• Home
  • பணம்
  • பணம் மிச்சப்படுத்தும் ஷாப்பிங்

பணம் மிச்சப்படுத்தும் ஷாப்பிங்

Image

பணமே மந்திரம்

எல்லோருடைய வீடுகளிலும் ஸ்டோர் ரூம் அல்லது பரண் நிரம்பி பிதுங்கி வழிவது வழக்கம். அங்கே இருக்கும் பொருட்களை வருடம் ஒரு முறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்கவேண்டிய சூழல் உருவாகலாம். அதற்காக அத்தனை பொருட்களை அடக்கி வைத்திருப்பார்கள். அப்படி தேடும் பொருள் பெரும்பாலும் கிடைக்காது. எனவே, கொஞ்சநேரம் தேடிவிட்டு அந்த பொருள் இல்லாமலே சமாளித்து விடுவார்கள். அதேநேரம், தேவையில்லாத பொருட்களை வெளியே தூக்கி எறியவும் மனம் வராது.

நிறைய பேர் இப்படி தேவையில்லாத பொருட்களை வாங்கிக் குவிக்கிறார்கள். எப்போதாவது தேவைப்படும் என்ற எண்ணத்தில் பார்க்கும் இடத்தில், கிடைக்கும் நேரத்தில் வாங்கிக் குவிப்பார்கள், இப்படி தேவை இல்லாத பொருட்களை எல்லாம் வாங்குவதை தூண்டில் செலவுகள் எனப்படும் Impulsive Purchase என்று கூறுவார்கள்.

பொதுவாக வீட்டுக்கு வாங்கும் எல்லாமே அத்தியாவசியச் செலவு என்பதாகத் தோன்றும். ஆனால், அது உண்மை இல்லை. எனவே, ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் சில விதிமுறைகளை கடைப்பிடித்தால் போதும், தேவையற்ற பொருட்கள் வாங்குவதை நிறுத்திவிடலாம்.  

பார்த்தவுடன் வாங்காதீங்க.

பொருட்காட்சி, மார்க்கெட் போன்ற இடங்களுக்குச் செல்கையில் முதல் கடையில் பார்த்த பொருள் மனதை இழுக்கலாம். உடனே அதை வாங்க வேண்டும் என்று துடிக்காதீர்கள். ஒட்டுமொத்தமாக சுற்றிப் பாருங்கள். மற்ற கடைகளில் அதைவிட தரமான பொருள், அதை விட வித்தியாசமான பொருள் கிடைக்கலாம். ஒரு சில நேரத்தில் அந்த பொருள் வீண் என்பதும் தெரியவரலாம்.  எனவே, பார்த்தவுடன் ஒரு பொருள் வாங்கும் எண்ணத்தைக் கைவிட்டாலே தேவையில்லாத பொருட்கள் வாங்கிக் குவிப்பதைத் தவிர்க்கலாம். பணமும் பாதுகாக்கப்படும்.

பணமா… பொருளா..?

தேவைப்பட்டாலும் படலாம் என்று வாங்கப்படும் பொருளுக்குரிய பணத்தை தனியே சேமித்து வைத்தால் நல்லதா அல்லது அந்த பொருளை வாங்குவது நல்லதா என்று பார்க்க வேண்டும். உதாரணத்துக்கு பெண் மாசமாக இருக்கும் நேரத்தில் பிள்ளைக்குத் தொட்டில் வாங்கி வைப்பது அவசியம் இல்லை. அதற்கு என பணத்தை தனியே முதலீடு செய்துவைத்தால், தேவைப்படும் நேரம் இப்போது வாங்குவதைவிட சிறந்த பொருளை குறைந்த விலைக்கு வாங்க முடியலாம். ஒரு வேளை இந்த பொருள் இனி கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற சூழலில் மட்டும் உடனே வாங்கிப் போடலாம். நிச்சயம் தேவைப்படும் என்றால் மட்டுமே தூளி வாங்க வேண்டும். ஏனெறால் பெரும்பாலும் அம்மாக்கள் குழந்தையை தன் அருகில் போட்டு படுத்துக்கொள்ளவே விரும்புவார்கள். ஆசைக்கு வாங்கிப்போட்ட தூளி வீணாகவே போய்விடலாம்.

