பணம் ஆசைகளை பூர்த்தி செய்வதில்லை, தேவைகளை அதிகப்படுத்துகிறது.  

மந்திரச்சொல்

பணம் என்பது அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றது. வாழ்க்கைக்கு அவசியமான ஒரு கருவி. உணவு, உடை, வீடு, கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்கு பணமே பிரதானம். ஆனால், மனிதரின் மனம் ஒருபோதும் பணத்தைக் கொண்டு திருப்தி அடைவதில்லை. பணம் சேரச் சேர புதிய வடிவங்களில் தேவைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன.

முதன்முறையாக வாங்கும் டூ வீலர் ஒருவருக்கு அளவில்லா மகிழ்ச்சி அடைகிறார். ஆனால், சில மாதங்களில் அதே வாகனம் சாதாரணமாகத் தோன்றுகிறது. பின்னர் கார் வாங்குவதற்கு ஆசைப்படுகிறார். கார் வாங்கியதும், அதைவிட லக்சரி காருக்கு ஆசைப்படுகிறார். இப்படி மகிழ்ச்சியின் அளவு நிலையாக இல்லாமல், ஆசையின் அளவு தொடர்ந்து உயர்கிறது.

இதனால் ஒரு காலத்தில் ஆடம்பரமாகத் தோன்றிய பொருள், கிடைத்த சில நாட்களில் சாதாரணத் தேவையாக மாறிவிடுகிறது. அதனால், போதும் என்ற எண்ணம் ஒருபோதும் முடிவுக்கு வருவதில்லை.

ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடம் வருமானம் அதிகரிக்கும்போது, சேமிப்பும் முதலீடும் அதிகரிப்பதில்லை. அதற்குப் பதிலாக புதிய செலவுகள் அதிகரிக்கின்றன. அதிக வாடகைக்கு வீடு, புதிய வாகனம், பிராண்டட் ஆடைகள், மொபைல், சுற்றுப்பயணங்கள் என செலவுகளை அதிகரிப்பதால் வருமானம் அதிகரித்தாலும் பணத் தேவையும் பெரிதாகிறது.

சிறந்த பண மேலாண்மை என்பது அதிகம் சம்பாதிப்பதில் மட்டும் இல்லை; எது உண்மையான தேவை, எது வெறும் ஆசை என்பதைப் பிரித்து அறிவதில் இருக்கிறது. தேவைக்காக செலவிடுபவர் செல்வந்தராக மாறுகிறார்; ஆசைக்காக செலவிடுபவர் எவ்வளவு சம்பாதித்தாலும் பற்றாக்குறையில் வாழ்கிறார்.

பணத்தால் எல்லாவற்றையும் வாங்கமுடியும் என்பது உண்மை. ஆனால், போதும் என்ற மனநிலையை ஒருபோதும் பணத்தால் வாங்கித் தர முடியாது. அந்த மனநிறைவு வேண்டுமெனில், ஆசைகளுக்கு எல்லை நிர்ணயிக்கும் மனப்பக்குவம் தேவை.

பணம் நல்லது. அளவான ஆசை, சரியான செலவுகள், கண்டிப்பான சேமிப்பு பழகம் உடையவர்களுக்கு பணம் ரொம்பவே நல்லது.

  • எஸ்.கே.முருகன், மனவள ஆலோசகர்

Leave a Comment