சமையலறையில் கொலைகார மேரி

மருத்துவ விசித்திரம்

டைபாய்டு மேரி – மனிதர்கள் கண்ணில் ஆரோக்கியமாகத் தெரிந்த பெண், ஆனால் அமைதியாக மரணத்தை பரப்பியவர். இவரது வாழ்க்கை எல்லோருக்கும் தேவையான எச்சரிக்கை.

அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணான மேரி மாலன் டீன் ஏஜ் வயதில், 1884 ஆம் ஆண்டு வாக்கில் புதிய கனவுகளுடன் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார். நியூயார்க்கில் இருந்த பணக்கார வீடுகளில் சமையல்காரியாக வேலை செய்யும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கின்றது.

அவரது சமையல் ரொம்ப சுவையாக இருக்க, மிக குறுகிய காலத்திலேயே அவரது புகழ் நகரம் முழுவதும் பரவுகின்றது. ஆனால் அவரது சுவையான சமையலுக்கு பின்னால் மிகப் பெரிய ஆபத்து ஒளிந்து இருந்தது யாருக்கும் தெரியாது.

மேரி தோற்றத்தில் மிகவும் ஆரோக்கியமாக இருந்தார். கன்னங்கள் சிவப்பாக, நடை துடிப்பாக இருந்தது. அவர் ஒருபோதும் காய்ச்சலால் படுக்கையில் விழுந்ததில்லை. ஆனால் அவரது உடலில் ஒரு கொடிய ரகசியம் மறைந்திருந்தது. அவரது பித்தப்பையில் சால்மோனெல்லா டைஃபி (Salmonella typhoid) என்ற பாக்டீரியா மறைந்து வாழ்ந்து, அமைதியாக இனப்பெருக்கம் செய்துவந்தது.

மேரிக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை – தலைவலி இல்லை, வயிற்றுப்போக்கு இல்லை. அவரது உடல் நோய் எதிர்ப்பு சக்தி அறிகுறிகளை தடுத்தது, ஆனால் பாக்டீரியாவை முழுமையாக அழிக்க முடியவில்லை. மேரி கழிவறைக்குச் செல்லும்போது, அந்த பாக்டீரியா மலத்துடன் வெளியே வந்தது. அவர் கைகளை அடிக்கடி சோப்பு போட்டு பழக்கம் இல்லாத காரணத்தால் அவர் சமைத்த உணவுப் பொருட்கள் மூலம் மற்றவர்களுக்குப் பரவியது.

1906ஆம் ஆண்டு, டாக்டர் ஜார்ஜ் சோப்பர் நகரத்தில் நிகழ்கின்ற ஒரு விசித்திரமான டைஃபாய்டு பரவலை ஆராய்ந்தார். டைஃபாய்டு பொதுவாக ஏழைகளைத்தான் தாக்கும், ஆனால் இம்முறை பணக்காரர்களிடையே பரவியது. டாக்டர் சோப்பர் ஒரு பயங்கரமான வடிவத்தை கண்டுபிடித்தார்: மேரி வேலை செய்த 8 வீடுகளில் 7 இடங்களில் அவரது வருகைக்குப் பிறகு டைஃபாய்டு பரவியது. அதில் 3 பேர் இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.

மாமரோனெக்கில், மேரி வேலைக்கு சேர்ந்த இரண்டு வாரங்களிலேயே வீட்டார் அனைவரும் காய்ச்சலால் விழுந்தனர். மன்ஹாட்டனில் ஒரு வேலைக்காரி இறந்தார். ஓய்ஸ்டர் பேயில் 11 பேரில் 6 பேர் நோய்வாய்ப்பட்டனர். இதே வடிவம் திரும்பத் திரும்ப நிகழ்ந்தது: மேரி வருகை – நோய் பரவல் – சில இறப்புகள். டாக்டர் ஜார்ஜ் சோப்பர், ஆயுதமில்லாத துப்பறிவாளர் போன்று மேரியை தொடர்ந்து உண்மையை  கண்டுபிடித்தார்.

நியூயார்க்கில் டைஃபாய்டு வழக்குகளின் வரைபடத்தில் மேரியின் பெயர் பல முகவரிகளில் திரும்பத் திரும்ப வந்தது.

டாக்டர் சோப்பர்: “மேரி, உங்கள் மல மாதிரியை சோதனைக்கு தர வேண்டும்.”

மேரி: “என்ன?! நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்! நீங்கள் என்னை நோயாளி என்று குற்றம் சாட்டுகிறீர்களா?!”

