10 நிமிட இசை சவால்
சின்னக் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு பால் கொடுப்பது அல்லது விளையாட்டு காட்டுவது பெற்றோரின் வழக்கம்.
இவர்களில் வித்தியாசமாகத் திகழ்ந்தவர் ஷல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட்.
மொசார்ட்டின் தந்தை மிகச்சிறந்த வயலின் மேதை. அவருக்கு ஏழாவது குழந்தையாக 1756-ம் ஆண்டு பிறந்த மொசார்ட், இசை அமைக்கும் சத்தத்தைக் கேட்டால் அழுகையை நிறுத்திவிடுவார்.
இசைக்கும் மொசார்ட்டுக்கும் இருந்த அழுத்தமான பிணைப்பு அவரது தந்தையை ஆச்சர்யப்படுத்தியது. எனவே, மூன்று வயதில் இசைக்கருவியை மீட்டுவதற்குக் கற்றுக் கொடுத்தார். மொசார்ட்டில் ஆற்றல் இயல்பான குழந்தைகளிடமிருந்து வித்தியாசமாக இருந்தது.
நான்கு வயதில் இசை நூல்களை கற்கத் தொடங்கினார். ஐந்து வயதில் தாமே பாடல்களை இயற்றி இசை மீட்கத் தொடங்கினார். ஏழு வயதில் ‘சொனாட்டக்களை எழுதவும் எட்டு வயதில் சிம்பனிக்களை எழுதவும் செய்தார். மொசார்ட்டுக்கு முன்பும், பின்பும் எந்த இசை மேதையும், இந்தச் சிகரங்களை இத்துணை சிறிய வயதில் செய்து காட்டியதாக வரலாறில்லை.
பத்து வயது மரியாவையும் ஆறு வயது மொசார்ட்டையும் அழைத்துக்கொண்டு ஆஸ்திரியாவில் உள்ள பெரிய மனிதர்களின் வீடுகளுக்குச் சென்றார். இசை நிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினார். ‘அடடா, அபாரமான குழந்தைகள், பிரமாதமான இசை. நீ கொடுத்து வைத்தவன் லியோபோல்ட். அது சரி, அந்த வாண்டின் பெயர் என்ன? எத்தனை துள்ளலோடு இசைக்கிறான் என்று பாராட்டுகள் குவிந்தன.
இதனால் உற்சாகமடைந்த அப்பா பாரிஸ், லண்டன், சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளுக்குத் தன் குழந்தைகளை அழைத்துச் சென்றார். அரசர்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று அனைவரும் மொசார்ட்டின் திறமையைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். உன் வயது ஆறுதானா மொசார்ட் என்று திரும்பத் திரும்பக் கேட்டுத் திகைத்துப் போனார்கள்.
இது ஏதோ வித்தை என்று நினைத்த சிலர், மொசார்ட்டை மட்டும் தனி அறைக்கு அழைத்துச் சென்று வாசிக்கச் சொன்னார்கள். இன்னும் சில இசை வல்லுநர்கள் மொசார்ட்டுக்குத் தேர்வு வைத்துப் பார்த்தார்கள்.
ஒருமுறை ரோமில் உள்ள வாடிகன் நகருக்குச் சென்றபோது, மயக்க வைக்கும் இசைக் கோவையைக் கேட்டான் மொசார்ட். அதை உடனே கற்றுக்கொள்ள வேண்டும் என்று மொசார்ட்டின் மனம் துடித்தது. இது போப்பின் பிரத்தியேகமான இசை. உன்னைப் போன்ற பொடியனுக்கு எல்லாம் கற்றுத்தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.
சரி என்று வீட்டுக்கு வந்த மொசார்ட், ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து மளமளவென்று தான் காலையில் கேட்ட இசைக் கோவையின் நொட்டேஷனை எழுதி முடித்தான். மறுநாள் போப் முன்னிலையில் மொசார்ட் அதை வாசித்துக் காட்டியபோது அவர் அதிர்ந்துவிட்டார். போப்பிடம் இருந்து தங்கப் பதக்கத்தை வாங்கினான்.
எந்த நேரமும் இசை, எந்த இடத்தில் இசை என்று உழைத்தார். ஓயாத ஆராய்ச்சி, ஓய்வில்லாத இசை நிகழ்ச்சி, புதிய புதிய இசை வடிவங்ளைக் கண்டுபிடித்தல் என இசைக்காகவே மொசார்ட் வாழ்ந்தார்.
1781ம் ஆண்டு கான்ஸ்டன்ஸ் என்ற பெண்ணை மணந்தார். இந்தத் திருமணம் தான் மொசார்ட்டின் வாழ்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது.
உலக இசைக் கலைஞனை உதாசீனப்படுத்தும் வகையில் பிடிவாத குணம் கொண்ட பெண்ணாக இருந்தார். இசையை நேசித்த மொசார்ட் அவருடன் மல்லுக்கட்ட முடியாமல் நோயில் விழுந்தார். போதிய கவனிப்பு இல்லாத காரணத்தால் 1791ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி இசை உலக மேதை என்று உலகமெல்லாம் பேசப்பட்ட மொசார்ட் மரணத்தைத் தழுவினார்.
தமத இசை ஞானத்தால் உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த மொசார்ட்டின் இறுதி யாத்திரை மிகவும் மோசமான முறையில் நடந்தேறியது. இன்று உலகமெங்கும் அறியப்படும் அவரது இசை மேதமையை தெரிந்தவர்கள் கூட, அவர் மரணத்தை மதிக்கவில்லை என்பதே வரலாற்று ஆச்சர்யம்.
மொசார்ட் சொன்னாட்டா இசையை எந்த ஒரு மனிதரும் 10 நிமிடங்கள் தொடர்ந்து கேட்டால், அவர் மனநிலை மிகப்பெரும் மாற்றம் அடையும் என்பது மொசார்ட் விளைவாக கருதப்படுகிறது. இந்த ஆய்வு நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த சவாலை எந்த ஒரு மனிதரும் வென்றதில்லை என்கிறார்கள்.
