- சமூகவலைதள விமர்சனத்துக்கு ஒரு தாய் தற்கொலை
சமூக வலைதளத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தாலும், அதன் முழு
உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் சட்டென ஏதேனும் ஒரு கருத்தை பதிவு செய்துவிட்டு நகர்ந்துவிடுகிறார்கள்.
இப்படிப்பட்ட கருத்து கந்தசாமிகளால் ஒரு தாய் தற்கொலை செய்திருப்பது கடும் வேதனையை
ஏற்படுத்தியிருக்கிறது.
கோவை மாவட்டம், காரமடை பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா. இவரது கணவர்
வெங்கடேஷ். ஐ.டி ஊழியர்களான இந்தத் தம்பதி சென்னை திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள
அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 4 வயது
மற்றும் 7 மாதத்தில் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் 7 மாதக் கைக் குழந்தை பால்கனியில் இருந்து தவறி விழுந்த
சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அருகில் இருந்தவர்கள் குழந்தையை மீட்டுக் கொடுத்த
வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு
கருத்துகள் பகிரப்பட்டன.
அதில் தாய் ரம்யாவின் பொறுப்பற்ற தன்மையை நிறைய பேர் விமர்சனம்
செய்து கருத்து கூறியிருந்தனர். இந்த கருத்துகள் தாய் ரம்யாவுக்கு மிகுந்த மனஉளைச்சலை
ஏற்படுத்தியிருக்கிறது. மன அழுத்தம் தாங்கமுடியாமல் சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் மனம் மாற்றம் அடைவதற்காக காரமடையில் உள்ள பெற்றோர்
வீட்டுக்கு ரம்யா சென்றுள்ளார். அவரது பெற்றோர் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். அவர்கள்
மீண்டும் வீடு திரும்பியபோது, ரம்யா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த
காரமடை போலீஸ், ரம்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு
அனுப்பிவைத்தனர்.
சிறிய உயிரின் காப்பாற்றிய சம்பவம் சமூகவலைதளத்தில் வெளியாகி,
பெரிய உயிரை பறித்துள்ளது.
ரம்யா எப்படி குழந்தையை கவனித்து வந்தார், அங்கு என்ன நடந்தது,
அந்த சம்பவத்தினால் அவர் எத்தனை வேதனை அடைந்திருப்பார் என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல்
சிலர் எழுதிய விமர்சனம் இத்தனை கொடிய முடிவு கொடுத்துவிட்டது.
அடுத்தவர் வாழ்க்கையில் கருத்து சொல்லாதீங்க ப்ளீஸ்.