி இருக்கும் என்று நாகேஷிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர், “நான் கவலையே படமாட்டேன் சார். ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம் கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.
கட்டடம் முடிந்து,கிரஹப் பிரவேசத்தன்று கட்டடம் கட்டுவதற்கு எது முக்கிய காரணமாக இருந்ததோ, அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால், எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள். அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா?
அந்த வாழை மரம் மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே போய்ச் சேரும். எங்கோ மூலையில் மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை. அடுத்த கட்டடம் கட்டுவதற்கு ஏணியாக தயார் நிலையில் என்றைக்கும் சிரித்துக் கொண்டேயிருக்கும்.!.
நான் வாழை அல்ல…! சவுக்குமரம்…!” என்று கூறினாராம்.
சிரிப்பதற்கு மட்டுமல்ல, கவலையை மறக்கவும் நாகேஷ் போதும்.
கவலை வரும் நேரத்தில் உங்களுக்கு நெருக்கமான நட்பு, உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுங்கள். கவலைகளைப் பகிர்ந்துகொண்டால், நிச்சயம் சுமை குறையும். பகிரப்படாத கவலை மன அழுத்தத்தை உருவாக்கிவிடும்.
அடுத்தது, எந்த ஒரு கவலைக்கும் முடிவு உண்டு என்று நம்புங்கள். சாவி இல்லாமல் பூட்டுகள் தயாரிக்கப்படுவதில்லை என்ற நம்பிக்கையுடன் கவலையை அணுகுங்கள். கவலை காணாமல் போய்விடும்.