பசி, கோபத்தில் போகாதீங்க

வயிற்றில் பசி அல்லது மனதில் கோபம் இருக்கையில் ஷாப்பிங் போவதில்லை என்ற முடிவை எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பசியைப் போக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கண்ணில் தென்படுவதை எல்லாம் வாங்கிப் போடுவார்கள். அதேபோல் கோபத்தில் இருக்கையில் விலை பார்க்கத் தோன்றுவதில்லை. இந்த காலகட்டத்திலே தேவையில்லாத பொருட்கள் வாங்கிக் குவிப்பதாக சொல்லப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தினாலே வீண் செலவைக் குறைத்துவிடலாம். அதேபோல் என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பட்டியல் எழுதிக்கொண்டே போக வேண்டும். அவற்றில் இல்லாத பொருட்கள் மீது கவனம் செலுத்தாதீர்கள். அப்படி ஒரு பொருளும் வாங்காமல் திரும்பிவிட்டால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக்கொள்ளுங்கள்.

ஒரு மாதம் கெடு; 

ஏதேனும் ஒரு விலை உயர்ந்த அதேநேரம் எப்போதாவது மட்டுமே பயன்படும் பொருள் வாங்கவேண்டும் என்ற சூழல் ஏற்படுகிறது என்றால், அந்த பொருள் வாங்கும் எண்ணத்தை, ஒரு மாதம் த்ள்ளிப் போடுங்கள். அந்த ஒரு மாதத்தில், அந்தப் பொருள் நிஜமாக எத்தனை முறை தேவைப்பட்டது என்பதைக் குறித்து வையுங்கள். ஒரு மாதம் கழிந்த பின்னரும், அந்தப் பொருள் உங்களுக்குத் தேவை என்பது உறுதியாகத் தெர்ந்தால் மட்டும் வாங்கலாம். இல்லையெனில் அந்த பொருள் இல்லாமலே காலம் தள்ளலாம்.

மூன்று மாதம் கெடு ; 

புதிய டிவி மாற்றுவது, புதிய சோபா மாற்றுவது போன்ற சூழல் உருவானால் மூன்று மாதங்கள் கெடு விதித்துக்கொள்ளுங்கள். மூன்று மாதங்கள் கழிந்த பின்னரும் குறிப்பிட்ட புதிய பொருள் வாங்கவேண்டும் என்று விரும்பினால் உடனடியாக வாங்குங்கள். பொதுவாக இந்த காலகட்டத்தில் சில பொருட்கள் தேவையே இல்லை என்பது புரிந்துவிடும். அவசியம், கட்டாயம் தேவைப்படும் என்றால் மட்டும் வாங்குங்கள்.  

விண்டோ ஷாப்பிங்

பொழுதுபோக வேண்டும் என்பதற்காக மால் அல்லது பெரிய சூப்பர் மார்க்கெட்டிற்குச் சென்று பொழுதுபோக்குவதற்கு நிறைய பேர் செல்வதுண்டு. அங்கே போகும் நேரத்தில் எதுவும் வாங்கக்கூடாது என்ற எண்ணத்தில் செல்வார்கள்.  ஆனால், அங்கே தள்ளுபடி, புதிய வரவு போன்றவைகளைப் பார்க்கும்போது தூண்டில் போடுவது போன்று இழுத்துவிடும். தேவைப்படாததையும் வாங்கிக் குவிக்கும் சிக்கல் இங்குதான் அதிகம் உருவாகிறது.

தள்ளுபடி என்பது உண்மை இல்லை

ஒரு சில கடைகளில் தள்ளுபடி என்று போட்டு கவர்ச்சிகரமாக விளம்பரம் செய்வார்கள். செய்கூலி, சேதாரம் இல்லை என்றெல்லாம் சொல்லி தூண்டில் வீசுவார்கள். பொதுவாக நீண்ட காலம் விற்பனையாகாமல் கிடக்கும் பொருட்களுக்கு அதிக கழிவு கொடுப்பார்கள். இப்படிப்பட்ட கடைகளுக்கு மறந்தும் எட்டிப்பார்க்காதீர்கள். ஏனென்றால் 2 ஆயிரம் ரூபாய் விலையுள்ள சுடிதார் 600 ரூபாய் என்று போட்டிருப்பார்கள். அதை உண்மை என்று வாங்குவீர்கள். வேறு ஒரு கடையில் அதே பொருளை 550 ரூபாய்க்கு வாங்க முடியலாம். எனவே ஆடித் தள்ளுபடி, ஆண்டு தள்ளுபடி, ஸ்டாக் கிளியரன்ஸ் போன்ற தள்ளுபடி விற்பனை நாட்களில் காது கேளாதவர் போன்றே இருந்துகொள்ளுங்கள்.

