என்ன செய்தார் சைதை துரைசாமி – 443
வரலாறு காணாத மழையினால் பாதிக்கப்பட்ட பெருநகர சென்னையில் 2015ம் ஆண்டு மேற்கொண்ட நடவடிக்கைகளை மாமன்றக் கூட்டத்தில் பேசினார் மேயர் சைதை துரைசாமி.
அந்த உரையில், ‘’சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை மூன்று ஷிப்டுகளில் பணியாளர்களை நியமித்து 24 மணி நேரமும் பாலங்கள் கண்காணிக்கப்பட வேண்டுமென்று மேற்பார்வை பொறியாளர் (பாலங்கள்) அறிவுறுத்தப்பட்டார். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் பொதுமக்களுக்கு சங்கடம் இல்லாமல் இருக்க மழைநீரை உடனுக்குடன் அகற்றுவதற்கு மோட்டார் பம்ப் செட்டுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்வாய் துறை பேருந்து சாலைகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் வேகமாக வடிந்து செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தற்போது சென்னை மாநகராட்சி வசம் உள்ள இயந்திரங்களைப் பயன்படுத்தி மழைநீர் வடிகால்வாய்களை சுத்தப்படுத்தவும் சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் (சிறப்புத் திட்டங்கள் மற்றும் மழைநீர் கால்வாய்) அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தல்களின்படி பணிகள் மேற்கொள்ளப்படுவது மாநகராட்சி உயர் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டது.
மழைக் காலத்தில் ஏற்படும் பழுதுகள் மற்றும் பெறப்படும் தகவல்களுக்கேற்ப உடனுக்குடன் சரிசெய்ய 24 மணி நேரமும் இயங்கும் பணியாளர் குழுவை ஏற்படுத்துதல், வெள்ளத்தின்போது பாதிக்கப்படும் பகுதிகளில் மின்சாரத்தை உடனடியாகத் துண்டிக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
தெருவிளக்குகள், மின்கம்பங்கள் மற்றும் கேபிள்களில் மின் கசிவு ஏற்படாமல் இருப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டது. சென்னை மாநகராட்சியினுடைய உணவு தயார் செய்யும் மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
தண்ணீர் வெகுவாக தேங்கி அணுக முடியாத நிலை ஏற்பட்டால், புளூ கிராஸ் மற்றும் விமானம் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்க இந்திய வானூர்திப்படை, முன்னாள் ராணுவத்தினர் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் ஆகியோர் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது…’’என்று தொடர்ந்து பேசினார்.
- நாளை பார்க்கலாம்.
