எச்சரிக்கிறார் டாக்டர் ஜெ.பாஸ்கரன்
கொரோனாவின் பீதியிலிருந்தே இன்னும் விலகாத மக்கள், அடுத்து கொசுக்கடி ஆளாகிவருகின்றனர். மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னரே, கொசுக்கள் உற்பத்தியாகி மக்களின் தூக்கத்தைத் தொலைத்துவருகிறது. கொசுக்கடியால் வரும் பிரச்னைகள் குறித்து பிரபல தோல் மருத்துவர் ஜெ.பாஸ்கரனிடம் பேசினோம்.
கொசுக்கடியினால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்?
நம் ஊரைப் பொறுத்தவரை கொசுக்கடி என்பது பொதுவானது. சுற்றுப்புறங்களில் தேங்கியிருக்கும் தண்ணீர் மற்றும் பிற குப்பைகளால் சென்னை மட்டுமின்றி பிற இடங்களிலும் கொசு தொல்லை அதிகமாகவே இருக்கிறது. சென்னையின் சில இடங்களில் கால்நடை வளர்ப்பு, கழிவுப் பொருட்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றாததால் கொசு அதிகளவில் உற்பத்தியாகிறது. கொசுக் கடியினால் கண்டிப்பாக அலர்ஜி வரும். கொசுக் கடியினால் வரும் அலர்ஜியை இன்பைட் பை அலர்ஜி என்று கூறுவார்கள். கொசு கடிக்கும்போது அரிப்பு ஏற்படும். அதனால் சொறியும்போது புண் அல்லது கொப்புளம் ஏற்படும். சிவப்பு நிறத்தில் தடிமன் போன்று காணப்படும் அது, கொஞ்ச நாள் இருக்கும். பின்னர் மறைந்துவிடும். எல்லோருக்குமே பொதுவாக கொசுக்கடி அலர்ஜி வரும். இந்த கொசுக்கடி அலர்ஜி என்பது குழந்தைகளுக்கு ஒரு மாதிரியாகவும், பெரியவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் வரும். குழந்தைகளுக்கு வரும் கொசுக்கடி அலர்ஜியை, பாப்புலாரிட்டி கேரியர் என்று சொல்வார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு கொசு கடித்தால்கூட, உடலில் எல்லா இடங்களிலும் பரு அல்லது தடிப்பு போன்று வந்துவிடும். அந்த இடத்தில் கறுப்பு நிறத்தில் கொப்புளங்கள் தோன்றும். அதனால், குழந்தைகளின் நகம் பட்டு கீறல் உண்டாகி பாக்டீரியா தொற்றுக்கு வழிவகுக்கும். இதில் ஓர் அதிசயமான விஷயம் என்னவென்றால், இரண்டு வயது குழந்தைகளுக்கு கொசுக்கடி அவ்வளவாக வராது. ஏனெனில், அவர்களுடைய நோய் எதிர்ப்புச் சக்தி டெவலப் ஆகியிருக்காது. தடிப்பு மட்டுமே வரும். அதுவும், பின்பு சரியாகிவிடும். ஆனால், இரண்டு வயதுக்குப் பிறகு, ஒன்பது வயது வரை குழந்தையின் உடலில் எங்கு கொசு கடித்தாலும் அலர்ஜி வரும். முக்கியமாக, குழந்தைகளுடைய உடலில் ஆடை மறைக்காத பகுதிகள், அதாவது முழங்காலுக்குக் கீழ், முழங்கைக்குக் கீழ் கொசுக்கடி அலர்ஜி வரும். அதேநேரத்தில் கை மற்றும் காலின் உள்பக்கம், வெயில் படாத இடங்களில் கொசுக்கடி அலர்ஜி வராது. எல்லாவற்றையும் கொசுக்கடி அலர்ஜி என்று சொல்லிவிட முடியாது. கொசுக்கடி அலர்ஜிபோலவே வேறு சில அலர்ஜிகளும் இருக்கின்றன. அது, கொசுக்கடி அலர்ஜிதான் என்று கண்டுபிடித்துவிட்டால் அதற்கான சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொசுக்கடி அலர்ஜியிலிருந்து பெரியர்வர்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பது எப்படி?
குழந்தைகளுக்கு வருவதைப்போன்றுதான் பெரியவர்களுக்கும் கொசுக்கடி அலர்ஜி வரும். அதேநேரத்தில், பெரியவர்களுக்கு சிறுவயதில் வந்ததுபோன்று கொசுக்கடி அலர்ஜி வராது. கொசுக்கடி அலர்ஜி உள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆஸ்துமா, ட்ஸ்ட் அலர்ஜி என மரபு அணு சார்ந்த அலர்ஜி இருக்கலாம். அவர்களைப் போன்றவர்களுக்குத்தான் ஒரு கொசு கடித்தாலும் உடலில் எங்கும் அலர்ஜி வந்துவிடும். மற்றவர்களுக்கு எல்லாம் ஒரு கொசு கடித்தால் அரிப்பு மட்டும்தான் ஏற்படும். அதைச் சொறிந்தபின் அதுவும் மறைந்துவிடும். இதற்கு முதலுதவி சிகிச்சை என்பது கொசு வராமல் பார்த்துக்கொள்வதே ஆகும். சிலர், இது நமட்டுச் சிரங்கு என நினைத்துக்கொண்டு இதற்குச் சிகிச்சையளிப்பார்கள். ஆனால், நமட்டுச் சிரங்கு என்பது உடல் முழுவதும் இருக்கும். ஆனால், கொசுக்கடி அலர்ஜி என்பது அதுபோல் இருக்காது. உடல் முழுவதும் வராது.
கொசுக்கடியிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், குழந்தைகளை கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்வதே சிறந்தது. குழந்தையைச் சுற்றி கொசுவலை கட்டலாம் அல்லது கொசு வலை போன்ற கூடை வைக்கலாம். தவிர, வீட்டைச் சுற்றி கொசு உற்பத்தியாகாத அளவுக்கு குப்பைகளை அகற்றலாம். பாதுகாப்பான கொசு விரட்டிகளை பயன்படுத்தலாம். ஆனால், கூடியவரைக்கும் அதிக வாசனையில்லாத, புகையில்லாத கொசுவர்த்திகளைப் பயன்படுத்த வேண்டும். புகை வரக்கூடிய கொசுவர்த்திகளைப் பயன்படுத்தும்போது, அதுவே பிற்காலத்தில் ஆஸ்துமா உள்ளிட்ட நோய்கள் வர வாய்ப்பிருக்கிறது. அதுபோல், வீட்டில் இருக்கும்போது குழந்தைகளுக்கு முழுக்கை உடை அணிந்து பாதுகாக்கலாம். கால்களில் சாக்ஸ் அணிவிக்கலாம். அதேநேரத்தில், குழந்தைகளுக்கு கொசு கடிக்காமல் தடுக்கக்கூடிய மருந்துகளை உடலில் உபயோகப்படுத்தக் கூடாது. ஏனெனில், குழந்தைகளுக்கு புண் இருந்தால், அந்த கிரீமே அலர்ஜியை உண்டாக்கிவிடும். இதற்கு மேலும் கொசுக்கடியினால் அலர்ஜி வந்துவிட்டால், தோல் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறவேண்டியது அவசியம்.