டாக்டர் சோப்பர்: “இது முக்கியம். பல உயிர்கள் ஆபத்தில் உள்ளன.”

மேரி: (இறைச்சி வெட்டும் கத்தியை எடுத்து) “வெளியே போ! எதுவும் தரமாட்டேன்!”

மேரி பிடிவாதமாக மறுத்தார். “நான் நோய் தாங்கி இல்லை! இது அரசாங்கத்தின் அவதூறு!” என்றார்.

பின்னர் போலீஸ் மற்றும் செவிலியர் உதவியுடன் அவரிடமிருந்து மல மாதிரி எடுக்கப்பட்டது. ஆய்வக சோதனையில் அவரது பித்தப்பையில் சால்மோனெல்லா டைஃபி நிறைந்திருப்பது உறுதியானது. இங்குதான் மேரியின் ரகசியம் வெளிப்பட்டது.மேரி ஒரு அறிகுறியற்ற நோய் தாங்கி. அவரது நோய் எதிர்ப்பு சக்தி காய்ச்சலை தடுக்கின்றது, ஆனால் பாக்டீரியாவை அழிக்கவில்லை. அது பித்தப்பையில் மறைந்து, தினமும் மலத்துடன் வெளியே வந்தது.

கைகளை சரியாக கழுவாததால், பாக்டீரியா உணவுக்கு பரவி அதன் மூலம் மக்களுக்கு பரவியிருக்கிறது. மேரி நோய்வாய்ப்படவில்லை, ஆனால் அவரது சமையல் பல மரணத்தை கொண்டு வந்திருக்கின்றது.

கடைசியில், மேரி குற்றவாளியாக்கப்பட்டு, நார்த் பிரதர் தீவில் தனிமைப்படுத்தப்பட்டார். 1910இல், சமையல் வேலை செய்யக்கூடாது, சுகாதாரத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.

ஆனால் சமையல் ஆர்வம் வலுவாக இருந்ததால், பெயர் மாற்றி மீண்டும் சமையல் வேலைக்குச் சென்றார். 1915இல் ஸ்லோன் மகப்பேறு மருத்துவமனையில் மறைமுகமாக சமையல் செய்தார். அதனால் 25 பேர் தொற்றுக்கு ஆளாகினர், 2 இறப்புகள் நிகழ்ந்தன. மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டு, 23 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்டு வாழ்ந்தார்.

இறுதியாக, மேரி வாழ்நாள் முழுவதும் ஒரு தீவில் தனிமையில் கழித்தார். 1938இல் நுரையீரல் அழற்சியால் இறந்தார். பிரேத பரிசோதனையில், அவரது உடலில் பாக்டீரியா இன்னும் உயிருடன் இருந்தது உறுதியானது. மேரி ஒருபோதும் உண்மையான சுதந்திரத்தை அடையவில்லை.

ஹோட்டல் ஜாக்கிரதை

மேரியின் விஷயத்தில் இருந்து தெரியவருவது இதுதான். பொதுவாக உணவு கையாளுபவர்களுக்கு கட்டாய டைஃபாய்டு தடுப்பூசி அவசியம். உணவைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பிட்டு கழுவுதல். சமையலறை சுகாதாரத்தை பேணுதல் முக்கியம்.

ஏனெனில் ஒரு சிறு அலட்சியம் வாடிக்கையாளரை மட்டுமல்ல, வீட்டில் காத்திருக்கும் குழந்தை, கணவன், மனைவி, வயதான பெற்றோரைக்கூட பாதிக்கலாம். ஒரு துளி கிருமி உயிரைப் பறிக்கலாம், ஆனால் ஒரு சிறு முயற்சி சுகாதாரத்தில் பல உயிர்களை காப்பாற்றலாம்.

எனவே, உணவு துறையில் இருப்பவர்கள் டைஃபாய்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். கைகளை கழுவுங்கள். சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். வெளியே உணவகங்களுக்கு செல்கையில், முறையான கழிப்பறை வசதி மற்றும் கைகளை சுத்தம் செய்து கொள்கின்ற வசதியுள்ள உணவகங்களுக்கு மட்டுமே சென்று உணவு அருந்துங்கள்.

காரணம் உணவகத்தில் பணிபுரியவர்களுக்கு முறையான கழிப்பிட வசதி இல்லை என்றால் அதன் மூலம் நமக்கு டைபாய்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என்பதனை ஆய்வுகள் காட்டுகின்றன. நம்முடைய குடும்பத்தின் மீதான அன்பை, பாதுகாப்பான உணவிலிருந்து தொடங்குவோம்.

Leave a Comment