தேடுவதற்குச் செல்லுங்கள்

ஏதேனும் ஒரு பொருள் வாக்குவதற்கு அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இணையதளங்களுக்குச் செல்வது தவறு இல்லை. ஆனால் நிறைய பேர் அந்த தளங்களுக்குச் சென்று எந்த பொருள் புதிதாக வந்திருக்கிறது, எது விலை குறையாக இருக்கிறது என்றெல்லாம் தேடுகிறார்கள். இதனாலே தேவை இல்லாத பொருட்களை எல்லாம் வாங்கும் சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள். எனவே, தேவை என்றால் மட்டுமே இந்த தளங்களுக்குச் செல்லலாம், மற்ற நேரங்களில் கண்ணில் பட்டாலும் கண்டுகொள்ளாமல் நகருங்கள்.

இன் அண்ட் அவுட்

ஆங்கிலத்தில் one in, one out, என்று ஒரு விதி உண்டு. இதன் அர்த்தம் ஒரு பொருள் உள்ளே வந்தால், ஒரு பொருள் வெளியே போக வேண்டும். அதாவது ஒரு பொருள் வாங்க ஆசைப்பட்டால், அதற்கு இணையாக ஒரு பொருளை வெளியே கழிக்க வேண்டியது முக்கியம். இப்படி ஒரு சூழல் வரும்போது புதிய பொருள் தேவையா என்ற கேள்வி பலமாக வரும். அதாவது வீட்டில் இருக்கும் மிக்ஸியை வெளியே போட்டுவிட்டே புது மிக்ஸி வாங்க வேண்டும். இப்படி செய்தால் கடைசி வரையிலும் பொருளை பயன்படுத்தும் எண்ணம் வந்துவிடும். தேவை இல்லாமல் பொருள் வாங்கும் ஆசை குறைந்துவிடும்.

முதலீட்டு விதி;

ஒரு பொருளை வாங்குவதற்கு பதிலாக, அந்தப் பணத்தை முதலீடு செய்தால் எவ்வளவு பயன் கிடைக்கும் என்று கணக்கு போட்டுப் பார்க்க வேண்டும். அதாவது பிராண்டிங் சட்டை 3 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குவதாக வைத்துக்கொள்வோம். அந்த சட்டையை மாதத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் போடுவீர்கள். அதற்குப் பதிலாக அந்த பணத்தை வங்கியில் போட்டு வைத்தால் ஓர் ஆண்டுக்கு எவ்வளவு பணம் கிடைக்கும் என்று கணக்கிட்டுப் பார்க்கலாம். இந்த வட்டி தொகையை ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் என்று கணக்கு போடாமல் ஐந்து ஆண்டு என்று கணக்கு பார்த்தால், அந்த பணத்தின் மதிப்பு தெரியவரலாம். இதன் மூலம் செலவைக் குறைக்க முடியும்.

பின்விளைவுகள்

ஒரு கார் இருக்கும் போது இன்னொரு கார் வாங்குவது ஆசையாக இருக்கலாம். ஆனால், அதனால் எழும் பின்விளைவுகளை எண்ணிப் பார்த்தால் அது வாங்குவது அவசியமா என்று தோன்றும். ஏனென்றால் புதிதாக ஒரு கார் வாங்கினால் அதை நிறுத்த இடம் தேவைப்படும். தினமும் துடைப்பதற்கு செலவாகும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சர்வீஸ் செய்து செலவு செய்ய வேண்டியிருக்கும். புது டிரைவர் தேவைப்படும். இப்படியெல்லாம் பின்விளைவுகளை யோசித்தால் இரண்டாவது கார் வாங்குவது அவசியம் இல்லை என்றே தோன்றிவிடும்.

இத்தனை விதிகளையும் ஒரு விளையாட்டு போன்று செய்து பாருங்கள். அவசியமற்ற பொருட்களை வாங்காமல் தவிர்த்துவிட முடியும்.

Leave a Comment